கண்களைச் சுருக்கிக்கொண்டு பையன்கள் இருட்டுக்குள் உற்றுப் பார்த்தார்கள். ஆள் இருப்பதைக் கண்டு கொண்டார்கள். இந்த முறை எப்படியேனும் மேலே படும்படி அடித்து, இம்மியேனும் அசைத்து விடவேண்டுமென்ற ஆவேசத் தோடு, கற்கள் பொறுக்கி வீச ஆரம்பித்தார்கள். இப்படி அவர்கள் கல் வீசுவது பாலசுவாமியை நோக்கி மட்டுமல்ல; இதற்கு முன் பல பேரை நோக்கி எறிந்திருக்கிறார்கள். திருவண்ணா மலையில் வானம் பார்த்துச் சிரித்துக்கொண்டும், இடுப்பில் கை வைத்தபடி நடந்தவாறு தனக்குத்தானே பேசிக்கொண்டும் இருக்கின்ற சேஷாத்ரி சுவாமிகளைப் பார்த்தாலும் கல் விட்டு எறிவார்கள்.
'பைத்தியம்தான் தனக்குத்தானே பேசும்; பைத்தியம் தான் வானம் பார்த்துப் பேசும்' என்று அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்டிருந்தது. தன்னுள் கவனித்துப் பேசுவது என்பது, தனக்குத் தானே பேசுவது போல் தோன்றும் என அவர்களுக்கு யாரும் சொல்லிக் கொடுக்கவில்லை. சொல்லித் தரக்கூடிய வலிமை அவர்களைச் சார்ந்தோருக்கு இல்லை. எனவே, சாதுக்கள் மீது கல் எறிவது அவர்களுக்கு ஆனந்த விளையாட்டாக இருந்தது. அப்படி அடிபட்டு அவஸ்தைப்பட்ட சேஷாத்ரி சுவாமிகள், இப்போது யார் அடி வாங்குவது என்று தவித்து, வேகமாக மண்டபத்துக்குப் பாய்ந்தோடினார். பையன்களை அதட்டி விரட்டினார்.
'உள்ளே யார்?' என்று குரல் கொடுத்தார். ஆள் இருப்பது தெரிந்தது. அசைவில்லை.
மௌன சுவாமியையும், பழனி சுவாமியையும் குரல் கொடுத்து அழைத்தார். இருவரும் வந்தனர். உள்ளே போய், மெள்ள பால சுவாமியைத் தூக்கிக்கொண்டு வெளியே வந்தார்கள். மண்டபத்தில் உட்கார வைத்தார்கள். பின் பக்கம் முழுவதும் எறும்பால் அரிக்கப்பட்டிருந்தது. பூச்சியால் கடிக்கப்பட்டிருந்தது. ரணம் அதிகமாகி, சீழ் கோத்துக் குதறிக் கொண்டிருந்தது.
'இது எவ்வளவு வலி கொடுக்கும்! இந்த வலியைப் பொறுத்துக்கொண்டு தன்னை மறந்து இருக்க முடியுமா! இத்தனை கல் வீச்சை தாங்கிக்கொண்டு இருக்கமுடியுமா! என்ன மாதிரி சுவாமி இது! என்ன தபஸ் இது! எப்படி கிடைத்தது!'
ஆச்சரியப்பட்டார்கள். எழுப்பி நிற்க வைத்து, மருந்து போட்டார்கள். மெள்ளக் கைத்தாங்கலாய் அழைத்துக் கொண்டு வந்து, நந்தவனத்தில் உட்கார வைத்தார்கள். சோறு கொடுத்தார்கள்.
'இந்தத் தவத்தைக் கலைக்க வேண்டாம். இருக்கட்டும்' என்று சேஷாத்ரி சுவாமிகள் சொல்ல, வேளாவேளைக்கு உணவு மட்டும் கொடுத்துக் கவனித்து வந்தார்கள். ஆனால் அங்கும் தொந்தரவு தொடர்ந்தது.
'அங்கே தப்பிச்சுட்டே! இங்கே இருக்க விடுவோமா!' இன்னொரு போக்கிரிக் கும்பல் சேர்ந்துகொண்டது. பிறரைக் கொடுமை செய்து பழகி, அதில் இன்பம் கண்டுவிட்டால், பிறகு விடுவது கடினம். எந்த நேரமும் மனம் கொடுமையைப் பற்றியே நிற்கும். இது பூர்வஜென்ம கர்மா. போன ஜென்ம சாபம். ஒற்றைச் சாபம் நூறாய் பெருகி, அட்டகாசம் செய்வதற்குண்டான தூண்டுதல்.
உயரமான அரளிச்செடிகள் கூடிய அந்த நந்தவனத்தில் ஏதேனும் ஒரு மரத்தடியில் கண் மூடி பால சுவாமிகள் இருப்பார். பிறகு, விழித்துப் பார்க்கும்போது, வேறொரு மரத்தடியில் கிடப்பதை உணர்வார்.
எப்படிப் போனோம், எது நடந்தது, எது நகர்ந்தது, எப்படி நகர்ந்தோம் என்று தெரியாமல், மறுபடி கண் மூடி அமர்வார். எத்தனை தொந்தரவுகள் வந்தபோதும், எத்தனை வேதனைகள் வந்தபோதும் தவம் கலையவில்லை; மனம் ஒருமையிலிருந்து நீங்கவில்லை; வைராக்கியம் குறையவில்லை.
இல்லை... அது தவம்கூட இல்லை. தவம் குறிக்கோள் உடையது. எந்த இலக்கும் இல்லாமல் தன்னையே அவதானித்து, தனக்குள்ளேயே மூழ்கிக்கிடக்கின்ற மிகப் பெரிய பேரானந்தத்தை, அந்த பாலசுவாமி இடையறாது அனுபவித்துக் கொண்டிருந்தார். அண்ணாமலையார், அவருக்கு இன்னும் நிம்மதியான ஓர் இடம் தரவேண்டும் என்று ஆசைப்பட்டார். அதற்குண்டான மனிதர் கள் நகர்ந்து, பால சுவாமியை நோக்கி வரத் துவங்கினார்கள்.
கடவுளிடம் தன்னை ஒப்படைத்தவருக்கு எந்தக் கவலையும் இல்லை. கடவுள் அவரை மிக நிச்சயம் காப்பாற்றுவார். எப்படிக் காப்பாற்றுவார்? அது கடவுளுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்!
|