அடுத்து, அங்கேயே கோயிலும் உருவா னது. அதையடுத்து, 'ஸ்ரீஜகத்குரு பத்ரி சங்கராச்சார்ய சமஸ்தானம் க்ஷேத்திர சகடபுர ஸ்ரீவித்யா பீடம்' மெள்ள மெள்ளத் தழைத் தோங்கியது! விஜயநகர மன்னர்களில் ஒருவரான ஸ்ரீவிரூபாக்ஷராயர் மற்றும் வேறு பல அரசர்களும் இந்தப் பீடத்துக்கென ஏராள மான நிலங்களைத் தானம் தந்துள்ளனர்.
இன்னும் சில சிறப்புகளும் இந்தப் பீடத்துக்கு உண்டு. தருமரிடம், 'இந்த இடத்துக்கு 'கோ பாதுகாஸ்ரமம்' என்று பெயர். நான் தவழ்ந்ததும், விளையாடியதும், வேணுகானம் இசைத்துப் பசுக்களை மேய்த்ததும் இங்கேதான்' என்று ஸ்ரீகிருஷ்ணர் கூறியதாக விவரிக்கிறது பிரமாண்ட புராணம். அதுமட்டுமின்றி, கண்ணுக்குத் தெரியாமல், இங்கே பூமிக்கடியில் 60 புண்ணிய நதிகள் ஓடுவதாகவும் ஸ்ரீகிருஷ்ணர் விவரித்துள்ளார். இந்தத் தலத்தில் தானம் செய்பவர்களுக்கு, தானத்தின் பலன் உடனே கிடைக்குமாம். இங்கே சித்தர்கள் பலர் தவம் செய்துள்ளதால், இதனை சித்தர் க்ஷேத்திரம் என்றும் போற்றுவர்.
வாமதேவ மகரிஷி தம்பதி, இந்தத் தலத்தில் சூர்ய யாகம் நடத்தியதன் பலனாக பிள்ளை பாக்கியம் பெற்றனராம். அந்தக் குழந்தைக்கு சுமேதாருணர் எனப் பெயர் சூட்டினர். சுமேதாருணர் வளர்ந்த தும் பிரம்மாவை எண்ணித் தவம் இருந்து, ''இந்த க்ஷேத்திரம் லோக க்ஷேமத்துக்குப் பயன்பட வேண்டும்'' என்று வரம் பெற்றாராம். வரத்துடன், சக்கரங்கள் பொருத்திய சிறிய வண்டி ஒன்றையும் தந்தார் பிரம்மன். இதனால், சுமேதாருணருக்குச் சகட மகரிஷி என்றும், இந்தத் தலத்துக்கு ஸ்ரீக்ஷேத்திர சகடபுரம் என்றும் பெயர் அமைந்ததாகச் சொல்கின்றனர்.
ஸ்ரீபத்ரிகாஸ்ரம ஜ்யோதிஷ் பீடத்தின் 32-வது சுவாமிகள் ஸ்ரீராமச்சந்திரானந்த தீர்த்த ஸ்ரீபாதர்; இவர் தேர்ந்தெடுத்த ஜகத்குரு ஸ்ரீவித்யாபிநவ ஸ்ரீகிருஷ்ணானந்த தீர்த்த மகாசுவாமிகள், தற்போதைய (33-வது) பீடாதிபதியாக, தனது 13-வது வயதில் பொறுப்பேற்றார்.
|