சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

காஞ்சியில் கிடைத்த மகிழ்ச்சி!

காஞ்சியில் கிடைத்த மகிழ்ச்சி!

காஞ்சியில் கிடைத்த மகிழ்ச்சி!

க்தி விகடனும் உலக சமுதாய சேவா சங்கமும் இணைந்து நடத்தும் மனவளக் கலை மற்றும் யோகா பயிற்சி முகாம், காஞ்சிபுரத்தில், மே 1-ஆம் தேதி நடைபெற்றது. முகாமில் சென்னை, வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இருந்தும், ஆர்வமும் உற்சாகமும் பொங்கக் கலந்துகொண்டனர் வாசகர்கள்.

##~##
''இந்த மாதிரி பயிற்சியில் சேரணும்னு ரொம்ப நாளா ஆசை.  சக்தி விகடன் மூலமா இப்ப எனக்கு இது நிறைவேறியிருக்கு'' எனத் தெரிவித்த 64 வயது இளைஞர் ஆறுமுகம், வந்தவாசியில் இருந்து வந்திருந்தார்.

''வேலைப் பளு, வயதாகிக்கொண்டே இருப்பதால் உண்டான தளர்ச்சி... இதுக்கெல்லாம் இதுபோன்ற பயிற்சிகள் ரொம்ப அவசியம். வாசகர்கள் தங்கள் ஆரோக்கியத்தையும் மனப் பக்குவத்தையும் மேம்படுத்திக்கணும்னு சக்தி விகடன் துவங்கியிருக்கிற இந்த முயற்சி, வாசகர்களுக்கு புதுச் சக்தியைக் கொடுக்கப்போறது உறுதி!'' என உணர்ச்சிவசப்பட்டார் பழனி. காஞ்சிபுரம் கலெக்டரின் உதவியாளர் இவர்.

''இதோ... அறிவுத் திருக்கோயிலுக்குப் பக்கத்துலதான் எங்க வீடு இருக்கு. ஒவ்வொரு முறை இதைக் கடந்து போகும்போதும், 'நமக்கும் வயசாகிட்டிருக்கு. இங்கே கொடுக்கற பயிற்சியைக் கத்துக்கணும்’னு நினைப்பேன். ஆனா, எதனாலேயோ அப்படியே விட்டுட்டேன். இப்ப நடக்கற முகாமுக்கு நான் வந்ததுக்குக் காரணமே, சக்தி விகடன்தான். பயிற்சிகள் எல்லாமே சுவாரஸ்யமாவும் செய்யறதுக்குச் சுலபமாவும் இருக்கு'' என சர்டிஃபிகேட் கொடுத்தார் வாசகி அஞ்சனாதேவி.

காஞ்சியில் கிடைத்த மகிழ்ச்சி!

''சென்னைல நடந்த முகாம்ல கலந்துக்கிட்ட எங்க அண்ணன், 'அருமையா இருந்துச்சு பயிற்சிகள்’னு சொன்னார். உடனே  காஞ்சி புரம் முகாம்ல பேரைப் பதிவு பண்ணிட்டேன். இப்படியரு பயிற்சியை எங்களுக்குக் கொடுத்ததுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலை'' என நெகிழ்ந்து போனார், சென்னை வாசகர் சுவாமிநாதன்.

''எங்க மாமியார் உலக சமுதாய சேவா சங்கத்துல வாலன்ட்டியரா (தன்னார்வத் தொண்டரா) இருக்காங்க. மனவளக் கலை பயிற்சி எடுத்துக்கறதுக்கு ரொம்ப நாளாவே கூப்பிட்டுக்கிட்டு இருந்தாங்க. சக்தி விகடன் வாசகியான நான், முகாம் பற்றின அறிவிப்பைப் பார்த்ததுமே 'இதுல கலந்துக்கப்போறேன்’னு அத்தைகிட்ட சொன்னேன். 'விகடன் தாத்தா மகிமையே மகிமை!’னு சொல்லி என்னைக் கூட்டிட்டு வந்தாங்க!'' என்று சிரிப்பும் மகிழ்ச்சியுமாகச் சொன்னார் வாசகி சங்கீதா.

மொத்தத்தில்... வந்திருந்த வாசகர்களின் முகத்தில் மகிழ்ச்சியும் பூரிப்பும். பயிற்சியில் கிடைத்த

உற்சாகம் அது!

- வி.ராம்ஜி
படங்கள்: ச.இரா.ஸ்ரீதர்

காஞ்சியில் கிடைத்த மகிழ்ச்சி!