இதனால், ஊரிலும் அரண்மனையிலும் அவருக்கு ஏகமரியாதை!
சின்ன மருதுவும் பெரிய மருதுவும் தினமும் காலையில் ஆலயத்துக்கு வந்து காளீஸ்வரரைத் தரிசித்துவிட்டு, அப்படியே கோபுரத்தில் ஏறி, தூரத்தே தெரியும் மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தை வணங்குவர். பின்னர், ஆடல்- பாடல் நிகழ்ச்சிகள் நடைபெறும். சில தருணங்களில், காளையப்பனும் தன் மூன்று மனைவியருடன் அந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வார்.
ஒருநாள், மருது சகோதரர்கள் கோபுரத்தில் ஏறும் வேளையில், சீதையம்மாள் எனும் நாட்டியக்காரி ஓடி வந்து, காளையப்பனை முத்தமிட்டாள். மதிமயங்கிய காளையப்பனும் பதிலுக்கு முத்தம் தந்தார். இதைக் கண்டு கோபம் கொண்ட சின்ன மருது, சீதையம் மாளைச் சிறையில் அடைக்க உத்தரவிட் டார். காளையப்பனுக் கான தண்டனையை மறுநாள் அறிவிப்பதாகக் கூறிச் சென்றார்.
அன்றிரவு, காளையப்பனுக்கு ஒரு கனவு... ஸ்ரீகாளீஸ்வரர் ருத்ரதாண்டவம் ஆட, தெப்பக்குளத்தின் தண்ணீரெல்லாம் தெருவுக்கு வந்தது. தொழுவத்தில் இருந்த மாடுகள், கயிற்றை அறுத்துக் கொண்டு ஓடின. ஆடி முடித்து குளக்கரையில் அமர்ந்தார் ஈசன். நடந்தது எதுவும் தெரியாத பார்வதிதேவி, ஈசனுக்குப் பின்புறமாக வந்து, அவரு டைய கண்களை பொத்தினாள். அவளின் கரங்களை விலக்கி, கோயிலில் நடந்த விஷயங்களை விவரித்த ஈசன், ''எனது சித்தப்படியே அந்தச் சம்பவம் நிகழ்ந்தது. ஆனால், நாட்டியக்காரியைச் சிறையில் அடைத்துவிட்டனர். விடிந்ததும், காளையப்பனை சிரச்சேதம் செய்யப் போகின்றனர். அவனைக் காப்பாற்ற வேண்டும்'' என்றார்.
அவ்வளவுதான்... கனவு கலைந்தது! விடிந்ததும் தொழுவத்தில் மாடுகளைக் காணாமல் அதிர்ந்தார் காளையப்பன். தரையில் தென்பட்ட மாடுகளின் குளம்படி தடங்களைக்கொண்டு, மேற்கு நோக்கிப் பயணித்தார். நாள் முழுக்கப் பயணித்து அழகர் மலையை அடைந்தவர், அங்கே கோயில் மாடுகளுக்கு நடுவே தனது மாடுகளும் இருப்பதைக் கண்டார். 'தன்னைக் காப்பாற்ற, இறைவன் நிகழ்த்திய அற்புதம் இது' என்று சிலிர்த்த காளையப்பன், 'இனி, எங்கே செல்வது?' என அழகர் மலையானிடமே வேண்டினார்.
அப்போது, காயாம்பு என்பவர்போல் உருவெடுத்து வந்த அழகர்மலையான், ''இந்தக் கூட்டத்தில் உன் மாடுகளை எப்படிக் கண்டறிவாய்?'' என்று கேட்டார். ''என் குரலைக் கேட்டதுமே என் மாடுகள் ஓடி வந்துவிடும்'' என்றபடி காளையப்பன் குரல் கொடுக்க, அவருடைய மாடுகள் ஓடோடி வந்து, அவருக்கு அருகில் நின்றுகொண்டன. அதைப் பார்த்து புன்னகைத்த காயாம்பு (அழகர் மலையான்), ''தண்டனையிலிருந்து காப்பாற்றப்பட்டாய். மன்னனுக்கும் புத்திமதி சொல்லப்பட்டுள்ளது. எனவே, பயம் வேண்டாம். நீ கிழக்கு நோக்கித் திரும்பப் பயணிக்கலாம்'' என்றார்.
கூடவே, காளையப்பனிடம் பிரம்பு ஒன்றைக் கொடுத்த காயாம்பு, ''இங்கேயுள்ள பதினெட்டாம்படி பெரியகருப்பண்ண சுவாமியின் பிரம்பு இது. உனக்குத் துணை நிற்கும்.
இதை எந்த இடத்தில் ஊன்றுகிறாயோ, அதுவே உனது வசிப்பிடம். மீண்டும் அங்கிருந்து இந்தப் பிரம்பை அசைக்கக்கூட முடியாது!'' என்று அருளினார்.
பிறகு, தன் மாடுகளை ஓட்டிக்கொண்டு குடும்பத்துடன் கிழக்கு நோக்கிப் பயணித்த காளையப்பன், நாட்டரசன்கோட்டைக்கு வந்து சேர்ந்தார். அந்த இடம் மாடுகளைப் பராமரிக்க ஏற்றதாக இருக்கும் என்று கருதியவர், கருப்பரின் பிரம்பை அங்கேயே ஊன்றினார்; அந்தப் பிரம்பைக் கருப் ராகவே கருதி, பாலபிஷேகம் செய்து வழிபடலானார். ஒருநாள் கருப்பரிடம், ''வருங்காலத்தில் உமக்கான தினப்படி பூஜைகளை செய்யப்போவது யாரோ?'' என்று கேட்டார்.
|