இத்தகு புராணப் பெருமைகள் கொண்ட திருப்பாலைத்துறை கோயிலுக்குச் சிறப்பு சேர்க்கிறது, கோபுரத்தையட்டி இடதுபுறம் அமைந்துள்ள நெற்களஞ்சியம்! தஞ்சை நாயக்க மன்னர்கள் வழிவந்த ரகுநாத நாயக்கரால் (கி.பி.1600- 1634) கட்டப்பட்ட இது, சுமார் 36 அடி உயரத்தில், வட்டவடிவில், மேற்பகுதி கூம்பு போல் அமைந்துள்ளது. இதில், 1,500 மூட்டை தானியங்களைச் சேமிக்கலாம் என்கின்றனர்.
இந்தத் திருத்தலத்தில், ஸ்வாமி சந்நிதிக்கு வலது பக்கத்தில் அம்பாள் சந்நிதி. இத்தகைய அமைப்புடன் திகழும் கோயில்களை, திருமணக்கோலத் திருக்கோ யில்கள் எனப் போற்றுவர். இங்கு வந்து வழிபட, திருமணத் தடை நீங்கி, விரைவில் மணப்பேறு கிடைக்கும்.
இத்தனைச் சிறப்புகள் கொண்ட திருப்பாலைத்துறை தலத்தின் விருட்சமான ஏழிலைப்பாலையை, 'சப்த சாதா' எனக் குறிப்பிடுகிறார் வால்மீகி. வட இந்தியாவில், இதனை 'சப்த பர்னா' என்கின்றனர்.
பெரும்பாலும், நான்கு அல்லது ஐந்து இலைகள் கொண்ட ஏழிலைப்பாலையையே காணமுடியும். புராதனமான ஆலயங்களில், ஏழு இலைகள் கொண்ட ஏழிலைப்பாலையைக் காணலாம். இந்த மரத்திலிருந்து, மாணவர்கள் பயன்படுத்தும் சிலேட்டுகளின் பார்டர் பலகை தயாரிக்கப்படுகிறது.
இதன் இலையை வறுத்துப் பொடித்து, சீழ் வடியும் புண்களின் மேல் வைத்துக் கட்டிவிட்டால், விரைவில் புண்கள் குணமாகும் என்கிறது சித்த மருத்துவம்.
இஞ்சிச் சாறுடன் ஏழிலைப்பாலை இலையின் சாற்றையும் கலந்து, குழந்தையைப் பெற்றெடுத்த பெண்களுக்குத் தருவார்கள். நீண்ட நாள் வயிற்றுப்போக்கினை, இந்த மரப் பட்டை கட்டுப்படுத்தும்; ரத்த பேதியும் நிற்கும்.
சூலை, குன்மம் முதலானவற்றைக் குணப்படுத்தும் வல்லமை, ஏழிலைப்பாலையின் வேருக்கு உண்டு. இந்த வேரை உலர்த்திப் பொடியாக்கி ஒரு சிட்டிகை அளவு சாப்பிட்டு வந்தால், விரைவாத நோய் குணமாகும். புண்கள் மீதும், மூட்டு வீக்கத்தின்மேலும் ஏழிலைப்பாலை மரத்தின் பாலைப் பூசுவதால் குணம் பெறலாம். இதன் பால், புண்களைக் குணப்படுத்தும் சக்தி கொண்டது; கீல் வாதம், காது வலி ஆகியவற்றுக்கு எண்ணெய்யுடன் சேர்த்து உபயோகிக்கலாம்.
அஜீரணம், வயிற்று உப்புசம், வயிற்று வலி போன்றவற்றில் இருந்து குணம்பெற, இந்த மரம் பயன்படுகிறது. தோல் நோய்க்காரர்கள், இதன் இலைகளைக் கஷாயமாக்கிச் சாப்பிடலாம். குளிர் ஜுரம், யானைக்கால் வியாதி போன்றவற்றை குணமாக்கும் சக்தியும் இந்த மரத்துக்கு உண்டு. இந்த மரத்தின் குச்சிகள், மூட்டு வலிக்கு நிவாரணமாகப் பயன்படுகின்றன. இளஞ்செடி பருவத்தில் உள்ள ஏழிலைப் பாலையை எரித்து, அதன் சாம்பலைப் பிளவைக்கட்டிகள் மீது பூசினால், கட்டி விரைவில் பழுத்து, உடையுமாம்!
|