Published:Updated:

மன அழுத்தம் போக்கும் மைண்ட் ரிலாக்ஸ் டிப்ஸ்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மன அழுத்தம் போக்கும் மைண்ட் ரிலாக்ஸ் டிப்ஸ்!
மன அழுத்தம் போக்கும் மைண்ட் ரிலாக்ஸ் டிப்ஸ்!

மன அழுத்தம் போக்கும் மைண்ட் ரிலாக்ஸ் டிப்ஸ்!

மன அழுத்தம் போக்கும் மைண்ட் ரிலாக்ஸ் டிப்ஸ்!


னக்கு யாருமே இல்லையே என்ற தவிப்பு, இத்தனை வேலையை நான் எப்படித்தான் செய்து முடிப்பேனோ என்ற பதற்றம், பக்கத்து வீட்டுக்காரங்களைப் போல ஆடி கார் வாங்க முடியவில்லையே என்ற ஏக்கம், ஐஸ்வர்யா ராய் வீட்டு குட்டி பாப்பா மாதிரி நம்ம வீட்டு பாப்பா துறுதுறுன்னு இல்லையே என்ற எதிர்பார்ப்பு... இப்படி சின்னச்சின்ன விஷயங்கள் ஒட்டுமொத்தமாகச் சேர்ந்துதான் மன அழுத்தத்தில் தள்ளிவிட்டு விடுகிறது.

எப்போதுமே நாம் பார்க்கிற, கேட்கிற, படிக்கிற விஷயங்கள்தான் நம் எண்ணங்களை உருவாக்குகின்றன. அந்த எண்ணங்கள்தான் நம் வாழ்க்கையின் எல்லா செயல்பாடுகளையும் தீர்மானிக்கின்றன. எனவே நல்ல எண்ணங்களை வளர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். அதற்கு நல்லதைப் பார்க்க வேண்டும், நல்லதை கேட்க வேண்டும்,  நல்லதைப் படிக்க வேண்டும். இதைத்தான் நம் இறைதூதர்கள் முதல் தத்துவ ஞானிகளான ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், ரமணர் போன்றவர்களைத் தொடர்ந்து ஓஷோ வரை திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள்.

'என்னத்தப் போங்க...போரடிக்காதீங்க சார்...!' எனத் திட்டாதீர்கள். காலத்துக்கு ஏற்ப, நமக்கு இருக்கும் நேரத்துக்கு ஏற்ப இயல்பான வாழ்க்கையில் சில சின்ன சின்ன விஷயங்களை தொடர்ந்து செய்தாலே அந்த மகா பெரியவர்கள் சொன்ன விஷயங்கள் நமக்குக் கிடைத்துவிடும். மன அழுத்தம் மறைந்தே போய்விடும். 'கொஞ்சம் கண்ணை மூடுங்க...மனச ஒரு புள்ளியில குவிங்க' என்று தியான பயிற்சியையோ, 'மன அழுத்தத்தை சமாளிக்க ஒன்பது வழிகளை கடுமையாகப் பின்பற்ற வேண்டும்' என்பது போன்ற உளவியல் பயிற்சிகளையோ இங்கே சொல்லி உங்களை மேலும் மன அழுத்தத்துக்கு ஆளாக்க விரும்பவில்லை. போகிற போக்கில் செய்யக்கூடிய சின்ன சின்ன விஷயங்கள்தான் எல்லாமே.

* வடிவேலு காமெடி...டென்ஷன் பொடிப்பொடி!

எப்போதும் அழுது வடியும் சீரியல்களை மட்டுமே பார்த்து, 'கமலாவுக்கு ஏன் இன்னும் கல்யாணம் நடக்கலை' என சீரியல் கதாநாயகிகளுக்கும் சேர்த்து கவலைப்படுவதை விடுங்கள். நகைச்சுவை சேனல் பக்கம் ரிமோட்டை திருப்புங்கள். நாகேஷ் முதல் வடிவேலு, சந்தானம் காமெடி வரை பார்த்து மனசு விட்டு சிரியுங்கள்.

* கதவை திறங்க... கவலை போகட்டும்!

கதவு, ஜன்னலை கொஞ்சம் திறந்து வையுங்கள். அழுக்கு ஒட்டிக்கொள்ளும், இன்பெஃக்‌ஷன் வரும் என்றெல்லாம் பயமுறுத்தி உங்கள் வீட்டு பாப்பாவை கண்ணாடி அறைக்குள் அடைத்துவைக்காமல், தெருவில் விளையாடும் குழந்தைகளோடு விளையாட விடுங்கள். பால்கனியிலிருந்து பார்த்து ரசியுங்கள். பாதி பாரம் இறங்கிவிடும்.

* உள்ளம் மகிழ உறவுகள் முக்கியம்!

