Published:Updated:

மெய்வழி மதம்: பல்வேறு மதங்கள், சாதிகளின் சங்கமம்!

மெய்வழி மதம்: பல்வேறு மதங்கள், சாதிகளின் சங்கமம்!
மெய்வழி மதம்: பல்வேறு மதங்கள், சாதிகளின் சங்கமம்!
மெய்வழி மதம்: பல்வேறு மதங்கள், சாதிகளின் சங்கமம்!


'மதம் துறந்து, சாதி துறந்து மனிதர்கள் மனிதர்களாகவே சங்கமிக்க வேண்டும்' என்ற உயரிய நோக்கத்தை முதன்மை கோட்பாடாக கொண்டு இயங்குகிறது மெய்வழி மதம். இம்மதத்தை பின்பற்றுபவர்கள் தமிழ்நாடு முழுவதும் பரவலாக வியாபித்திருக்கிறார்கள்.

இவர்கள் தங்களது பெயருக்கு முன்னால் சாலை அல்லது மெய்வழிச்சாலை என்ற அடைமொழியுடன் திகழ்கிறார்கள். தலைப்பாகை அணிவதை வழக்கமாக கொண்டுள்ளார்கள். இம்மதத்தை சேர்ந்த ஆண்கள் அனந்தர்கள் என்றும், பெண்கள் அனந்தாதிகள் என்றும் அழைக்கப்படுகிறார்கள். புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே, ஊறல்மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மெய்வழி சாலை என்ற கிராமம் இதன் தலைமையகமாக விளங்குகிறது. இங்கு ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகள் உள்ளன. இயற்கையோடு ஒன்றி எளிமையாக வாழ வேண்டும் என இம்மதம் வலியுறுத்துவதால் இங்குள்ள வீடுகள் அனைத்துமே தென்னங்கீற்றுகளால் அமைக்கப்பட்டுள்ளன.

இங்கு மின்சாரம் முற்றிலுமாக தவிர்க்கப்பட்டு, அரிக்கேன், சூரியஒளி விளக்குகள் மட்டுமே இங்கு பயன்படுத்தப்படுகிறது. மது, சிகரெட், சினிமா, டிவி ஆகியவைகளுக்கு இங்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்து, முஸ்லிம், கிறிஸ்டின் என பல மதத்தைச் சேர்ந்தவர்களும் மெய்வழி மதத்தில் சங்கமித்துள்ளார்கள். ஆனாலும் கூட தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்துமஸ் போன்ற மத பண்டிகைகளை கொண்டாடுவதில்லை. இயற்கையை போற்றும் விதமாக பொங்கல் விழா மிகச் சிறப்பாக இங்கு கொண்டாடப்படுகிறது.

தமிழ்நாடு மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து, மெய்வழி மதத்தை பின்பற்றுபவர்கள் குடும்பத்தோடு இங்கு ஒன்றுகூடி, புத்தாடை உடுத்தி கோலாகலமாக பொங்கல் விழாவை கொண்டாடுகிறார்கள். மண் தரையில் ஆயிரக்கணக்கான குழிகள் தோண்டப்பட்டு, விறகுகள் வைக்கப்பட்டு, அதில் மண்பானை வைத்து பொங்கலிட பெண்கள் தயாராக இருப்பார்கள்.

இங்குள்ள பொன்னரங்க தேவலாயத்தை ஆண்கள் சுற்றி வருவார்கள். மெய்வழி சாலையின் தற்போதைய சபை அரசர் கையில் தீபத்துடன் நடந்து செல்வார். அனைவரின் பார்வையும் இவரது கையில் இருக்கும் தீபத்தை எதிர்நோக்கி காத்திருக்கும். தீபத்தை உயர்த்தி காட்டி, குழல் ஊதியதும் அனைத்து பானைகளுக்கும் ஓரே நேரத்தில் தீ முட்டப்படும். அனைவரும் தங்களது பொங்கலின் சிறு பகுதியை ஆலயத்தில் வைக்கிறார்கள். அவை ஒன்றாக கலக்கப்பட்டு, பூஜை செய்யப்பட்டு, அமுதமாக வழங்கப்படுகிறது.

கார்த்திகை திருவிழாவும் இங்கு வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஒரே நேரத்தில் ஒரு லட்சத்திற்கு அதிகமாக நெய்தீப விளக்குகள் ஏற்றப்பட்டு, மெய்வழிச்சாலை ஒளி வெள்ளத்தில் பிரகாசிக்கும். வைகாசி பவுர்ணமி அன்று இங்கு நடைபெறும் வைகாசி திருவிழாவும் மிகவும் சிறப்புமிக்கது. புத்தாடை உடுத்தி, கோலாகலமாக கொண்டாடுவார்கள்.

