குமரதாரா நதிக் கரையில்...


##~## |
ஒருநாள், குழந்தைகளுடன் அதிதி விளையாடிக் கொண்டிருக்க, அங்கு வந்து சேர்ந்தார் ஆஷிதா முனிவர். விளையாட்டில் ஆர்வமாக இருந்த அதிதி, முனிவரை கவனிக்கவில்லை. தன்னை முறைப்படி வரவேற்று உபசரிக்கவில்லையே என்ற கோபத்தில், ராட்சஸியாகும்படி அதிதியைச் சபித்துவிட்டார் முனிவர்.
ஆனாலும், அவரது சாபம் ஒருவகையில் வரமாகவே முடிந்தது அதிதிக்கு. ஆமாம்... அப்படியரு சாபம் கிடைத்திருக்காவிட்டால், மிக அற்புதமான அந்த க்ஷேத்திரத்தை அவள் வாழ்நாளில் தரிசித்திருக்கவே மாட்டாள்! குமரதாரா நதியில் நீராடும் பாக்கியமும், அதன் கரையில் கோயில் கொண்டிருக்கும் குமரக் கடவுளை வழிபடும் வரமும் அவளுக்குக் கிடைத்திருக்காது!
ஆமாம்... சாபத்தை எண்ணி கலங்கிய அதிதி, தனது தவற்றுக்கு வருந்தி ஆஷிதா முனிவரிடம் மன்னிப்பு வேண்டியதுடன், சாபவிமோசனம் அருளும்படி கேட்டாள். அவரும், ''பிஷிடாஷினி எனும் பெயரில் ராட்சஸியாகத் திரியப்போகும் நீ, தமாசுரன் என்ற ராட்சஸனை மணப்பாய். ஸ்ரீமகாவிஷ்ணுவையே எதிர்க்கத் துணிவான் தமாசுரன். விஷ்ணுவும் மத்ஸய (மீன்) அவதாரம் எடுத்து அவனை வதைப்பார். அதன்பிறகு, காடு காடாக அலைந்து குமரதாரா நதிதீரத்தை அடைந்து, அந்தப் புண்ணிய நதியில் நீராடி, அங்கு உறைந்திருக்கும் குமரக் கடவுளை வழிபடும்போது உனது சாபம் விலகும்'' என்று அருளிச் சென்றார். அதன்படியே அனைத்தும் நிகழ்ந்தன. ராட்சஸியாக காடுமேடெல்லாம் சுற்றித் திரிந்தவள், குமரதாரா நதிக்கரையை அடைந்து, நதியில் நீராடி ஸ்ரீசுப்ரமணியரை வழிபட்டுச் சாபவிமோசனம் அடைந்தாள்.

அதன் பிறகு, 'பல்வேறு தலங்களில் சுற்றித் திரிந்தும் கிட்டாத மன அமைதி ஸ்ரீசுப்ரமண்யா தலத்தில் கிடைத்தது எப்படி?’ என்று கணவர் காச்யபரிடம் கேட்டாளாம் அதிதி. அவரும் நான்கு யுகங்களிலும் ஸ்ரீசுப்ரமண்யா தலத்தில் நிகழ்ந்த அற்புதங்களை மிக விரிவாக அவளுக்கு எடுத்துரைத்தாராம்.
அதிதி அருள்பெற்ற ஸ்ரீசுப்ரமண்யா எனும் அற்புதமான அந்தத் திருத்தலம் எங்கிருக்கிறது தெரியுமா?
கர்நாடக மாநிலம், சுள்ளியா மாவட்டத்தில், மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில், தாரா நதிக்கரையில் அழகுற அமைந்திருக்கிறது. மங்களூரிலிருந்து 112 கி.மீ. தூரம்; தர்மஸ்தலாவிலிருந்து சுமார் 90 கி.மீ.
இதை, குக்கே சுப்ரமண்யா கோயில் என்று அழைக்கிறார்கள் பக்தர்கள். சம்ஸ்கிருத மொழியில் குக்ஷி என்றால் குகை என்று அர்த்தம். இந்த வார்த்தையே நாளடைவில் குக்கே என்றானதாம். யாத்ரீகர்கள் தங்குவதற்கான தங்குமிடங்களும் இங்கு ஏராளம் உண்டு.
தாரகாசுரன், சூரபதுமன் மற்றும் பல தீயவர்களை வதைத்த பிறகு, தன்னுடைய சக்தி ஆயுதத்தில் படிந்திருந்த ரத்தக் கறையைக் கழுவுவதற்காகத் தாரா நதி தீரத்துக்கு வந்தாராம் குமரக் கடவுள். இதனால் இந்த நதிக்கு குமரதாரா எனும் பெயர் வந்ததாகச் சொல்கிறார்கள்.
அசுர வதம் முடிந்தபின், அண்ணன் ஸ்ரீகணேசர், வீரபாகு ஆகியோரை அழைத்துக்கொண்டு குமர பர்வதத்தின் உச்சியில் போய்த் தங்கினாராம் முருகப்பெருமான் (மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான குமார பர்வதம், கடல் மட்டத்திலிருந்து சுமார் 4000 அடி உயரம். இதில் ஏற விரும்புபவர்களுக்கு வழிகாட்ட நிறைய கைடுகள் இருக்கிறார்கள்). அவர்களை வரவேற்று உபசரித்த இந்திரன், தன் பெண் தேவசேனாவை மணக்கும்படி முருகனிடம் வேண்டினானாம். அதன்படியே, ஒரு சுபமுகூர்த்தத் திருநாளில், குமரதாரா நதிக்கரையில் முருகக் கடவுளுக்கும் தேவசேனாவுக்கும் திருமணம் நடந்தேறியது என்பர். எப்போதும் முருகப்பெருமானுடன் இருக்கவேண்டும் எனும் விருப்பம் கொண்டு கடுந்தவம் இருந்த வாசுகி பாம்புக்கு அருள் கிடைத்ததும் இந்தத் தலத்தில்தான்.
ஆக... ஸ்ரீதேவசேனா, வாசுகி நாகம் ஆகியோருடன் குமரக் கடவுளும் இந்தக் கோயிலில் குடிகொண்டு, பக்தர்களது வேண்டுதல்களைக் குறைவின்றி நிறைவேற்றி அருள்கிறார். பக்தர்களும் கூட்டம்கூட்டமாக வந்து குமரனின் திருவருளைப் பெற்றுச் செல்கின்றனர். குமரனுக்குத் திருமணம் நிகழ்ந்த மார்கழி மாதத்தின் முதல் பாதியில், இங்கு ரத உற்ஸவம் மற்றும் சிறப்பு பூஜைகள் கோலாகலமாக நடைபெறுகின்றன.

