Published:Updated:

உள்ளங்களை ஒருங்கிணைக்கும் யோகா!

உள்ளங்களை ஒருங்கிணைக்கும் யோகா!
உள்ளங்களை ஒருங்கிணைக்கும் யோகா!

உள்ளங்களை ஒருங்கிணைக்கும் யோகா!


ள்ளூர் மாடு விலை போகாது என்பார்கள்...அது உண்மைதான். முன்னோர்கள் வடிவமைத்துக் கொடுத்த வாழ்வியல் கலையான யோகாவை, கண்டுகொள்ளாமல் இருந்து விட்டோம். ஆனால், அதன் அருமை பெருமைகளை உணர்ந்த மேலை நாட்டினர் பயன்படுத்தி கொண்டாடுகிறார்கள்.

அப்படி என்னதான் இருக்கிறது யோகாவில்?


இந்த பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு உயிர்களும் பல்வேறு பரிமாணங்களாக மாற்றம் பெற்று வந்தவை. இவை அனைத்தும் இயற்கையை மையமாக வைத்ததே இயங்குகிறது. ஒவ்வொரு உயிருக்கும் உடல், மனம், அறிவு, உணர்வு போன்றவை இருக்கின்றன.  இவை அனைத்தையும் சமன்படுத்தும் கலைதான் யோக கலை. சுருக்கமாகச் சொன்னால் உடலையும் உள்ளத்தையும் ஒழுக்கத்தையும் சீராக வைத்துக் கொள்ள உதவும் அறிவியலே யோக கலை.

ஜீவாத்மாவையும் பரமாத்மாவையும் இணைக்கும் செயல் யோகா என்கிறது இந்து மதம். உடலைக் கொண்டு செய்யும் செயல்களை கர்மயோகா என்றும், உணர்வு, பக்தி, அர்ப்பணித்தலை பக்தி யோகா என்றும், மனம், அறிவு நிலையை ஞானயோகா என்றும்,  ஒட்டு மொத்த உள் சக்தியை மேம்படுத்தும் செயலை க்ரியா யோகா என்றும் யோகாவை பல நிலைகளாக பிரித்து வைக்கிறார்கள். இந்த நான்கு வழிகள் மூலமாக ஒரு மனிதன்,  தன் உள்நிலையை உணரலாம்.

அறிவு வழியாகவோ, பக்தி வழியாகவோ, பயன்கருதாத பணிகள் மூலமாகவோ, உள்நிலை சக்திகளை மாற்றி அமைப்பதன் மூலமாகவோ இது சாத்தியம்.  இதையே உடல், மனம், அறிவு, சக்தி என்று சுருக்கமாக சொல்லலாம். அறிவு சார்ந்தோ, மனம் சார்ந்தோ, உழைப்பு சார்ந்தோ, சக்தி சார்ந்தோ மனிதன் முழுமையானதாக இருந்துவிடுவதில்லை. ஆனாலும் இந்த நான்கு பரிமாணங்களின் கலவைதான் மனிதன். அவன் வளரவேண்டுமானால் இந்த நான்கு பாதைகளின் ஒருங்கிணைந்த மார்க்கமான பக்தி, ஞானம், கர்மா, கிரியா ஆகியவை ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.

அந்த இணைப்புக்கு பெயர்தான் யோகா. இந்த நான்கு நிலையில் ஒருங்கிணைக்கப்பட்டு உயர்ந்த நிலையை தழுவியவர்கள் சித்தராக, ஞானியாக, யோகியாக பார்க்கப்படுகிறார்கள். அதையும் தாண்டி அவர்களில் சிலர் கடவுளாகவும் பார்க்கப்படுகிறார்கள். போதி மரத்தடியில் ஞானோதயம் பெற புத்தர் ஆறு ஆண்டுகள் ஆழமாக யோக பயிற்சியை மேற்கொண்டார். பன்னிரெண்டு ஆண்டுகள் யோக பயிற்சியில் ஈடுபட்ட மகாவீரர் சமண சமயத்தை நிறுவினார். கடவுளாக பூஜிக்கப்படுகிற ஒவ்வொருவரும் யோகா, தியானம் செய்தார்கள் என்கிறது வரலாறு.

