தொடர்கள்
Published:Updated:

கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்


தொடர்கள்
கேள்வி-பதில்
கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்
கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்
கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

கோயில்களில் பூஜையின்போது நடைபெறும் சோடச உபசாரம் எனும் நிகழ்வின் தாத்பரியம் என்ன?

- ஜெயவேல் வி. சுப்ரமணியம், திருப்பூர்-2

தியானம், ஆவாஹனம், ஆசனம், பாத்யம், அர்க்யம், ஆசமனம், மதுபர்க்கம், ஸ்நானம், வஸ்திரம், உத்தரீயம், ஆபரணம், சந்தனம், குங்குமம், அட்சதை, புஷ்பம், தூபம், தீபம், நைவேத்தியம், தாம்பூலம், கற்பூர ஆரத்தி, மந்திரபுஷ்பம், ஸ்வர்ண புஷ்பம் ஆகியவை பூஜைகளில் அடங்கும் உபசாரங்கள்.

அதற்குப் பிறகு சிறப்பு உபசாரமும் உண்டு. குடை, சாமரம், நிருத்தம், பல்லக்கு, ரத ஆரோஹணம், அச்வ ஆரோஹணம், கஜ ஆரோஹணம், ராஜோபசாரம், வாத்தியம், பாட்டு, நான்கு வேதங்கள், ச்ரௌத சூத்திரங்கள், புராணங்கள், உலக நன்மைக்காக வாழ்த்து ஆகிய அத் தனையும் பூஜைக்குப் பிறகு நடைமுறைப்படுத்தப்படும் உபசாரங்கள். இவை அனைத்தும், உலக நன்மைக்காக உலகத்தை இயக்கும் உலகநாதனுக்காக அன்றாடம் செய்யும் உபசாரங்கள் ஆகும்.

திருமணப் பொருத்தம் பார்க்கும்போது, பெண்களின் ருது ஜாதகத்தை வைத்துப் பார்ப்பதா? அல்லது, பிறந்த ஜாதகத்தை வைத்துப் பார்க்கவேண்டுமா? தற்காலத்தில் பெரும்பாலோர் பிறந்த ஜாதகத்தைக் கொண்டு பொருத்தம் பார்த்து திருமணம் நடத்துகிறார்களே... இது சரிதானா?

- கணபதி, மயிலாடுதுறை

பிறந்த ஜாதகத்தை வைத்து திருமணப் பொருத்தம் பார்க்கவேண்டும். பிறந்த ஜாதகம் இல்லாத நிலையில் ருது ஜாதகத்தைப் பயன்படுத்தலாம். தற்காலச் சூழலில் பிறந்த ஜாதகத்தை எளிதில் கணித்துவிடலாம்; விஞ்ஞானக் கருவிகள் பெருகிவிட்ட இந்த நாளில் அது மிகவும் சுலபம். ஆனால் இந்த வளர்ச்சி, பொருத்தம் பார்ப்பதில் குழப்பத்தை ஏற்படுத்தியதே தவிர, தெளிவை ஏற்படுத்தவில்லை. வியாபார நோக்கில் வளர்ந்த ஜோதிட விளக்கங்களைப் பெற, இரண்டு ஜாதகமும் ஒன்றுதான்.

எங்கள் பகுதியில் பெண்கள் சிலர், சுமங்கலிகளுக்கு லட்சம் மஞ்சள் தருவதாகவும், வீட்டில் லட்ச தீபம் ஏற்றுவதாகவும் வேண்டிக்கொண்டு, அதை நிறைவேற்றவும் செய்கின்றனர். இதன் தாத்பரியம் என்ன? இதனால் ஏற்படும் நற்பலன்கள் என்ன?

- வெ. சியாமளா ரமணி, செகந்திராபாத்-9

கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

மஞ்சளும், தீபமும் மங்கலப் பொருட்களில் தனிச் சிறப்பு பெற்றவை. இருளை அகற்றி ஒளியை வழங்குவது தீபம். அழுக்கை அகற்றி, அழகையும் தூய்மையையும் தருவது மஞ்சள். அகமும் புறமும் தூய்மையுடன் திகழ இவை இரண்டும் உதவும்.

