அந்த ஊர், பாதிரி மரங்கள் சூழ்ந்த வனப்பகுதியாகத் திகழ்ந்தது. அங்கே, காவிரி சுழித்துக்கொண்டு ஓடும் அழகே அழகு! வனமும் நீர்நிலையும் விளைநிலமும் கொண்ட அந்தப் பகுதியில் வசிக்க அனைவரும் விரும்பினர். அந்த ஊரில் பிரமாண்ட சிவாலயம் ஒன்றும் இருந்தது.
கோயிலுக்குத் தெற்கே, ஒரு குடிசையில் கோயில்கொண்டிருந்தாள், காளியம்மன். ஆனால், அடிக்கடி தீப்பிடித்து குடிசையின் கூரை எரிந்துபோகும். புதிதாக கூரை வேய்ந்தாலும், அதுவும் சில நாட்களில் எரிந்து சாம்பலாகிவிடும்! ஊர் கவலைப்பட்டது. 'எதுனா சாமி குத்தமா இருக்குமோ?' என நடுங்கியது. காஞ்சி சங்கராச்சார்யரிடம் ஆலோசனை கேட்கலாம் என முடிவு செய்தது. அப்போது, கும்பகோணத்தில் உள்ள சங்கரமடத்துக்கு திக்விஜயம் செய்திருந்தார், அன்றைய பீடாதிபதியாக இருந்த காஞ்சி சங்கராச்சார்யர். ஊர்மக்கள் சென்று அவரை வணங்கி, தங்கள் கவலையை விவரித்தனர்.
அதாவது... ஒரு அதிகாலை வேளையில், காவிரி நதியில் மிதந்து வந்த மரப்பெட்டி ஒன்று, பாதிரிவனப் பகுதியின் கரையில் ஒதுங்கியது. துவைக்க வந்தவர்களும், குளிக்க வந்தவர்களும், நீராடித் தவம் செய்ய வந்தவர்களும், ஆடு-மாடுகளைக் குளிப்பாட்ட வந்தவர்களும், பெட்டி ஒதுங்கியதைக் கண்டு ஒன்றுசேர்ந்தனர். அப்போது, கூட்டத்தில் இருந்த சிறுமி ஒருத்திக்குள் புகுந்த அம்மன், 'நான்தான் காளி வந்திருக்கிறேன். என்னை இங்கே வைத்து வழிபடுங்கள்' என்று சொல்லிச் சென்றாள். அதன்படி, சின்னதாக குடிசை அமைத்து, அந்தப் பெட்டியை அங்கே வைத்து வழிபட்டு வந்தனர். ஆனால், யார் கண்பட்டதோ... அடிக்கடி குடிசை எரிவதும் புதுக் குடிசை அமைப்பதும் தொடர்ந்தது என்று காஞ்சி சங்கராச்சார்யரிடம் புலம்பினர்.
அதைக் கேட்டதும், பாதிரிவனத்துக்கு அவர்களுடன் சென்றார் சங்கராச்சார்யர். அந்தப் பெட்டியைத் திறந்து பார்த்தார். அங்கே... இடுப்புக்கு மேலுள்ள திருவுருவமும், எட்டுக் கரங்களும் கொண்டு காட்சி தந்தாள் காளியம்மன். அவளது திருவுருவத்தைக் கண்டு சிலிர்த்து வணங்கிய சுவாமிகள், ''இவள் உக்கிரத்துடன் இருக்கிறாள். எனவே, பெட்டியுடன் இவளை எடுத்துச் சென்று, ஸ்ரீசுந்தரேஸ்வரர் ஆலயத்தில் வைத்து வழிபடுங்கள். அவளது உக்கிரமும் தணியும்; உங்கள் ஊரும் செழித்து வளரும்!'' என்றார். அத்துடன், காளிதேவிக்கு ஸ்ரீசுந்தர மகாகாளி என்று திருநாமமும் சூட்டினார். சுமார் 200 வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்த சம்பவம் இது.
|