மற்ற எபிசோடுகள்
Published:Updated:

தசாவதார திருத்தலங்கள்! - 20

தசாவதார திருத்தலங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
தசாவதார திருத்தலங்கள்! ( தசாவதார திருத்தலங்கள்! )

தசாவதாரம் திருத்தலங்கள்


தொடர்கள்
தசாவதாரம் திருத்தலங்கள்!
தசாவதார திருத்தலங்கள்! - 20
தசாவதார திருத்தலங்கள்! - 20

பொங்கிப் பெருகி பாய்ந்து வரும் தாமிரபரணியாளிடம் வழக்கத்தைவிட அதிக ஆர்ப்பரிப்பையும் உற்சாகத்தையும் கண்டான் குபேரன்.

காட்டுப்பூக்களையும் பொதிகையின் மூலிகைகளையும் நீர்ப்பரப்பில் சுமந்தபடி, பெயருக்கேற்ப தாமிர வர்ணத்துடன் பாயும் அந்த நதிமங்கை... அன்றுமட்டும் சூரிய ஒளியில் தங்கமாய் தகதகப்பதுபோல் இருந்தது அவனுக்கு.

அகத்தின் அழகு புறத்திலும்! மகிழ்ச்சியில் லயித்திருக்கும் மனம், இயற்கையை அளவில்லாமல் ரசிக்கும்; அதன் அழகை வியக்கும்! குபேரனுக்குள்ளும் இனம்புரியாத மகிழ்ச்சி; ஒருவித பரவசம்.

'இன்று ஏதோ அற்புதம் நிகழப்போகிறது' என்று உள்மனம் சொல்ல, அந்த அற்புதத்தை எதிர்நோக்கியவனாக, தாமிரபரணியில் கால் நனைத்தபடி, அதன் அழகை ரசித்துக் கொண்டிருந்தான்.

'ஒவ்வொரு யுகத்திலும் ஒவ்வொரு நதி சிறப்பு பெறும். ஆனால், எல்லா யுகங்களிலும் சிறப்பு பெற்றவள் அல்லவா இவள்; பொருநை என்றும், மணி கர்ப்பணி என்றும் போற்றப்படும் இந்த நதியில் நீராட, உடல் மட்டுமல்ல... உள்ளமும் சுத்தமாகும் என்றல்லவா சொல்லி வைத்திருக்கிறார்கள். புண்ணியம் மிகுந்த இவளிடம் வசிக்கும் மீன்களும் பிற உயிர்களும் கொடுத்துவைத்தவைதான்!'

- தாமிரபரணியின் அழகை மட்டுமல்ல, அதன் மகிமையையும் நினைத்து வியந்துகொண்டிருந்த குபேரன், ஆற்றில் தொலைதூரத்தில் கலயம் ஒன்று மிதந்து வருவதைக் கண்டான். அது அருகில் வரும் வரை ஆவலுடன் காத்திருந்தான். கலயமும் குபேரனை தேடியே அங்கு வந்ததுபோல், வெகு வேகமாக நீரோட்டத்தில் மிதந்து வந்து அவனை நெருங்கியது!

சட்டென்று நீர்ப்பரப்பில் இருந்து கலயத்தைத் தொட்டுத் தூக்கியவன், அதனுள் இருந்த விக்கிரகத்தைக் கண்டு சிலிர்த்தான். உள்ளே... பூமகளாம் ஸ்ரீபூமாதேவியை மடியில் இருத்தி அணைத்தபடி அற்புதமாய் காட்சி தந்தது ஸ்ரீஆதிவராகரின் விக்கிரகத் திருமேனி.

குபேரனின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. உள்ளம் குதூகலிக்க விக்கிரகத்துடன் கரையேறியவன், ஆனந்தக் கூத்தாடினான்; நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினான்; கண்ணீர்மல்க ஸ்வாமியை கரம்கூப்பி தொழுதான்; மீண்டும் ஆற்றுக்குள் இறங்கி நீரெடுத்து வந்து அபிஷேகித்தான்; ஓடோடிச் சென்று மலர்களைப் பறித்து வந்து அர்ச்சித்தான்.

அன்று தொடங்கிய குபேரனின் வழிபாடு இன்றும் தொடர்வதாக ஐதீகம்!

லகிலேயே அதிக கருடசேவைகள் நிகழும் திருத் தலமும், கல்யாணபுரி, திருக்கரந்தை என்றெல்லாம் புராணங்கள் சிறப்பிக்கும் புண்ணியபூமியுமான கல்லிடைக் குறிச்சியில்தான், குபேரன் வழிபட்ட அந்த ஆதிவராகர் கோயில் கொண்டிருக்கிறார். திருநெல்வேலியில் இருந்து சுமார் 22 கி.மீ. தொலைவில், அம்பாசமுத்திரம் அருகில் உள்ளது கல்லிடைக்குறிச்சி.