மருத்துவ குணம் கொண்ட மஞ்சள், உடலுடன் இணைந்து தொடுபுலனைக் காப்பாற்றுகிறது. 'மஞ்சள் மங்கலகரமானது' என்ற எண்ணம் உள்ளத்தைத் தூய்மைப் படுத்துகிறது. தீப ஒளியின் தரிசனம், 'அறியாமை அகன்று அகவொளி பரவ வேண்டும்' எனும் எண்ணத்தை வரவழைக்கிறது. இந்த எண்ணம், யாவரையும் நல்வழிப் படுத்த உதவும். மஞ்சளோடும் தீபத்துடனும் இணைந்த மங்கையர் நம் பண்பாட்டின் சின்னங்கள். மஞ்சள் தேய்த்து நீராடுவதும் அந்தியில் தீபமேற்றி மங்கலத்தை வரவேற்பதும் அன்றாட அலுவல்களில் உண்டு. ஆக, நீங்கள் குறிப்பிடும் அந்தப் பெண்களின் செயல்பாடுகள், பண்பாட்டை வளர்க்கப் பயன்படும்.

என் வயது 67. என்னைவிட ஏழு வயது மூத்தவரான என் சகோதரர் காணாமல்போய் 24 வருடங்கள் ஆகிவிட்டன. அவர் திருமணம் ஆகாதவர்; உபநயனம் மட்டும் ஆகியுள்ளது. அவர் தொடர்பாக நான் (தர்மசாஸ்திரப்படி) என்ன செய்யக் கடமைப்பட்டுள்ளேன்?

- ஆர். ரங்கநாதன், கோவை-2

காலம் கடத்தாமல் அவரது இறுதிச் சடங்கை நிறைவேற்றுங்கள். நிறைவேற்றும் முறையை தங்களது குடும்ப புரோகிதர் விளக்குவார். அவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பதைத் தெரிந்துகொள்ளும் முயற்சியில் காலம் கடத்த வேண்டாம்.

12 வருடங்கள் தாண்டியதும் இறுதிக்கடன் நிகழ்த்தலாம் என்கிறது சாஸ்திரம். தங்கள் தமையனாரோ காணாமல்போய் 24 வருடங்கள் (இரண்டு 12 வருடங்கள்) ஓடிவிட்டன. அலட்சியத்தாலோ, கால தாமதத்தாலோ உடன்பிறந்தவனைக் கரையேற்றும் கடமையை நழுவவிடக்கூடாது.

மனிதனாகப் பிறந்தவரின் பூத உடல் இறுதிச்சடங்கை சந்திக்காமல் இருக்கக்கூடாது. உறவுகள் என்று எவரும் இல்லாத ஒருவர் இறந்துபோனால்... நேரடித் தொடர்பு இல்லாதவர்கூட அவருக்கு இறுதிச் சடங்கை செய்யப் பரிந்துரைக்கிறது சாஸ்திரம். அனாதைக்கு கொள்ளி வைத்தால் அச்வமேத வேள்வி செய்த பலன் உண்டு என்றும் அது சொல்லும் (அனாதப்ரேதஸ்ம்ஸ்காராத் அச்வமேத பலம் லபேத்). அப்படியிருக்க... உடன்பிறந்தவருக்கான விஷயத் தில் அசட்டையாக இருக்கக்கூடாது. உடனே செயலில் இறங்குங்கள்.

ஒவ்வொரு தெய்வத்துக்கும் உகந்த வஸ்திரம், நிறம், அவர்களை வழிபடவேண்டிய மலர்கள், சமர்ப்பிக்க வேண்டிய பதார்த்தங்கள் இன்னின்ன... என வகுத்திருப்பது ஏன்?

- கே. வேதநாயகி, முசிறி

மஞ்சள் உடை அணிந்தவன் என்று கண்ணனைக் குறிப்பிடுவோம். நீல உடை அணிந்தவன் பலராமன். புலித்தோல் அணிந்தவன் பரமேஸ்வரன்.

