பழங்கால ஆவணங்கள், இந்த சிவாலயத்துக்கு, 'சூரிய பூஜை நடைபெறும் கோயில்' எனும் பெருமையைத் தருகின்றன!
சிவனாரை அவமதித்து தட்சன் நடத்திய யாகத்தில் தானும் கலந்து கொண்ட குற்றத்துக்காகப் பரிகாரம் தேட முயன்றான் சூரியன். பல தலங் களுக்குச் சென்று பூஜித்தான். அவ்வாறு அவன் வழிபட்ட தலங்களில் ஒன்று, ஸ்ரீசாரபரமேஸ்வரர் ஆலயம். சூரிய பூஜைக்கான கோயில்கள், கிழக்குப் பார்த்தவாறு அமைந்திருக்கும். இங்கு, இப்போதும் சூரிய வழிபாடு நடை பெறுகிறது என்பதைக் காட்டும் விதமாக, மாசி மாதம் 13, 14 மற்றும் 15-ஆம் தேதிகளில், சூரியக் கதிர்கள் மூலவர் மீது விழுந்து வணங்குகின்றன.
உள் பிராகாரத்தில், தென்கிழக்கு மூலையில் மடப் பள்ளி; தென்மேற்கு மூலையில், ஸ்தல விநாயகர்; மேற்குப் பிராகாரத்தில் மார்க்கண்டேயர் வழிபட்ட ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர். தொடர்ந்து, ஸ்ரீருணவிமோசன லிங்கேஸ்வரர். அப்படியே தொடர்ந்தால் ஸ்ரீமுருகன், ஸ்ரீகஜலட்சுமி, வாயுலிங்கம், ஜேஷ்டாதேவி சந்நிதிகள். வடக்குச் சுற்றில், ஸ்ரீநடராஜ சபை. மீண்டும் கிழக்குச் சுற்றில் திரும்பினால், ஸ்ரீபைரவர் சந்நிதி. அடுத்ததாக, ஸ்ரீசனீஸ்வரர் மற்றும் சூரியன். 1,500 ஆண்டுகளுக்கும் முற்பட்டதான இந்தக் கோயில், குலோத்துங்க சோழனால் மிகப் பெரிய திருப் பணிகளைக் கண்டது.
ஸ்ரீருணவிமோசனரையே கடன் நிவர்த்தீஸ்வரர் என்கின்றனர். ருணம் என்றால் கடன் என்பதாகும். இந்தத் தலத்துக்கு வந்த மார்க்கண்டேயர், தன்னுடைய பிறவிப் பிணி (பிறவியும் கடன்தானே; பிறப்பில் தொடங்கி இறப்பு வரை பல்வேறு கடன்களை உடம்பு தாங்குகிறதே) நீங்குவ தற்காக, சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டாராம். அந்தச் சிவலிங்கமே, ருணவிமோசன சிவலிங்கம் என்பது ஐதீகம். இம்மைக்கும் மறுமைக்கும் கடன் தீர்க்கும் ருணவிமோசனர், லௌகிகக் கடன்களையும் சிக்கல்களையும் இந்தப் பிறவியிலும் தீர்ப்பார் என்பது நம்பிக்கை. நீங்காத கடன் தொல்லையால் அவதிப்படுபவர் கள் இங்கு வழிபட்டு, நிவர்த்தி பெறுகின்றனர்.
ருணவிமோசனர் சந்நிதிக்கு அருகில், முன்னதாக சந்நிதி கொண்டிருக்கும் அபிராமி உடனாய அமிர்த கடேஸ்வரர், பிறவித் துன்பத்தை நிரந்தரமாகப் போக்கும் அமிர்தமாக திகழ்பவர். வடகிழக்குப் பகுதியில்... எட்டுத் திருக்கரங்களுடனும், நாய் வாகனத்துடனும் அருளும் ஸ்ரீபைரவருக்கு, அஷ்டமி நாட்களில், வடை மாலை சாற்றி நடைபெறும் பைரவ பூஜை வெகு பிரசித்தம். இந்தத் தலத்துக்குப் பதிகங்கள் பாடிய நாவுக்கரசர், பைரவரைக் குறிப்பிட்டே பாடுகிறார்.
விரித்த பல்கதிர்கொள் சூலம் வெடிபடு தமருகம் கை தரித்ததோர் கோல கால பயிரவனாகி வேழம் உரித்துமை அஞ்சக் கண்டு ஒண்திரு மணிவாய் விள்ளச் சிரித்தருள் செய்தார் சேறைச் செந்நெறிச் செல்வனாரே
- என்பது திருநாவுக்கரசரின் திருவாக்கு. மன உளைச்சல், பதற்றம் போன்ற சிக்கல்களிலிருந்து விடுபட, இந்தப் பாடலைப் பாடி, பைரவரை வணங்கும் பிரார்த்தனையும் தவறாமல் நடைபெறுகிறது.
மூலவர் சந்நிதிக்குச் செல்ல யத்தனிக் கிறோம். முன் மண்டபம், மகா மண்டபம், அர்த்த மண்டபம் ஆகியவற்றுடன் கூடிய சந்நிதி. மகா மண்டபத்தில், வலதுபக்கம் நால்வர் பெருமக்கள். அர்த்த மண்டப வாயிலில் துவார பாலகர்கள். உள்ளே... ஸ்ரீசெந்நெறியப்பர். ஸ்ரீசாரபரமேஸ்வரர் என்றும் திருநாமம். திருமாலின் சாரப் பெருமாள் கோயிலும் இந்தத் தலத்தில் இருப்பதால், சிவனையும் சாரப்பெருமான் என்று அழைக்கத் தொடங்கி, இவ்வாறான திருநாமம் ஏற்பட்டதாம். பிறவித் துன்பத்தைத் தீர்த்து, நன்னெறியான முக்தியை வழங்குவதால், செந்நெறியப்பர்! மூலவர், வட்ட வடிவ ஆவுடையாருடன், உயரமான பாணத் துடன் திகழ்கிறார். ஆதிகாலத்தில், தௌமிய மகரிஷி இவரை வணங்கி முக்தி அடைந்தாராம்.
மீண்டும் கருவறையைச் சுற்றி வருகிறோம். தெற்குக் கோஷ்ட மாடங்களில்- விநாயகர், நடராஜர், மான்- மழு ஏந்திய சிவன், தட்சிணாமூர்த்தி; மேற்குக் கோஷ்டத்தில்- லிங்கோத்பவர்; வடக்குக் கோஷ்ட மாடங்களில்- ஸ்ரீபிரம்மா, ஸ்ரீதுர்கை, தனி மண்டபத்தில் ஸ்ரீசண்டிகேஸ்வரர்.
|