கடந்த காலங்களில் எல்லோருக்கும் இந்த கலை எளிதில் கிடைத்துவிடவில்லை. யோக கலையை கற்க நினைத்தவர்கள், குருமார்களைத் தேடி மலை அடிவாரங்களில் காத்துக் கிடந்தனர். மலையில் இருந்த யோகா இப்போது ஒவ்வொருவர் வீடுகளுக்கும் வந்துவிட்டது. இந்த கலை, வேதங்காலத்துக்கு முன்பே தோன்றியதாக சொல்கிறார்கள். யோக வழியை முதன் முதலாக ’ஹிரண்யகர்பர்’  காட்டினார் என்றும்,  அதை பதஞ்சலி முனிவர்தான்  சூத்திரமாக்கினார் என்றும்,  அதிலிருந்து  வியாசர் வேத சூத்திரம்மாக்கினார் என்றும்,  நாரதர் பக்தி சூத்திரமாக்கினார் என்றும் சொல்கிறார்கள்.

பல கட்டங்களில் பல யோகிகள், மக்களிடம் யோக கலையை கொண்டு சேர்த்திருக்கிறார்கள். இமயமலையில் யோக நிலையில் இருந்த ஆதியோகி,  குருபவுர்ணமி அன்று ஏழுபேர்களுக்கு இதை கற்றுக் கொடுத்து அவர்களை பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைத்தார். அவர்கள், உலகம் முழுவதிலும் வெவ்வேறு பெயர்களில் ஆன்மிக வடிவில் இந்த யோகாவை கொண்டு சென்றார்கள். அகத்தியர் கூட அப்படி அனுப்பி வைக்கப்பட்டவர்களில் ஒருவர்தான் என்றும் சொல்லப்படுகிறது.

மிதவாத தன்மைக்கு இமயம், புனித தன்மைக்கு நியமம், அமர்தல் தன்மைக்கு ஆசனம், மூச்சு விடுதல் தன்மைக்கு பிராணாயாமம், ஐந்து புலன்களை அடக்கும் தன்மைக்கு ப்ரத்யாஹாரம்,  மனதை ஒரு நிலைபடுத்தும் தன்மைக்கு தாரானை, ஆழ்ந்த தன்மைக்கு தியானம், விடுதலை தன்மைக்கு சமாதி என எட்டு அங்கங்களை கொண்ட 185 சுருக்கங்களைக் கொண்டிருக்கிறது பதஞ்சலி யோகசூத்திரம்.இவைகள் தவிர யோகி ஸ்வாத்மராமாவின் உடல், மனம் மற்றும் இன்றியமையாத சக்தியை பெற பயன்படும் ஹத யோகா உட்பட மேலும் பல யோகா வகைகளும் உண்டு.

கடந்த காலங்களில் மலேசியா உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகளிலும் இந்த யோக கலை பரவியது. பண்டைய யோக சாஸ்திர நூலான அமிர்த குண்டா, அரேபிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு, அங்கே பயிற்றுவிக்கப்பட்டது. யோகாவில் இந்து மதத்தை புகட்டும் சாத்திய கூறுகள் இருப்பதாக கடந்த 2008-ல் அங்கே எதிர்ப்பு கிளம்பி தடை ஏற்பட்டது.  ஆனாலும் அங்கேவுள்ள பெண்ணுரிமை இயக்கங்கள் யோகாவை ஆதரித்தன. அதேபோல் கிறிஸ்தவ நாடுகளிலும் இதுபோன்று பிற சமயங்களை சார்ந்த எந்த ஒரு கலையையும் ஏற்க முடியாது என எதிர்ப்பு கிளம்பியது. 

" யோகா ஒரு விஞ்ஞானம், அதை மதமாக பார்க்க வேண்டாம். மனித நல்வாழ்விற்கு யோகா அவசியம்” என  குருமார்கள் மற்றும் இந்திய அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டு வந்தது. அதனை ஏற்றுக் கொண்ட ஐ.நா சபை, ஜூன் 21-ம் தேதியை ’யோகா தினம்’ என அறிவித்தது. அதனடிப்படையில் கடந்த ஆண்டு ஜூன் 21-ம் தேதி நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளில் யோகா கலை பயிற்றுவிக்கப்பட்டது.

அதுபோல் இந்த ஆண்டு ஜூன் 21-ம் தேதியும் யோகா தின பயிற்சி நடக்கிறது.

இந்த கோபதாப அவசர  உலகில்,  உடலையும் உள்ளத்தையும் ஒருங்கிணைக்கும் யோகா அனைவருக்கும் அவசியமானதே!


-எஸ்.சரவணப்பெருமாள்

படங்கள் : எம். உசேன்

அடுத்த கட்டுரைக்கு