அதேபோல், கண்ணனுக்கு வெண்ணெய் பிடிக்கும். குசேலன் கொடுத்த அவலை, பிரியத்துடன் உட்கொண்டார் அவர். எனவே, அவலும் கண்ணனுக்குப் பிடிக்கும். 'அம்பாளுக்குச் சர்க்கரைப் பொங்கல் பிடிக்கும்' என்கிறது லலிதா சஹஸ்ரநாமம். பிள்ளையாருக்கு கொழுக்கட்டையும், முருகப்பெருமானுக்கு தேனும் தினைமாவும் பிடிக்கும்.

கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

பூக்கள் மற்றும் இலைகளை எடுத்துக் கொண்டால், விஸ்வேஸ்வரன் வில்வபத்திரத்தில் மகிழ்வார்; தும்பைப் பூவும் அவருக்குப் பிரியமானது. மகாவிஷ்ணுவுக்கு துளசி இலை பிடிக்கும். அம்பாளுக்கு பாடல புஷ்பம் பிரியம். இவை அத்தனையும் புராணத் தகவல்கள். இந்தத் தகவல்களைக் கொண்டு நாமும் மாறுபட்ட பதார்த்தங்களை, பூக்களை- இலைகளைப் பயன்படுத்துகிறோம்.

கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

மறைக்கவேண்டிய இடத்தை மறைப்பதற்கு உடை தேவை. எனவே, நிறம் ஒரு பொருட்டல்ல. ஆடையில் நூலாடை சிறந்தது. நூலின் நிறம் வெண்மை; அதுவே போதுமானது. பூக்களில் அழகும் வாசனையும் கொண்டவை பூஜைக்கு உகந்தவை. அவற்றில் இருக்கும் பாகுபாடுகள் ஒரு பொருட்டல்ல. அதேபோல்... ருசியும், உடலுக்கு இதமும், உள்ளத்துக்கு மகிழ்ச்சியும் தரும் பதார்த்தங்களை இறைவனுக்கான பணிவிடையில் சமர்ப்பிக்கலாம்.

நமக்கு எவை எல்லாம் மகிழ்ச்சி அளிக்குமோ அவற்றை எல்லாம் இறை உருவங்களுக்கு அளித்து மகிழலாம். பருவ காலங்களின் மாறுபாடு மற்றும் தேசத்துக்கு தேசம் ஆசாரங்களின் மாறுபாடு ஆகியவற்றின் காரணமாக இறையுருவ வழிபாடுகளில் மாற்றம் இருக்கும். தென்னக வழிபாடுகளில் 'துலக்க சாமந்தி' பங்குபெறாது; வட மாநிலங்களில் அது தென்படும்.

விஷ்ணு வழிபாட்டில் அலங்காரத்துக்கு முதலிடம்; ஈசனுக்கான வழிபாட்டில் அபிஷேகத்துக்கு முதலிடம். திரவ பதார்த்தம், அபிஷேகம் செய்ய உதவும். ஆனால், விபூதி மற்றும் பழங்களை அபிஷேகத்துக்குப் பயன்படுத்துவோம். ஆக, பக்தியுடன் எந்தப் பொருளையும் இறைவனுக்கு அளிக்கலாம்.

அருகம்புல், கொத்துக்கடலை, பழம் மற்றும் வெற்றிலை ஆகியவற்றை மாலையாக அணிவிக்கிறோம். இதற்கெல்லாம் நம்முடைய மனமே காரணம். தெய்வத்துக்குப் படைப்பவை அனைத்தும் நாம் ஏற்றுக்கொண்டு மகிழவே! இறைவனின் தொடர்பு உடையவை துலங்கும் என்ற எண்ணத்தில் அவற்றைப் பிரசாதமாக ஏற்கிறோம்.

'எதைப் படைக்க வேண்டும் என்பதற்கு தர்மசாஸ்திரம் மட்டுமே சான்று. நீ எதை செய்ய வேண்டும்; எதை செய்யக் கூடாது என்பதை அறிய தர்மசாஸ்திரத்தை அணுகு' என்கிறான் கண்ணன். நமது புலன்களுக்கு கேடு விளைவிக்காத பொருள்களையும், உள்ளத்துக்கு அமைதியைக் கெடுக்காத உணவு வகைகளையுமே கடவுளுக்கு வழங்கவேண்டும். அதுதான் அளவுகோல்.

கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

- பதில்கள் தொடரும்...
படம் ப்ரீத்தி கார்த்திக்