8-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோயில் இது. கிழக்கு வாசல் வழியாக நுழைந்தால், ஸ்ரீசுப்ரமண்ய ஸ்வாமியை நேரடியாகத் தரிசிக்கலாம். வெள்ளி கவசத்துடன் கூடிய கருடத்தூண், அருகில் நிறுவப்பட்டிருக்கிறது. இதன் உள்ளே வாசுகி நாகம் வசிப்பதாக ஐதீகம். ஆலயத்தின் வடக்கில் நிறைய லிங்கங்கள். இவற்றை 'குக்கே லிங்கம்’ என்கிறார்கள் பக்தர்கள். தென்புறத்தில் ஸ்ரீபைரவரும், வடகிழக்குப் பகுதியில் ஸ்ரீஉமாமகேஸ்வரரும் அருள்கிறார்கள். தவிர ஸ்ரீகணபதி, ஸ்ரீமகாவிஷ்ணு, அம்பிகை, சூரியன் ஆகியோரது விக்கிரகங்களையும் இங்கு தரிசிக்கலாம். இந்த தெய்வ விக்கிரகங்களை நாரதமுனிவர் பிரதிஷ்டை செய்ததாகப் புராணக் குறிப்புகள் உண்டு.
பதினோராம் நூற்றாண்டில், பல்லால் என்ற சிற்றர சுக்குத் தலைநகராக இருந்ததாம் ஸ்ரீசுப்ரமண்யா. அப்போது ஆட்சியில் இருந்த ஹொய்சள பல்லால மன்னன் ஒருவனின் சிலையையும் இந்த ஆலயத்தில் காணலாம். ஸ்ரீஆதிசங்கரர் தமது திக்விஜயத்தின்போது, இந்தத் தலத்தில் வந்து தங்கினாராம். ஸ்ரீசுப்ரமண்ய புஜங்க ஸ்தோத்திரம் எனும் நூலில் இந்த ஆலய இறைவனைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். இப்போது ஸ்ரீமத்வாச்சாரியரின் த்வைத முறை இங்கு பின்பற்றப்படுகிறது.
குக்கே ஸ்ரீசுப்ரமண்யா ஆலயத்திலிருந்து சுமார் ஒரு பர்லாங் தூரத்தில் அமைந்துள்ளது ஸ்ரீஆதிசுப்ரமண்யா ஆலயம். இங்கு பாம்புப் புற்றே மூலவராகத் திகழ்கிறது. ஸ்ரீசுப்ரமண்யா செல்பவர்கள், கூடவே ஸ்ரீஆதிசுப்ரமண்யா கோயிலுக்கும் செல்லாமல் திரும்புவது இல்லை.
இன்னும் சற்றுத் தொலைவில், 'காசி கட்டா’ என்றொரு இடம்; ஸ்ரீசுப்ரமண்யா தலத்தின் முகப்பு என்றே சொல்லலாம். இங்கே ஸ்ரீவிநாயகர், ஸ்ரீஆஞ்ச நேயர் ஆகியோரின் திருவுருவச் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. ஸ்ரீசுப்ரமண்யா ஆலயத்தை ஒட்டிய முக்கிய சாலையில், சுமார் 4 பர்லாங் தொலைவில் ஒரு குகை உள்ளது. வாசுகி தவம் செய்த குகை என்கிறார்கள். இங்கே வாசுகி நாகத்தின் சிலையைத் தரிசிக்கலாம்.
கர்நாடக மாநிலத்தின் முருகனின் திருத்தலம், பாப-சாப விமோசனம் அருளும் அற்புத க்ஷேத்திரம், நாக தோஷம் உள்பட சர்வ தோஷங்களையும் நீக்கும் புண்ணிய திருவிடம் என எண்ணற்ற சிறப்புகளுடன் திகழும் ஸ்ரீசுப்ரமண்யாவுக்கு ஒருமுறை சென்று வாருங்கள்; வேலவன் அருளால் சகல வினைகளும் தீரும், பாருங்கள்!
படங்கள்: கே.கார்த்திகேயன்
தோஜ நிவர்த்தி பூஷைகள் ஆலயத்தில் மட்டுமே! |

