மலையை தரிசிப்பதும் மலையிலேயே வாசம் செய்வதும் தனி சுகம். இங்கே... மனசுக்கு நிம்மதியும் மூச்சுக்கு சுத்தமான காற்றும் கிடைப்பது நிச்சயம். எந்த இரைச்சலும் காதுகளை இம்சிக்காது. இதனால்தான், ஓங்கி உயர்ந்து நிற்கும் மலைப்பகுதியை ஞானிகளும், தபஸ்விகளும், சித்தர்களும் தேர்ந்தெடுத்தனர். அங்கேயே குடில் அமைத்து, அல்லது குகையையே குடிலாக்கி கடும் தவத்தில் ஈடுபட்டனர்.
சுகபிரம்ம முனிவரும் அப்படியரு மலையைத் தேர்ந்தெடுத்தார். அந்த மலை, சிவசொரூபமாகவே காட்சி தந்ததை கண்டு சிலிர்த்தார். மலையின் உச்சியில், சிவனாரை எண்ணி கடும் தவத்தில் மூழ்கினார். முன்னதாக, விஷ வண்டுகளோ பூச்சிகளோ தாக்காமல் இருப்பதற்கு, தான் அமர்ந்திருக்கும் இடத்தைச் சுற்றி அரண் அமைக்கவும் அந்த இடத்தைத் தண்ணீரால் சுத்தம் செய்யவும் எண்ணினார். மலை முழுவதும் சுற்றி வந்தும்கூட தண்ணீர் கிடைக்கவே இல்லை. 'தவம் செய்தால் வரம் தருவாய்; ஆனால் தவம் செய்வதற்கே வரம் பெற்றிருக்க வேண்டும் போல! கருணை காட்ட மாட்டாயா கயிலாசநாதா?!' என மனம் உருகிப் பிரார்த்தித்தார்.
'அவனருளாலே அவன் தாள் வணங்கி...' என்று சும்மாவா சொன்னார்கள்?! அங்கே... தரையில் இருந்து தண்ணீர் மெள்ள ஊற்றெடுத்தது. அந்த நீரை எடுத்து, முகம், கை-கால் அலம்பிக் கொண்டார்; கண்களில் ஒற்றிக்கொண்டார்; தலையில் தெளித்துக் கொண்டார்; கொஞ்சம் அள்ளியெடுத்துப் பருகினார். சிவலிங்கம் ஒன்றைப் பிரதிஷ்டை செய்து, அதனை அபிஷேகித்தார். பிறகு, தண்ணீரைக்கொண்டு தரையில் சதுரம் வரைந்தார். அந்தக் கட்டத்துக்குள் அமர்ந்து, தலைக்கு மேலே கரம் குவித்து, ஈசனை வணங்கிவிட்டு, தவத்தில் மூழ்கினார்.
இதில் மகிழ்ந்த சிவபெருமான், சுகபிரம்ம முனிவருக்கு தம்பதி சமேதராகக் காட்சி தந்தார். 'இங்கே ஜலம் இல்லாது போயிருப்பின், தவம் செய்வது தடைப்பட்டிருக்கும். தவம் செய்யாமல் இறை தரிசனம் கிடைத் திருக்குமா? நிச்சயம் கிடைத்திருக்காது. உமது கருணையே கருணை' என்று பலவாறு துதித்து, தனது மனக்குறையை தீர்த்து வைத்த சிவபெருமானை வணங்கித் தொழுதார் சுகபிரம்மர்.
|