Published:Updated:

உறவுகளை பிணைக்கும் குலதெய்வ வழிபாடு...!

உறவுகளை பிணைக்கும் குலதெய்வ வழிபாடு...!
News
உறவுகளை பிணைக்கும் குலதெய்வ வழிபாடு...!

உறவுகளை பிணைக்கும் குலதெய்வ வழிபாடு...!

உறவுகளை பிணைக்கும் குலதெய்வ வழிபாடு...!

ன்றைக்கு வாழ்க்கையில் எதிர்படும் பிரச்னைகளுக்கு காரணம் கேட்டு ஜோதிடர்களிடம் சென்றால், 'குலதெய்வத்தை வழிபட மறந்ததுதான் பிரச்னைகளுக்கு காரணம்.' என்று சொல்கிறார்கள். ஆனால், நம்முடைய குலதெய்வம் எது என்று அவரால் குறிப்பிட்டு சொல்ல முடியாது.

நமக்கும் நம்முடைய குலதெய்வம் எது என்று தெரியாது. காரணம் கூட்டுக்குடும்பம் என்கிற தங்கச் சங்கிலி பிணைப்பில் இருந்து பிரிந்து விட்டோம். கூட்டுக்குடும்பமாக இருந்த வரையில் நம் வீட்டுப் பெரியவர்கள்,  அடுத்தடுத்த தலைமுறையினருக்கு தங்கள் குலதெய்வம் பற்றியும், எப்படி வழிபடுவது என்பதை பற்றியும் எடுத்துச் சொன்னார்கள். இன்றைக்கு அந்த நிலை இல்லை.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சத்திரப்பட்டி, அத்திப்பட்டி என்ற நம் சொந்த கிராமத்து பெயரைச் சொல்ல நம் பிள்ளைகளுக்குத் தெரியவில்லை. கிராமத்தில் இருந்து வரும் பெரியவர், "டேய் ராசா, நாந்தான்டா உன் பெரிய பாட்டன்" என்றபடி நம் பிள்ளைகளை இழுத்துவைத்து கொஞ்ச, 'ஹூ இஸ் பெக்கர்மேன்' என்றபடியே கான்வென்ட் குழந்தைகள் அவரின் கையை தட்டி விட்டு வெளியே ஓட, 'சின்னப்புள்ளதானே' என அவர் சிரித்துக்கொள்கிறார். நல்லவேளை அவருக்கு ஆங்கிலம் தெரியவில்லை என்பதால் நாம் தப்பித்தோம்.

பெரிய தாத்தன், சின்ன தாத்தன், சித்தப்பா, பெரியப்பா என விரிந்துகிடக்கும் நம் பங்காளிகளையும், அண்ணன் தம்பிகளையும் அடையாளம் தெரியாமல் பெருநகர அடுக்குமாடிக் கூண்டுக்குள் அடைபட்டுக் கிடக்கிறோம். இப்படியெல்லாம் கலிகாலத்தில் நடக்கும் என கணித்துத்தான் பெரியவர்கள் பலதலைமுறைக்கு முன்னரே உறவுகளை பிணைத்துவைக்கும் தந்திரத்தை இறைவழிபாட்டுக்குள் அடக்கியிருக்கிறார்கள்.

மக்களின் கலாச்சார வாழ்க்கை முறைகளை வழிவழியாக கற்றுக்கொடுத்து, ஒரு ஒழுங்குமுறை நகர்வை இயல்பாகவே நடத்தி வந்திருக்கிறார்கள் நம் பாட்டனுக்கு பாட்டன்மார்கள்.  அதற்கு அவர்கள் பயன்படுத்திய வழிதான் குலதெய்வ வழிபாடு. உறவுகள் அற்றுப்போகாமல் பிணைத்து வைக்கவும், மனிதன் தனிமைப்பட்டு மன அழுத்தத்துக்கு ஆளாகாமல் காக்கவும் குலதய்வ வழிபாடு உதவியது. ஆண்டுக்கு ஒருமுறை விழா எடுக்கும் நேரத்திலாவது ஒட்டுமொத்த பங்காளிகளும் ஒன்று சேர்ந்து நிற்க வேண்டும். ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து பேசி மகிழ வேண்டும் என நினைத்தார்கள். பொங்கல் வைத்து, விருந்து படைத்து ஆடி பாடி குலசாமியை கொண்டாடி மகிழ்ந்தார்கள்.