மெய்வழி மதம்: பல்வேறு மதங்கள், சாதிகளின் சங்கமம்!

இம்மதத்தைச் சேர்ந்தவர்கள், சாலை ஆண்டவரை தெய்வமாக வணங்குகிறார்கள். ஆனாலும் உருவ வழிபாடு கிடையாது. இவரது ஜீவ சமாதியில்தான் பொன்னரங்க தேவாலயம் எழுப்பப்பட்டுள்ளது. இவர் மதுரை மாவட்டம், மார்க்கம்பட்டி என்ற குக்கிராமத்தில் பிறந்தவர். இவரது இயற்பெயர் காதர்பாட்சா. இவர்தான் மெய்வழி மதத்தை தோற்றுவித்தவர். இவர் 131 ஆண்டுகள் வாழ்ந்ததாக நம்பப்படுகிறது. தன்னுடைய குருநாதர் தனிகைமணி பிராண் என்ற ஞானியிடம் தீட்சைகளும் உபதேசங்களும் பெற்றார். திருப்பரங்குன்றம் மலைகுகையில் 12 ஆண்டுகள் அன்ன ஆகாரம் இல்லாமல் கடும் தவம் புரிந்து, இதன் பலனாக காத்தல், மீட்டல், அருளல், அழித்தல் ஆகிய அனைத்து சக்திகளையும் பெற்று தெய்வமாக திகழ தொடங்கினார்'' என நெகிழ்ச்சியோடு பேசுகிறார் மெய்வழி சாலையின் தஞ்சாவூர் சபையை சேர்ந்த சாலை சிவாகரன்.

''இறைவன் மனித தேகத்தில்தான் குடியிருக்கிறான் என்பதும், மெய்யான வழியை காட்டி, இறைவனை அடைய செய்ய வேண்டும் என்பதும்தான் எங்களுடைய சாலை ஆண்டவரின் அடிப்படை நோக்கம். உலகில் எந்த ஒரு மதத் தலைவரும், தான் வாழும் காலத்தில் தன்னுடைய சொந்த முயற்சியில் ஒரு மதத்தையும், ஊரையும், வழிபாட்டு முறையையும் உருவாக்கியதில்லை. எங்களுடைய மெய்வழி சாலை ஆண்டவர் மட்டுமே 69 சாதிகளையும், பல மதங்களையும் சேர்ந்த மக்களை ஒருங்கிணைத்து புதியதோர் மதத்தையும், மெய்வழி சாலை கிராமத்தையும், வழிபாட்டு முறையையும் உருவாக்கியுள்ளார்'' என சிலாகிக்கிறார் சிவாகரன்.

இச்சபையைச் சேர்ந்த சாலை டேனியல் குமரன், இம்மதத்தின் அடிப்படை கோட்பாடுகள் குறித்து விவரிக்கிறார்.

''சாதி, மத, இன வேறுபாடு கூடாது. கள், சாராயம் போன்ற போதை வஸ்துகள், சிகரெட் ஆகியவை தவிர்க்கப்பட வேண்டும். களவு, கொலை, முறையற்ற காமம் கூடாது. உணவு, உடை உள்ளிட்ட நடைமுறை வாழ்க்கையில் எளிமையை கடைப்பிடிக்க வேண்டும் என எங்கள் ஆண்டவர் வலியுறுத்துகிறார். மெய்வழி மதத்தை உண்மையாகவும் தீவிரமாகவும் கடைபிடிக்கக்கூடியவர்கள் இவைகளை தீவிரமாக பின்பற்றுகிறோம். சாலை என்றால் மரணத்தை வென்றவர் என்று பொருள். தலைப்பாகை தலையை காக்கும் என எங்கள் ஆண்டவர் கூறியுள்ளதால் தலைப்பாகை அணிகிறோம்'' என விளக்கமளிக்கிறார் சாலை டேனியல் குமரன்.

மெய்வழி ஆண்டவரின் இளைய குமாரன் சாலை வர்க்கவான். தற்போது மெய்வழிச்சாலையை வழிநடத்துகிறார். இவரை சபைக்கு அரசர் என அழைக்கிறார்கள். பொன்னரங்க தேவாலயத்தின் மேற்கூரை தென்னங்கீற்றுகளால் ஆனது. தரை முழுவதும் மணல் பரப்பப்பட்டுள்ளது.

இதன் சிறப்பு குறித்து நம்மிடம் பேசிய சாலை சியாமள கண்ணன், ''5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மணல் மாற்றப்படுகிறது. கால்களின் கிருமிகளை உட்கிரகிக்கக்கூடிய தன்மை கொண்டது மணல். அதனால்தான் இங்கு மணல் பரப்பப்பட்டுள்ளது'' என்றார்.

 - கு. ராமகிருஷ்ணன்

படங்கள்: ம. அரவிந்த்