'சித்திரை மாத முத்தாளம்மன் திருவிழாவுக்கு வந்துட்டு போங்கப்பா...!' என சொந்த கிராமத்திலிருந்து போன் போட்டு உங்க சித்தப்பாவோ பெரியப்பாவோ அழைக்கிறார்களா..? 'அது எதுக்கு கக்கூஸ்கூட இல்லாத ஊருக்கு..?' என தட்டிக் கழிக்காமல், குடும்பத்தினரை அழைத்துக்கொண்டு இரண்டு மூன்று நாட்கள் சென்றுவாருங்கள். பெரிய ரிலீஃப் கிடைக்கும்.

* அமைதி... நிம்மதி!

எல்லா ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஆடு, கோழி, மீன் என வயிறுமுட்ட சாப்பிட்டுவிட்டு கவுந்தடித்து தூங்காதீர்கள். மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமையாவது பீச், பார்க், ஏதாவது ஒரு கோயில் என போய் அமைதியாக உட்கார்ந்துவிட்டு வாருங்கள். சுத்தமான காற்று உங்களை சுறுசுறுப்பாக்கும்.

* கவலையை விரட்டும் விளையாட்டு! 

'ஓடிப் பிடித்து விளையாட நான் என்ன சின்னப் பிள்ளையா..?' என சின்னப்புள்ளத்தனமா சிந்திப்பதை விட்டுவிட்டு கொஞ்சம் இறங்கிவந்து விளையாடுங்கள். அந்த காலத்தில் தாயம் உருட்டுதல், ஆடு புலி ஆட்டம், பல்லாங்குழி என பல மைண்ட் ரிலாக்ஸ் விளையாட்டுக்களை கிராமப்புறங்களில் விளையாடி மகிழ்ந்தார்கள். நீங்கள் பக்கத்து வீட்டுக்காரர்களை சேர்த்துக் கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை, உங்கள் வீட்டு ஆட்களோடு மட்டுமாவது செஸ் விளையாடுங்க, கேரம்போர்டு விளையாடுங்க. லேப்டாப், செல்போனில் அல்ல. நிஜமாகவே விளையாடுங்கள். மனசு லேசாகும்.

* பிரச்னை தீர்க்கும் பிரசங்கம்!

பக்கத்து தெரு வேம்புலியம்மன் கோயிலில் யாரோ ஒரு பேச்சாளர் கம்பராமாயணம் பிரசங்கம் செய்கிறார் என்றால், 'அதெல்லாம் சுத்த போர்' என வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்காமல்' வாக்கிங் மாதிரி போய் சும்மா அரைமணி நேரம் கேட்டுப் பாருங்கள். தீர்க்கவே முடியவில்லை என உங்கள் மனதை அழுத்திக் கொண்டிருக்கும் பிரச்னைக்கும் அங்கே சுலபமான தீர்வை அவர் வேறு மாதிரி சொல்லியிருப்பார்.]

* நாலு பேர்... நல்ல வார்த்தை!

வீட்டில் நீங்களும், உங்கள் கணவரும் கைநிறைய சம்பாதிக்கிறீர்கள். வசதியாக வாழ்கிறீர்கள். ஆனாலும் மனதில் ஒரு வெறுமை. எல்லாவற்றையும் நீங்களே வைத்துக்கொண்டால் எப்படி..? ஃபேஷன் மாறிவிட்டதால் நீங்கள் பயன்படுத்தாமல் புதுசாவே பீரோவில் அடுக்கி வைத்திருக்கும் துணிமணிகளை வருடத்துக்கு ஒருமுறையாவது பக்கத்தில் இருக்கும் அநாதை இல்லத்துக்கு போய் கொடுத்துவிட்டு வாருங்கள். கூடவே அவர்களின் சாப்பாட்டுக்காக ஒரு ஆயிரம் ரூபாயை கொடுத்துவிட்டு வாருங்கள். 'நல்லா இரும்மா' என நாலுபேர்... 40 பேர்... 400 பேர்... 4,000 பேர் சொல்வார்கள். அதில் கிடைக்காத நிம்மதி எதில் கிடைக்கும்..?

 * டேக் இட் பாலிசி!

குழந்தை ஐஸ்கிரீம் சாப்பிட்டு சளி பிடித்தால் உடனே பதறிப்போய் ஸ்பெஷலிஸ்ட்டை தேடி ஓடாமல், 'ஓகே பார்த்துக்கலாம்...' , வாங்கி வச்ச தக்காளி பழம் அழுகிப் போனா 'அய்யோ போச்சே' என கவலைப்படாமல் 'ஓகே பார்த்துக்கலாம்' என பல விஷயங்களுக்கு 'ஓகே பார்த்துக்கலாம்' என்ற சமநிலை மனதுடன் உங்களை பக்குவப்படுத்திக்கொண்டால், பெரிய இடியே விழுந்தாலும் சுண்டுவிரலில் தாங்கிப்பிடிக்கும் வலிமை உங்களுக்கு தானாகவே வந்துவிடும்.

அப்புறமென்ன மன அழுத்தம், டென்ஷன் எல்லாமே உங்களைப் பார்த்துத்தான் அச்சப்படும்.


- கா.முத்துசூரியா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு