தொடர்கள்
Published:Updated:

விளக்கு பூஜை: கோவை - பேரூர்

விளக்கு பூஜை: கோவை - பேரூர்


சிறப்பு கட்டுரை
விளக்கு பூஜை கோவை - பேரூர்
விளக்கு பூஜை: கோவை - பேரூர்

ல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது ஜோதி உள்ளது
பல்லக விளக்கது பலரும் காண்பது
நல்லக விளக்கது நமச்சிவாயமே!

- எனும் வரிகளுக்கு ஏற்ப, சக்தி விகடனின் 40-வது விளக்கு பூஜை, 30.7.10 அன்று கோவை-பேரூர் ஸ்ரீபட்டீஸ்வரர் ஆலயத்தில் இனிதே நடைபெற்றது. சக்தி விகடனும் நயஹாவும் இணைந்து நடத்திய விளக்கு பூஜை இது!

ஸ்ரீநடராஜர் சந்நிதியில் விளக்கு பூஜை நடந்ததைச் சொல்லிச் சொல்லிப் பூரித்தனர், பூஜையில் கலந்துகொண்ட வாசகியர்!

இடையர்பாளையத்திலிருந்து வந்திருந்த வாசகி விஜயலட்சுமி, ''இது, நான் கலந்துக்கற மூணாவது விளக்கு பூஜை. குடும்பத்துல பிரச்னை, இடம் வாங்கினதுல சிக்கல்னு குழப்பும் தவிப்புமா இருந்த நிலையெல்லாம் மாறி, ஒருகுறையும் இல்லாம இருக்கேன்னா, அதுக்கு சக்தி விகடன் நடத்தற திருவிளக்கு பூஜைல கலந்துக்கிட்டதுதான் காரணம்'' எனச் சிலிர்ப்புடன் தெரிவித்தார்.

ஒத்தக்கால் மண்டபத்தைச் சேர்ந்த வாசகி ராஜேஸ்வரி, ''பலமுறை முயன்றும், இந்தத் தடவைதான் விளக்கு பூஜைல கலந்துக்கற வாய்ப்பு கிடைச்சிருக்கு. என் பையனுக்கு நல்ல படியா கல்யாணம் நடக்கணும்; குணவதியான மருமகள் கிடைக்கணும்னு வேண்டிக்கிட்டேன். என் பிரார்த்தனை நிச்சயம் பலிக்கும்''

- நம்பிக்கை பொங்க சொன்னார். பிரார்த்தனை நிறைவேறியதன் அடையாளமாக, பூஜையில் பங்கேற்ற வாசகியருக்கு இந்த முறையும் மஞ்சள் சரடு, குங்குமம் மற்றும் வளையல்கள் கொண்ட பாக்கெட்டுகளை வழங்கிய கோவை வாசகி நிரஞ்சனி, ''தன்னோட வாசக குடும்பங்கள் குறையில்லாம, நிறை வோட வாழணுங்கறதுக்காக சக்தி விகடன் நடத்தும் இந்தத் திருவிளக்கு பூஜை மகத்தான காரியம். இதுல நானும் பங்கெடுத்துக்கறதுல பரிபூரண மகிழ்ச்சி!'' என்று பெருமிதம் பொங்கத் தெரிவித்தார்.

திருப்பூர் வாசகி இந்திராணி, ''அறிவிப்பைப் பாத்ததும், நாங்க குரூப்பா சேர்ந்து பூஜைல கலந்துக்கறதுக்குப் பதிவு பண்ணினோம். தொழில்நகரம்னு சொல்லப்படுற திருப்பூர்ல சாயப்பட்டறை பிரச்னை, வேலையில்லாத் திண்டாட்டம்னு அடிக்கடி ஏதாவது சிக்கலும் கவலையும் வந்துடுது! எல்லாருக்கும் வேலை கிடைக்கணும்; திருப்பூர் மக்கள் நிம்மதியா இருக்கணும். இந்தப் பிரார்த்தனையை பேரூர் பட்டீஸ்வரர் நிறைவேத்தி வைப்பார்னு நம்பிக்கை இருக்கு'' என்று உறுதியுடன் சொன்னார்.

பூஜை முடிந்து கிளம்பும் வேளையில் வாசகி மனோன்மணி, ''காரமடை ரங்கநாதர் கோயில்லயும் விளக்கு பூஜை நடத்துங்க. சக்தி விகடனோட விளக்கு பூஜைல கலந்துக்கிட்டதாவும் இருக்கும்; ரங்கநாதரை தரிசனம் பண்ணின மாதிரியும் இருக்கும்!'' என்று கேட்டுக்கொண்டார்.

அப்படியே நடத்திட்டாப் போச்சு!

- ம.பிருந்தா, படங்கள் வெ.பாலாஜி