இரண்யாக்ஷனை வதம் செய்து பூமியைக் காப்பாற்றிய ஸ்ரீவராகமூர்த்தி மேலுலகம் கிளம்ப யத்தனித்தபோது, தன்னிடத்திலேயே தங்கி, உலக மக்கள் செழிப்புற அருள் புரிய வேண்டும் என்று பூமாதேவி வேண்டிக் கொண் டாளாம். அதன்படி, ஸ்ரீஆதிவராகர் கோயில் கொண்ட தலம் இது என்கின்றன ஞானநூல்கள். இந்தத் தலம் குறித்து வேறு சில புராணத் தகவல்களும் உண்டு.

இந்தப் பகுதியில் வசித்த விஷ்ணுதர்மன் எனும் மன்னன் ஒருவன் அஸ்வமேத யாகம் செய்தானாம். சிவபெருமான், பிரம்மன் போன்றோரும் இந்திரன், குபேரன் உட்பட தேவாதிதேவர்களும் முனிவர்களும் சங்கமித்திருந்த யாகசாலைக்கு, ஸ்ரீமகாவிஷ்ணு வும் விஜயம் செய்தார். விஷ்ணுதர்மன், சங்கநாதமும் ஜயகோஷமும் முழங்க, அவரை பூக்களால் அர்ச்சித்து வழிபட்டான். யாகமும் இனிதே நிறைவேறியது.

தசாவதார திருத்தலங்கள்! - 20

தேவர்கள் மன்னனை வாழ்த்தி விடைபெற, அவனை ஆசீர்வதித்த குபேரன், ''ஸ்ரீமகா விஷ்ணுவை, யக்ஞபாத்திரங்களையே அவயவங்களாகக் கொண்ட ஸ்ரீவராக மூர்த்தியாக ஸ்தாபித்து வழிபட்டு, சகல நலன்களும் அடைவாய்'' என்று அருளி னாராம். அதன்படியே மன்னன் வழிபட்ட தாகவும், அவனது வேள்வியில் பயன்பட்ட பாத்திரங்கள் யாவும் சிலா ரூபமாகவே மாறிப்போனதாகவும், இதனால் இந்தத் தலத்துக்கு 'சிலாசாலிபுரம்' என்று பெயர் வந்ததாகவும் தாமிரபரணி மகாத்மியம் விவரிக்கிறது.

இந்தத் தலத்தின் அருகிலுள்ள ஸ்ரீவராக தீர்த்தத்தில் கண்டெடுத்து, வீரசேன மகாராஜா வால் பூஜிக்கப்பட்ட ஸ்ரீஆதிவராகரின் விக்கிரகத்தை, குபேரன் பிரதிஷ்டை செய்து வழிபட்டதாகவும் ஒரு தகவல் உண்டு.

இப்படி பல்வேறு கதைகள் இருந்தாலும், அவை அனைத்தும் குபேரன் இங்கு வழிபட்டதை உறுதி செய்கின்றன. ஆக... கல்லிடைக்குறிச்சியில் கோயில் கொண்டிருக்கும் ஆதிவராகரை தரிசித்து வழிபட, குபேர சம்பத்துகள் கிடைக்கும்!

கிழக்கு நோக்கி அழகுற அமைந்திருக்கிறது ஸ்ரீஆதிவராகர் ஆலயம். கோபுர வாயிலைத் தாண்டி உள்ளே நுழைந்தால், இரண்டு புறமும் மண்டபங்கள். அவற்றுக்கு நடுவே... பலிபீடம், கொடிமரம் ஆகியவற்றை தரிசித்து, மங்கள வடிவினரான ஸ்ரீகருடாழ்வாரை வழிபட்டு, அர்த்த மண்டபத்தை அடையலாம். வேலைப்பாடுகள் மிகுந்த இந்த மண்டபத்தில் ஸ்ரீதேவி- பூதேவி சமேதராக அருள்கிறார், உற்ஸவர் ஸ்ரீலட்சுமிபதி. தேவர்கள் மற்றும் ரிஷிகளின் வேண்டுகோளின்படி, கல்யாணத் திருக் கோலத்தில் எழுந்தருளிய ஸ்வாமியாம் இவர். கல்யாண வரம் வேண்டும் பக்தர்கள் இவருக்கு திருமஞ்சனம் செய்விப்பதாக பிரார்த்தித்துக்கொள்கிறார்கள்.

கருவறையில் பூமகளுடன் ஸ்ரீஆதிவராகர் தரிசனம்!

