ராசகேசரி எனும் ஊர், ராசகிரியாக மருவி, பிறகு இளங்காடாக மாறிவிட்டதல்லவா? அதேபோல் ஆதிகாலத்தில், மூலவரான பிரமாண்ட லிங்கத் திருமேனியர், ஸ்ரீவிஜயவிடங்கேஸ்வரர் எனத் திருநாமம் கொண்டிருந்தார். பிறகு, வெள்ளமோ அந்நியர்களோ... ஊருக்குள் அத்துமீறிப் புகுந்து கலைத்ததில், ஸ்ரீவிஜயவிடங்கேஸ்வரரைக் காணோம்; புதிதாக லிங்கத் திருமேனியைப் பிரதிஷ்டை செய்து, இளங்காடு என்பதால் இறைவனுக்கு ஸ்ரீபாலவனநாதர் என்று திருநாமம் சூட்டப்பட்டதாம்! எது எப்படியோ... இப்போது, இங்கே இரண்டு லிங்கமூர்த்தங்களைத் தரிசிக்கும் பாக்கியம், நமக்கு! ஆனால்... எல்லா பாக்கியங்களையும் தொலைத்துவிட்டுக் களையிழந்து காட்சி தருகிறது ஆலயம்.
கருங்கல் திருப்பணிக் கோயில் இது. இங்கேயுள்ள ஒவ்வொரு கல்லும், 'இரண்டு மூன்று முறை பாலாலயம் செய்தும், கும்பாபிஷேகம் மட்டும் பூர்த்தியாக வில்லையே...' என ஏக்கமும் துக்கமுமாக, மிச்ச சொச்ச பலத்தையெல்லாம் திரட்டிக்கொண்டு, விழாமல் நிற்பதே விந்தைதான். இங்கேயுள்ள அம்பாளின் திருநாமம்- ஸ்ரீபாலாம்பிகை! தாய்க்குத் தாயாக, சேய்க்கு சேயாக காட்சி தந்தருளும் கருணைத் தெய்வம்!
கிழக்கு நோக்கிய ஆலயம். ஸ்வாமியும் அம்பாளும் கிழக்குப் பார்த்தபடி, விடியலுக்காகக் காத்திருக்கும் தலம் இது. திருமணக் கோலத்தில் சந்நிதி கொண்டிருக்கும் ஆலயம் என்பதால், வணங்குவோருக்கு திருமண வரம் கிடைக்கும் என்பதில் மாற்றமில்லை. ஏதேனும் ஒரு திங்கட்கிழமை, இங்கே வந்து விஜயவிடங்கேஸ்வரரையும் பாலவனேஸ்வரரையும் பாலாம்பிகையையும் தரிசிக்க... நினைத்தவை யாவும் நடந்தேறும் என்பது நம்பிக்கை.
முக்கியமாக... அழகாகவும் உயிர்ப்பாகவும் நந்திதேவர் காட்சி தரும் அற்புதத் தலம். எனவே, பிரதோஷ நாளில், நந்தியம்பெருமானுக்கு அபிஷேகமும் அர்ச்சனையும் செய்து, நைவேத்தியமும் படைத்து, மனதாரப் பிரார்த்தியுங்கள்; சக்தி வேண்டுவோர்க்குச் சக்தியும், முக்தி வேண்டுவோர்க்கு முக்தியும் கிடைக்கும்; சகல ஐஸ்வரியங்களையும் பெற்று, நிம்மதியாக வாழலாம் என்பது உறுதி!
பெங்களூரு வாசகிக்கு நன்றி!
'திருக்காட்டுப்பள்ளி மற்றும் பழமார்நேரிக்கு அருகில் உள்ள இளங்காடு ஸ்ரீவிஜயவிடங்கேஸ்வரர் தலத்துக்கு, என் சகோதரர் என்னை அழைத்துச் சென்றார். அற்புதமான ஆலயம், சிதிலம் அடைந்த நிலையில் இருப்பதைக் கண்டு அழுதுவிட்டேன். சக்தி விகடனில் இந்த ஆலயம் குறித்து வெளிவந்தால், விஜயவிடங்கேஸ்வரர் கோயிலுக்கு விரைவில் கும்பாபிஷேகம் நடைபெறும் வாய்ப்புக் கிட்டும் என நம்புகிறேன். தயவுசெய்து அந்தக் கோயில் பற்றி எழுதுங்களேன்' என்று, வாய்ஸ் ஸ்நாப் மூலம் (044-4289 0021) தகவல் தெரிவித்திருந்தார் பெங்களூரு வாசகி புவனேஸ்வரி. அவருக்குச் சக்தி விகடன் சார்பாகவும், வாசகர்கள், ஆன்மிக அன்பர்கள் சார்பாகவும் நன்றி!
|
- வி. ராம்ஜி, படங்கள் கே. குணசீலன் |
|
|
|