சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

விசாகத்தில் வழிபட்டால்... 16 சாபங்களும் நீங்கும்!

வை'காசி’ப் புண்ணியம்...

விசாகத்தில் வழிபட்டால்... 16 சாபங்களும் நீங்கும்!
##~##
ட்சியும் அதிகாரமும் இருந்தென்ன... அள்ளியெடுத்துக் கொஞ்சுவதற்கும், ஆட்சிக் கட்டிலில் நாளை வாரிசாக அமர்வதற்கும் நமக்கொரு குழந்தைச் செல்வம் இல்லையே..!’ என்பதுதான் தஞ்சை தேசத்தை ஆட்சி செய்த பிரதாபசிம்ம ராஜாவின் பெருங்கவலை.

அன்னதானம் செய்தார்; வைணவ சம்பிரதாயத்தில் திளைத்த மன்னர், திருமாலுக்கு ஆலயங்கள் பலவும் கட்டிக் கும்பாபிஷேங்கள் நடத்தினார். ஆறு- குளங்கள் வெட்டினார். ஆனாலும் என்ன... 'பிள்ளை பாக்கியம் இன்னும் தகையலையே...’ என வருந்தினாள் மகாராணி யமுனாம்பாள்.  

மன்னரின் கவலை, மந்திரிமார்களையும் தொற்றிக் கொண்டது. மிகுந்த சிவபக்தரான அமைச்சர் ஒருவர், ஈஸ்வரனுக்குக் கோயில் எழுப்பினால், சந்தான பாக்கியம் கிடைக்கும் எனத் தெரிவித்தார். சரியென்று சம்மதித்த மன்னர், 'எங்கே கோயில் எழுப்புவது?’ என அமைச்சரிடமே கேட்டார். 'காசியில் இருந்து முனிவர் ஒருவர் வந்திருக்கிறார். அவரிடமே கேட்டு, அவரின் ஆசியுடனும் அருளுடனும் கோயில் கட்டுவோம்’ என்றார் அமைச்சர்.

விசாகத்தில் வழிபட்டால்... 16 சாபங்களும் நீங்கும்!

அதன்படி, அந்தக் காசி முனிவரைச் சந்தித்து, நமஸ்கரித்து, ஆசீர்வாதம் பெற்ற மன்னர், அவர் சுட்டிக்காட்டிய இடத்திலேயே சிவாலயத்தை பிரமாண்டமாக அமைத்தார். முனிவரின் யோசனைப்படியே, ஸ்வாமிக்கு ஸ்ரீகாசி விஸ்வநாதர் என்றும், அம்பிகைக்கு ஸ்ரீவிசாலாட்சி என்றும் திருநாமம் சூட்டி, கும்பாபிஷேகத்தைக் கோலாகலமாக நடத்தினார். இதில் மகிழ்ந்த முனிவர், 'காசிக்கு நிகரான தலத்தை எழுப்பிய உனக்கு, காசிக்குச் சென்றால் கிடைக்கக்கூடிய அத்தனைப் பலன்களும் கிடைக்கட்டும்!’ என அருளினார். அதன்படி, மன்னருக்கு குழந்தைச் செல்வம் கிடைத்தது என்கிறது ஸ்தல வரலாறு.

விசாகத்தில் வழிபட்டால்... 16 சாபங்களும் நீங்கும்!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ளது நீடாமங்கலம். இந்த ஊரின் மையப்பகுதியில் கோயில் கொண்டு அனைவருக்கும் அருள்பாலிக்கிறார் ஸ்ரீகாசிவிஸ்வநாதர். அருகில், திருமாலுக்கும் ஆலயம் இருப்பது சிறப்பு எனப் போற்றுகின்றனர், பக்தர்கள். வருடந்தோறும் இங்கே விழாக்களும் விசேஷங்களும் உண்டு எனினும், வைகாசி மாதத்தில் பிரம்மோற்ஸவம் விமரிசையாக நடந்தேறுமாம்.

பத்து நாள் விழாவாக நடைபெறும் பிரம்மோற்ஸவ விழா, தினமும் ஒவ்வொரு வாகனத்தில் ஸ்வாமியும் அம்பாளும் திருவீதியுலா, சிறப்பு அபிஷேகம், விசேஷ அலங்காரம் என அமர்க்களப்படுமாம் ஆலயம். நிறைவில், தீர்த்தவாரியின் போது சுற்றுவட்டார ஊர்க்காரர்கள் அனைவரும் ஒன்று திரண்டிருப்பார்கள், நீடாமங்கலம் சிவாலயத்தில்.

காசிக்கு நிகரான இந்தத் தலத்துக்கு வந்து பிரார்த்தித்தால், பித்ரு தோஷங்கள் முதலான சகல தோஷங்களும் விலகும்; திருமணம் மற்றும் பிள்ளை பாக்கியம் கிடைக்கப் பெறுவர்.  

வைகாசியை, ரிஷப மாதம் என்பர். அதாவது, ஈசனுக்கு உரிய மாதங்களில் இதுவும் ஒன்று. எனவே வைகாசி பிரம்மோற்ஸவ விழாவில், (ஜூன் 4 முதல் 13-ஆம் தேதி வரை) இங்கு வந்து வணங்கினால், 16 வகையான சாபங்களும் நீங்கி வாழலாம் என்கின்றனர் பக்தர்கள்.

- இ.லோகேஸ்வரி
  படங்கள்: ந.வசந்தகுமார்