'வருந்தா வகைதம்மை வந்தடைந்தார்க்கு வரங்களெ லாந் தருந்தாமரைக் கண்ண ராதி வராகர்...' என்று திருக்கரந்தை ஆதிவராகர் வருக்கக்கோவையும், 'ஸ்ரீலக்ஷ்மி வராக பஜேஹம்...' என்று துவங்கி, இசை மும்மூர்த்தியருள் ஒருவரான முத்துஸ்வாமி தீட்சிதரும் போற்றியது இவரைத்தானே... குபேரன் வணங்கி வழிபட்டதும் இந்தப் பெருமாளைத்தானே..!

தசாவதார திருத்தலங்கள்! - 20

மேலிரு திருக்கரங்களில் சங்கு- சக்கரம் திகழ, கீழ் இடக் கரத்தால் ஸ்ரீபூதேவியை அணைத்தபடி, கீழ் வலக்கரத்தால் அபயம் அருளும் ஆதிநாயகனைக் காணக் காண... அன்று குபேரன் அடைந்த பரவசம் நம்மையும் ஆட்கொள்கிறது!

நிலம் தொடர்பான பிரச்னைகள் தீரவும், புதிதாக வீடு- மனை வாங்க விரும்பியும், தடைகள் நீங்கி விரைவில் கல்யா ணம் நடைபெறவும் ஸ்ரீஆதிவராகரை மனமுருகி வழிபட்டுச் செல்கிறார்கள் பக்தர்கள். தங்களது பிரார்த்தனை பலித்ததும் நைவேத்தியம் சமர்ப்பித்தும், திருமஞ்சனம் செய்வித்தும், கருட வாகனத்தில் ஸ்வாமியை எழுந்தருளச் செய்து வீதியுலா நிகழ்த்தி யும் தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர். எனவே, இங்கு கருடசேவை உற்ஸவம் அதிகமாம்!

நாமும், 'வளமான வாழ்வும் வஞ்சனையில்லா மனமும் தந்து உலக மக்களைக் காப்பாற்றுவாய் இறைவா' என்று ஆதிவராகரை வணங்கி வரம் கேட்டு நகர்கிறோம்.

பிராகார வலத்தில்... தசாவதார சந்நிதி, ஸ்ரீலட்சுமிதேவி, ஸ்ரீபூமாதேவி, பன்னிரு ஆழ்வார்கள் ஆகியோரை தரிசிக்கலாம். வெளிப் பிராகாரத்தில், வடகிழக்கு மூலையில் உள்பிராகாரச் சுவரின் மேல் ஸ்ரீகருடாழ்வார் காட்சி தருகிறார். ஒவ்வொரு கருட சேவையின் போதும் மாலை வேளையில், இவருக்கு புஷ்பாங்கி சார்த்தி வழிபாடுகள் நடைபெறும். இதில் கலந்துகொள்வது சிறப்பு. இந்தப் பிராகாரத்திலேயே ஸ்ரீதர்மசாஸ்தாவும் குடியிருக்கிறார்.

கோபுரவாசலுக்கு அருகே வலப்புறத் தில் குறுகிய படிக்கட்டுகள். ஏறி மேலே சென்றால், கருவறைக்கு மேல் ஒரு மணி மண்டபம். உள்ளே ஆதிசேஷனின் மீது பள்ளிகொண்டிருக்கும் ஸ்ரீஅனந்த சயனர். திருவடியில் பூமாதேவியும் திருமகளும் வீற்றிருக்க, நாபிக்கமலத்தில் பிரம்மனும், அருகில் மார்க்கண்டேயர், அருணன், கருடன் ஆகியோரும் திகழ திவ்விய தரிசனம் தருகிறார்.

அனுதினமும் ஸ்ரீஆதிவராகருக்கான திருமஞ்சன ஆராதனைகள் முடிந்ததும், பக்தர்கள் இவரைத் தரிசிக்க முடியும். வைகுண்ட ஏகாதசி தினத்தில் மட்டும் நாள் முழுக்க இந்தப் பெருமாளின் சந்நிதி பக்தர்களுக்காக திறந்திருக்குமாம்.

தாமிரபரணியில் தினமும் தீர்த்தம் எடுத்துவரப்பட்டு ஸ்வாமிக்கு திருமஞ்சனமும்; சித்திரை- பிரம்மோற்ஸவம், வைகாசி வசந்தோற்ஸவம் உட்பட பல்வேறு விழாக்களுமாக திகழ்கிறது இந்தத் திருக்கோயில்.

நெல்லைச் சீமைக்குச்செல்லும் போது, குபேரன் வழிபட்ட ஆதி வராகரை நீங்களும் வழிபட்டு வாருங்கள். வறுமைகள் நீங்கி, உங்கள் வீட்டில் குபேர சம்பத்து பெருகும்!

- அவதாரம் தொடரும்...
படங்கள் எல். ராஜேந்திரன்