ஆனால், தற்காலத்தில் குலதெய்வ வழிபாடு குறைந்துபோய்விட்டது. பலர் தங்களின் செல்வ செழிப்பில் குலதெய்வத்தையே மறந்துவிட்டார்கள். "குலதெய்வ வழிபாடு என்பது மிகவும் அவசியமான ஒன்று. குலதெய்வ வழிபாடு செய்பவர்கள் தங்களின் முன்னோர்கள் எந்த நாளில் வழிபாடு செய்தார்களோ அதே நாளில் வழிபாடு செய்வதே நல்லது'' என வலியுறுத்தினார்கள். ஆள் ஆளுக்கு ஒரு நாளை வைத்துக்கொண்டால் உறவுகள் ஒன்றுகூடுதல் இல்லாமல் போய்விடும் என்பதால்தான் சில வரைமுறைகளை கட்டாயப்படுத்தியிருக்கிறார்கள்.

'யாரும் இல்லாமல் நிர்கதியாக நிற்கிறேன்' என புலம்புபவர்கள் இன்று அதிகரித்து வருகிறார்கள். இவர்கள் அத்தனைபேருமே குல தெய்வ வழிபாட்டுக்கு போகாதவர்கள்; அல்லது போய் பல வருடங்கள் ஆனவர்கள். இவர்கள் இழந்தது வழிபாட்டை அல்ல; வம்சத்தை...வம்ச உறவுகளை! ஆயிரம் கோயில்களுக்கு போய் மொட்டை போட்டாலும், முதல்முடி எடுத்து, காதுகுத்தும் சடங்கை குலதெய்வம் கோயிலில் உறவுகளைக் கூட்டி நடத்தினார்கள். குலதெய்வத்தை வணங்கியே மற்ற தெய்வங்களை வணங்க வேண்டும் என குலதெய்வ வழிபாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள். குலதெய்வம் அருள் கிடைத்தால்தான், மற்ற தெய்வங்கள் வரம் தருவார்கள் என நம்பிக்கையை மேலும் வலுவாக்கினார்கள். குலத்தை மறந்தாலும் குலதெய்வத்தை மறக்காதீர்கள் என வலியுறுத்தினார்கள்.

கூட்டு பிரார்த்தனை, கூட்டு வழிபாட்டுக்கு மிகப்பெரிய சக்தி உண்டு எனக் கற்பித்தார்கள். இன்றைக்கு பல விஷயங்கள் ஃபேஷனாக மாறிவிட்டன. அதில் ஆன்மிகமும் இறைவழிபாடுகளும்கூட விதிவிலக்கல்ல.

ஒரு நண்பர் பெருமையாகச் சொன்னார். ''நான் 18 முறை திருப்பதி போய் வந்திருக்கிறேன். 12 முறை திருவண்ணாமலை கிரிவலம் போய் வந்திருக்கிறேன்.''

''அது சரி, உங்க குலதெய்வம் கோயிலுக்கு கடைசியாக எப்போது போனீர்கள்'' என்றால், "தாத்தா காலத்துலேயே சென்னைக்கு வந்துட்டோம். அப்பா காலத்துல அவரு எங்ககிட்ட எதுவும் சொல்லலை. எங்கயோ நெல்லை மாவட்டத்துல காட்டுக்குள்ள போகணும்னு அம்மா சொல்லி கேட்டிருக்கேன். எங்களை அழைத்துப் போனதில்லை. பேருகூட தெரியாது" என்றார்.

அவர் மட்டுமல்ல, நம்மில் பலரும் இழந்தது குலதெய்வத்தை மட்டுமல்ல..உறவுகளையும்தான். 

-கா.முத்துசூரியா