ஸ்ரீசுப்ரமண்யா ஆலயத்துக்குப் போகும் வழியிலேயே நிறையப் பேர், தோஷ நிவர்த்தி பூஜை செய்து தருவதாக நம்மைச் சூழ்ந்துகொள்கிறார்கள். இதுகுறித்து ஆலய நிர்வாகம் ஓர் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. 'ஸர்ப்ப சம்ஸ்காரா, நாகப் பிரதிஷ்டை ஹோமம், அஷ்லீஷா பாலி ஹோமம், இதர சடங்குகள் மற்றும் பூஜைகள் எல்லாம் ஆலயத்தில் மட்டுமே செய்யப்படுகின்றன. இதற்கான கட்டணத்தை ஆலய அலுவலகத்தில் செலுத்தி, ரசீது பெற்றுக்கொள்ளலாம். அந்தக் கட்டணத்திலேயே அர்ச்சகருக்கான கட்டணமும் அடங்கும் என்பதால், அர்ச்சகருக்குத் தனியாக ஏதும் பணம் தர வேண்டியது இல்லை. ஆலயத்துக்கு வெளியே சத்திரங்களில், நதிக் கரையில், கல்யாண மண்டபங்களில் மேற்படி ஹோமம், பூஜைகள் செய்து தருவதாக எவர் கூறினாலும் ஏற்க வேண்டாம்; பக்தர்கள் ஏமாறவேண்டாம்’ என்று அறிவுறுத்துகிறது அந்த அறிவிப்பு! |
குடும்ப தோஜ நிவர்த்தி தலம்! |

''காலை 5 மணிக்கு ஆலயம் திறக்கப்பட்டு கோ பூஜை, பிறகு உஷத் கால பூஜை மற்றும் இதர பூஜைகள் மதியம் 1:30 மணி வரை நடக்கும். பிற்பகல் 3:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை பூஜைகள், மதியமும் இரவும் பல்லாயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் என தினமும் திருவிழாக் களையுடன் திகழும் ஆலயம் இது. குடும்ப தோஷ நிவர்த்தித் தலம் என்பதால், நேர்ந்துகொண்டு குடும்பம் குடும்பமாக இங்கு வருகிறார்கள் பக்தர்கள்'' எனச் சிலிர்ப்புடன் விவரிக்கிறார் ஸ்ரீசுப்ரமண்யா ஆலயத்தின் அர்ச்சகர் நாராயணநூரி தாயர். அவரே தொடர்ந்து... ''சம்பா சஷ்டி என்ற விழா இங்கே கொண்டாடப்படும். அப்போது, 15 நாட்களுக்கு ஊர்க்காரர்களுக்கு உணவளிப்போம். 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் பேர் தினமும் சாப்பிடுவார்கள். கர்நாடக அரசின் முஜாராய் (அறநிலையத்) துறையின் கீழ் இயங்கி வரும் குக்கே ஸ்ரீசுப்ரமண்யா கோயில், மிகச் சிறந்த நாக வழிபாட்டுத் தலமும்கூட. ஸ்ரீசுப்ரமண்ய ஸ்வாமிக்கும், நாகங்களின் அரசன் வாசுகிக்கும் பூஜைகள் செய்கிறோம். நாக தோஷ நிவர்த்திக்காக இங்கு செய்யும் பூஜைகள் உயரிய பலன்களைத் தரும் என்பது உண்மை!'' என்றார். |