வைஷ்ணவர்களை ஆசீர்வதித்தார்; பட்டர் களுக்குக் கைங்கர்யங்களை வகுத்துக் கொடுத்தார்; அவர்களை பகவத் பாகவத காரியங்களில் ஈடுபடச் சொன்னார். மேலும் அனுகூலர், பிரதிகூலர், அநுபயர் என மூவரைப் பற்றி விவரித்தார். அனுகூலர் என்றால், வைஷ்ணவர்கள்; பிரதிகூலர் என்றால், பகவத் துவேஷிகள்; அநுபயர் எனில், சம்சாரிகள். அனுகூலரைக் கண்டால், குளிர்ந்த நிலவைக் கண்டது போல், தென்றலின் சுகத்தை உணர்ந்ததுபோல் இருக்க வேண்டும்; பிரதிகூலரைக் கண்டால், சர்ப்பம் (பாம்பு) மற்றும் அக்னியைக் கண்டால் எப்படி ஜாக்கிரதையாக இருப்போமோ, அப்படி அவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்; சம்சாரிகளைக் கண்டால், அவர்களுக்கு ஆத்மஞானத்தை உபதேசித்தும், அவர்களுக்காக மனமிரங்கியும் செயல்படவேண்டும் என்று தெரிவித்தார் ஸ்ரீராமானுஜர். அத்துடன், ஒவ்வொரு வைணவனும் என்னென்ன செய்யவேண்டும் எனப் பட்டியலிட்டார் உடையவர்.
ஸ்ரீபாஷ்யத்தை வாசிக்கவேண்டும்; அதற்கான திறன் இல்லையெனில், பிரபந்தங்களைப் படிக்கவேண்டும்; அதும் இயலாத காரியம் எனில், திவ்விய தேசங்களில் பெருமாளுக்கு அமுதுப்படி, சாத்துப்படி அளிக்கவேண்டும்; இதுவும் இயலாதவர்கள், திருநாராயணபுரத்தில் குடிசை அமைத்தேனும் வாழவேண்டும்; இயலாதபட்சத்தில், த்வயத்தை உணர்ந்து, மனனம் செய்யவேண்டும்; இவை எதையுமே செயல்படுத்த முடியாதவர்கள், எம்பெருமானின் பரமபாகவதனை நமஸ்கரித்து, அவரது அபிமானத்தைப் பெறவேண்டும் என அறிவுறுத்தினார் ராமானுஜர். அதையடுத்து, பெரியபெருமாளின் திருவடியை தியானித்தார்; ஆளவந்தாரை பிரார்த்தித்தார்; பரவாஸூதேவரை நமஸ்கரித்தார். அதே நேரம், அங்கே இருந்தவர்கள் திருமந்திரம், த்வயம், அருளிச் செயல்கள், வேதங்கள், புராண- இதிகாசங்கள் ஆகியவற்றைப் பாராயணம் செய்தனர். அந்த மகாபுண்ணியரை வழியனுப்ப அனைவரும் திரண்டிருந்தனர். ஆனால் ராமானுஜரோ தேஜோமயமான திருமுகத்துடன், பெரியநம்பி மற்றும் கூரத்தாழ் வானை நினைத்தபடி வடுகநம்பியின் மடியில் படுத்திருந்தார். ஸ்தூல சரீரமாகவும் சூட்சும சரீரமாகவும் உள்ள பிரக்ருதியை, பழைய வஸ்திரத்தைக் கழிப்பதுபோல, சிரமம் ஏதுமின்றி, திருமேனியில் இருந்து தனது உயிரை விண்ணுலகம் அனுப்ப... அங்கே ஆத்மஜோதி கிளம்பிற்று! தனது 120-வது வயதில் (கி.பி.1137), தாம் அவதரித்த பிங்கள வருடத்தில், மாசி வளர்பிறை தசமி திதியில், திருவாதிரை நட்சத்திரத்தில், சனிக்கிழமை நண்பகலில், பரமபதம் அடைந்தார் ராமானுஜர்!
'உண்மையில், ஆன்மாவுக்கு பந்தமும் இல்லை; விடுதலையும் கிடையாது. துன்பம், காமம், இன்பம் ஆகியவை, உடல் எடுப்பதால் ஏற்படுபவை. மனிதனின் அறியாமையால்தான் பந்தமும், அதனால் துன்பமும் ஏற்படுகிறது. ஞானத்தால் விடுதலை கிடைக்கிறது. மனித ஆன்மா என்னுடைய பிரதிபலிப்பு; என்னில் ஒரு அங்கம்! எப்படிப் பாத்திரத்திலுள்ள நீரில் சூரியனின் பிம்பம் தெரிகிறதோ, அதுபோல் எல்லா உயிர்களிலும் 'நான்' கலந்து நிற்கிறேன்' என்கிறது உத்தவ கீதை.
தன்னிடம் மாறாப் பற்று கொண்ட ஆழ்வார்கள், ஆச்சார்யர்கள், அவ்வளவு ஏன்... பாமரர்களாகக்கூட இருக்கட்டும்; அவர்களுடன் இன்றைக்கும் பேசிக்கொண்டுதான் இருக்கிறான், அரங்கன்! அரங்கனை அறிய, கடும் தவமோ பெருமுயற்சியோ தேவையில்லை. அவனிடம் என்றும் மாறாத அன்பு வைத்திருந்தாலே போதும்... அரங்கன் உங்களிடமும் பேசுவான்!
இந்த உலகில் சாஸ்வதமானது, அன்புதானே?!
|