தம்பியுடனும் தாரத்துடனும் கானகத்துக்கு வரும் ராமனை உள்ளன்புடன் உபசரிக்கிறான் குகன். அவனது வேண்டுகோளை ஏற்று, கங்கைக் கரையில் இரவைக் கழிக்கும் அவர்கள், காலையில் கங்கையைக் கடப்பதற்காக குகனின் ஓடத்தை நெருங்குகின்றனர்.
அப்போது, ''ஐயா, மன்னியுங்கள். என் படகில் ஏறத் தங்களை அனுமதிக்க இயலாது'' என்று தடுக்கிறான் குகன். அதைக் கேட்டு ஸ்ரீராமன் அதிர்ச்சியுற, குகன் தொடர்ந்து கூறுகிறான்...
''ஓடங்களை நம்பியே பிழைப்பு நடத்தும் ஏழைகளான நாங்கள், உங்கள் பாததூளி பட்டுக் கல்லும் பெண்ணாக மாறிய அற்புதத்தை அறிவோம். பாறைகளையே பெண்ணாக உருமாற்றும் உங்கள் கால் தூசியின் சக்திக்கு முன்னால், எங்களின் மர ஓடங்கள் எந்த மூலைக்கு?! எனவே ஐயனே, புழுதியில் நடந்து தூசு படிந்திருக்கும் தங்களின் திருப்பாதங்களை நீரினால் கழுவிவிடாமல், என் படகில் கால் பதிக்கத் தங்களை அனுமதிக்க இயலாது!''
சாபத்தால் கல்லாகிப்போன அகலிகை, ஸ்ரீராமனின் கால் தூசு பட்ட மாத்திரத்திலேயே விமோசனம் பெற்றதைச் சுட்டிக்காட்டி, அப்பேற்பட்ட பாதங்களைத் தொட்டு நீராட்டி பாத பூஜை செய்யும் பாக்கியத்தைத் தனக்கு அளிக்கவேண்டும் என்பதைத்தான் அப்படி அழகாக வேண்டுகிறான் குகன். அன்பில் நெகிழும் அண்ணலின் பாதங்களை ஆசை தீர நீராட்டி, அந்த நீரைத் தன் தலை மீது தெளித்துத் தன்னைப் புனிதப்படுத்திக்கொண்டு மகிழ்கிறான்.
இவ்வாறு வளமான கற்பனையுடன், ஸ்ரீராமனின் மேன்மையை மிக அற்புதமாக வர்ணித்த அந்த பக்த கவிஞர், துளசிதாசர்!
உத்தரப்பிரதேச மாநிலத்தில் ராஜாபூர் என்ற இடத்தில், 1532-ஆம் ஆண்டு, சிரவண சுக்ல சப்தமி அன்று, ஆத்மா ராம் தூபே- ஹுலஸி பாய் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார் துளசிதாஸர். குழந்தைக்குத் 'துலாராம்' என்று பெயர் சூட்டப்பட்டது. பிறந்த சில நாட்களிலேயே அன்னையை இழந்தான் துலாராம். ஜோதிடத்தில் நம்பிக்கை கொண்ட தந்தையோ, மகன் ராசியில்லாதவன் எனத் தீர்மானித்து, இளம் வயதிலேயே அவனை விட்டுப் பிரிந்து சென்றார்.
வயதான பாட்டியிடம் வறுமையையும், துயரத்தையுமே நட்பாகக் கொண்டு வளர்ந்தான் துலாராம். அந்தப் பாட்டியும் விரைவிலேயே காலமாகிவிட, ஊரிலிருந்த ஆஞ்சநேயர் ஆலயத்தையே இருப்பிடமாகக் கொண்டு, மக்கள் அளித்த பிரசாதங்களை உண்டு பிழைத்தான்.
ஆனால், இப்படியரு சாதாரண வாழ்க்கைக்காக இறைவன் அவனைப் படைக்கவில்லை!
நரஹரிதாஸ் என்பவர் சிறந்த பண்டிதர். புராணக் கதைகளை, காவியச் சுவையுடன் பாடல்களும் கலந்து சொல்வதில் வல்லவர். ஒருமுறை ராஜாபூருக்கு வந்தவர், ஆஞ்சநேயர் ஆலயத்தில் தங்கியிருந்து, ராமாயண உபந்யாசம் செய்யத் தொடங்கினார். அவர் மூலம், ராம கதையைக் கேட்கும் பாக்கியம் பெற்ற துலாராமின் உள்ளத்தில் பக்தி பெருக்கெடுத்தது. திறந்த வாய் மூடாமல் ராம கதையைக் கேட்டவன், அது தொடர்பான பக்திப் பாடல்களை இனிய குரலில் பாடி ஆனந்தத்தில் திளைத்தான்.
அவனைக் கண்டு வியந்து, அவன் மேல் பெரும் அன்பு கொண்ட நரஹரிதாஸ், அவனைத் தன் சீடனாக ஏற்றார். அவருடனேயே இருந்து வேதங்களையும் புராணங்களையும் கற்றான் துலாராம்.
சீடனின் வளர்ச்சி கண்டு மகிழ்ந்த ஆசான், அழகிலும் குணத்திலும் சிறந்த ரத்னா வளி என்ற மங்கையை அவனுக்கு மணமுடித்து வைத்தார். நல்ல முறையில் இல்லறம் நடத்தும்படி ஆசி கூறிச் சென்றார்.
|