காஞ்சி முனிவரைப் பற்றிச் சொல்லும்போதே, அந்தப் பழைய நினைவுகளில் மூழ்கி, மெய்ம்மறந்துவிடுகிறார் பட்டாபி சார். நெகிழ்ச்சி மிகுதியில், அவரது கண்களில் தேங்கி நிற்கிறது நீர்.
''வைதீகம் கலந்த பொதுக்காரியங்களில், அவரவருக்குண்டான தர்மத்தையும் கர்ம அனுஷ்டானங்களையும் விட்டு விடாமல் கடைப்பிடிக்க வேணும்னு அடிக்கடி சொல்லுவா பெரியவா! 25, 30 வருஷத்துக்கு முன்னே, ஜீவாத்மா கைங்கர்ய சபைன்னு ஒண்ணு ஆரம்பிச்சார். அனாதை பிரேத சம்ஸ்காரம் பண்றது ரொம்ப முக்கியம்கிறது பெரியவா கருத்து. ஆஸ்பத்திரிலேருந்தும் போலீஸ்கிட்டேருந்தும் சில தருணங்கள்ல தகவல் வரும். அதுக்கு, அரசு சட்டப்படி என்ன உண்டோ அத்தனையும் செய்துட்டு, அந்த அனாதை இந்துப் பிரேதத்துக்கு, கங்கா ஜலத்தை புரோக்ஷணம் (தெளித்தல்) செஞ்சு, தகனம் பண்ண ஏற்பாடு செய்தார், பெரியவா! இது, அரசாங்கத் துக்கும் பெரிய உதவியா இருந்துது.
இந்த அமைப்புல 50-60 வாலன்டியர்ஸ் இருந்தாங்க. எல்லாரும் இளவட்டப் பசங்க. பெரியவா சொல்லிட்டா, தயக்கம் இல்லாம, எடுத்துச் செய்யறதுக்குக் காத்துட்டிருப்பாங்க எல்லாரும்! இப்பவும் இந்தக் சேவை தொடர்ந்துண்டிருக்கு. ஆனா, முன்போல வாலன்டியர்ஸ் கிடைக்கறதுதான் கஷ்டமா இருக்கு.
'இறந்து போனவர் யாரோ... அவர் நமக்குச் சொந்தமோ பந்தமோ கிடையாது. அதுக்காக, யாரோ ஒருத்தர்தானேன்னு சும்மா இருந்துடலாமா? இந்துவா இருந்தா, முறைப்படி பிரேத சம்ஸ்காரம் செஞ்சுதானே ஆகணும்?'னு பெரியவா ஆதங்கப்படுவா. இறந்த வங்க மேலயே அப்படியரு கருணை அவருக்கு இருந்துதுன்னா, உயிரோடு இருக்கிறவா மேல பெரியவா காட்டற கருணைக்குக் கேக்கணுமா? சிறைக்கைதிகளோட குழந்தைகளுக்கு யூனி ஃபார்ம், புஸ்தகம்லாம் வாங்கிக்கொடுக்க ஏற் பாடு பண்ணினார். கைதிகளோட மனைவிமார் களுக்கு உடம்பு சரியில்லைன்னா, சிகிச்சை தரவும் ஏற்பாடு பண்ணினார். இதுக்காகவே, கும்பகோணத்துல அத்வைத சபான்னு ஒண்ணு ஆரம்பிச்சு நடத்திண்டு வந்தார்.
வாக்யார்த்த சதஸ் அங்கே அடிக்கடி நடக்கும். இதுவும் மகா பெரியவா ஆரம்பிச்சு வைச்சதுதான். இங்கே, நல்ல விஷயங்களை நுணுக்கமா ஆராய்ஞ்சு பேசுவா. பிரதோஷம், தீபாவளி, சங்கராந்தி மாதிரி நாட்கள்ல ஜெயிலுக்குப் போய், அங்கே இருக்கிற கைதிகளுக்கு நல்ல மனசு அமைஞ்சு, அவாளும் நல்லபடியா வாழணும்கற நோக்கத்தோடு, பகவானைப் பத்தி விவரிச்சு, நீதி போதனைகள் சொல்லிட்டு வருவோம்.
அதேபோல, ஆஸ்பத்திரிகளுக்குப் போய் நோயா ளிகள்கிட்ட, அவங்க விருப்பத்தோடு ராம நாமம், சிவ நாமம்லாம் சொல்லி, அட்சதை, விபூதி, குங்குமம் கொடுப்போம். இதுலேயே அவாளோட வியாதி பாதி குணமாகிடும். 'டெர்மினல் பேஷன்ட்ஸ்'னு சொல்லுவாளே, அப்படிக் கடைசி கட்டத்துல இருக்கிற நோயாளிகளுக்குப் பக்கத்துலயே உட்கார்ந்து ஜபம் பண்ணி, பத்துச் சொட்டு கங்கா ஜலத்தை அவாளுக்குக் குடிக்கக் கொடுப்போம்.
|