சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

வைகாசி பிரம்மோற்சவமும் 23 கருட சேவையும்..!

வைகாசி பிரம்மோற்சவமும் 23 கருட சேவையும்..!

வைகாசி பிரம்மோற்சவமும் 23 கருட சேவையும்..!
##~##
ழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட,  திவ்ய தேசங்களுள் ஒன்று; 'தடம்பருகு கருமுகிலைத் தஞ்சைக் கோயில்’ என திருமங்கை ஆழ்வார் பாடிப் போற்றிய திருத்தலம்; 'தஞ்சை மாமணிக் கோயில்’ எனச் சிறப்புடன் அழைக்கப்படும் ஆலயம் எனப் பெருமைகள் பல கொண்ட தலத்தில், அழகு ததும்பக் காட்சி தருகிறார் ஸ்ரீநீலமேகப் பெருமாள். தாயாரின் திருநாமம்- ஸ்ரீசெங்கமலவல்லித் தாயார். சோழ வளநாட்டின் காவிரிக் கரையில் உள்ள அற்புதமான தலம் இது!

தஞ்சகன், தண்டகன், தாரகன் ஆகிய அரக்கர்களின் அட்டூழியத்தால் கலங்கிப்போன மக்களுக்காக, திருமாலை நினைத்துத் தவமிருந்தார் பராசர முனிவர். அவருக்குக் காட்சி தந்த ஸ்ரீமந் நாராயணர், அரக்கர்களை அழித்தார். தஞ்சகாசுரனை அழிக்க ஸ்ரீநரசிம்மராக வந்து அழித்த தலம், தஞ்சை ஆளிநகர் ஸ்ரீவீரநரசிம்ம பெருமாள் கோயில். தண்டகாசுரனை வராக மூர்த்தமாக வந்து அழித்த தலம், தஞ்சை மாமணிக் கோயிலான ஸ்ரீநீலமேகப் பெருமாள் திருக்கோயில். அருகிலேயே ஸ்ரீமணிகுன்றப் பெருமாள் கோயிலும் உள்ளது! அருகருகே அமைந்துள்ள இந்த மூன்று ஆலயங்களையும் சேர்த்து, ஒரே திவ்விய க்ஷேத்திரமாகப் போற்றுகின்றனர். பராசர முனிவருக்குக் காட்சி தந்ததுடன், மார்க்கண்டேய முனிவருக்கும் தரிசனம் தந்த அற்புதத் தலம் இது!

வைகாசி பிரம்மோற்சவமும் 23 கருட சேவையும்..!
வைகாசி பிரம்மோற்சவமும் 23 கருட சேவையும்..!

தஞ்சாவூரில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ள பள்ளி அக்ரஹாரம் அருகில் அமைந்துள்ளது ஆலயம். இங்கே ஸ்ரீநீலமேகப் பெருமாள் மட்டுமின்றி, ஸ்ரீவராக பெருமாளையும், ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மரையும் தரிசிக்கலாம். இங்கே நடைபெறும் வைகாசி பிரம்மோற்ஸவத்தின் போது, தஞ்சை மாவட்ட மக்கள் ஒன்று திரள்வார்களாம். வைகாசியின் பூச நட்சத்திர நாளில், ஜூன் 5-ஆம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்குகிற பிரம்மோற்ஸவ விழா, 13-ஆம் தேதி வம்புலாஞ்சோலை அமிர்த புஷ்கரணியில், தீர்த்தவாரியுடன் நிறைவுறுகிறது.

அதேபோல், பிரம்மோற்ஸவம் முடிந்த ஒரே வாரத்தில் (ஜூன் 19-ஆம் தேதி), இங்கே கருடசேவை சிறப்புற நடைபெறுகிறது. அப்போது, அருகில் உள்ள ஸ்ரீகோதண்டராமர், ஸ்ரீகல்யாண வேங்கடேச பெருமாள், கரந்தை ஸ்ரீகிருஷ்ணர், வேலூர் ஸ்ரீவரதராஜர், படித்துறை ஸ்ரீவெங்கடேச பெருமாள், தெற்குவீதி கலியுக வெங்கடேச பெருமாள்... உள்ளிட்ட 23 ஆலயங்களின் பெருமாளும் கருடசேவையில் காட்சி தரும் அழகே அழகு! ஆரம்பத்தில் 12 கருடசேவை (துவாதஸ கருடசேவை) நிகழ்ந்ததாம். பின்னாளில் 23 கருடசேவையாக வளர்ந்து, இன்னும் பல கோயில்களும் சேர்ந்ததாகச் சொல்வர். வாழ்வில் ஒருமுறையேனும் கருடசேவையைத் தரிசித்தால், பாவங்கள் நீங்கி, புண்ணியம் பெருகும்; சகல ஐஸ்வரியங்களும் கிட்டும் என்பது ஐதீகம்! கருடசேவைக்கு மறுநாள் விமரிசையாக நடைபெறும் வெண்ணெய்த்தாழி உற்ஸவமும் இங்கே பிரசித்தம்!

- இரா.மங்கையர்க்கரசி
         படங்கள்: ந.வசந்தகுமார்