தொடர்கள்
Published:Updated:

கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி

கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி


தொடர்கள்
கலகலப் பக்கம்!
கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி
கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி

ந்த மனசை யாராவது வாங்கிக்கொள்ளத் தயாராக இருந்தால் உடனே கொடுத்துவிடுவேன். சில பேர் தங்கள் பிளாட்டுகளை அவசரப்பட்டு விற்றுவிட்டு, பிற்காலத்தில் 'ஐயோ, கொடுத்துவிட் டோமே! இப்ப அது இருந்தால் கோடி ரூபாய் போகுமே! காப்பாற்றி வைக்கத் தெரியவில்லையே' என்று வருத்தப்படுவதுபோல, இந்த மனத்தை விற்றதற்காக ஒரு நாளும் நான் வருந்தமாட்டேன்.

மனசு அந்தப் பாடு படுத்துகிறது. 'என் மனசு' என்பதால், அது நான் சொன்னபடி கேட்டுவிடுகிறதா, என்ன? அதன் இஷ்டத்துக்கு ஆட்டம் போடுகிறது.

வீட்டுச் சொந்தக்காரன் நான்; குடித்தனக்காரன் மனம். கண்ட இடத்தில் ஆணி அடிப்பது, வாசல் கேட்டை உடைப்பதுபோல் டமாலென்று அடித்துச் சாத்துவது, தன் போர்ஷனைக் குப்பையும் கூளமுமாக வைத்திருப்பது, கெட்ட சகவாசங்களை வரவழைத்துக்கொண்டு கூத்தடிப் பது... இப்படியெல்லாம் ஒரு குடித் தனக்காரன் நடந்துகொண்டால், வீட்டு உரிமையாளர் பொறுப்பாரா? ஆனால், வீட்டுக்காரரால் அந்தக் குடித்தனக்காரனைத் திருத்தவும் இயலவில்லை; காலி பண்ணவும் முடியவில்லை. பயம், நயம், கெஞ்சல் எதுவும் செல்லுபடியாகவில்லை.

பெரிய யோகிகளும், பக்தர்களும் தங்கள் மனசைச் சாமர்த்தியமாகக் கடவுளிடமே தள்ளிவிட முயற்சி செய்திருக்கிறார்கள். ஆதிசங்கர பகவத் பாதாள், சிவானந்தலஹரி ஸ்லோகங்களில் இறைவனைப் பல வகைகளில் நயம்பட வேண்டுகிறார்.

''என்னிடம் ஒரு குரங்கு இருக்கிறது. அங்குமிங்கும் இஷ்டத்துக்கு ஓடித் திரிந்து சேட்டை செய்கிறது. அந்தக் குரங்கை உங்களுக்கே உங்களுக்கென்று இனாமாகக் கொடுத்துவிடுகிறேன். நீங்கள் அதை ஒரு கயிற்றைக் கட்டி எடுத்துகொண்டுவிடுங்கள்'' என்கிறார்.

சிவபிரான் வேட்டைக்காரனாக அர்ஜுனனிடம் வம்பு செய்திருக்கிறார் அல்லவா? அதை நினைவு படுத்தி இன்னொரு ஸ்லோகத்தில், ''நீங்கள் ஒரு சரியான வேட்டைக்காரர். என் மனம் என்னும் காட்டில் பொறாமை, மதி மயக்கம், பேராசை போன்ற பல மிருகங்கள் இருக் கின்றன. அவற்றைத் தாங்கள் அருமையாக வேட்டையாடி மகிழலாம். உங்களுக்குச் சிறந்த பொழுதுபோக்காக இருக்கும். வாருங்கள்; வந்து, என் மனத்தில் வேட்டையாடி மகிழுங்கள்'' என்று அழைக்கிறார்.

நண்பன் நாராயணனிடம், மனத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லையே என்று ஒரு தினம் அங்கலாய்த்தேன். அவன் என்னை, சேத்துப்பட்டு மேம்பாலத்தில் சுருண்டு படுத்திருந்த ஓர் அழுக்குச் சாமியாரிடம் கூட்டிப் போனான்.அந்தச் சாமியார் என் காதோடு ஒரு வார்த்தை சொல்லிவிட்டு, ''இதுதான் மந்திரம். எந்தப் பிரச்னையானாலும், இதை மனசுக்குள் உச்சரித்துக் கொள். பிரச்னைகள் ஓடிப்போகும்'' என்று ஆசீர்வதித்துவிட்டு, மீண்டும் சுருண்டு படுத்துக்கொண்டு விட்டார்.

அன்றிலிருந்து என்னிடம் ஏற்பட்ட மாற்றத்தைக் கண்டு, மனைவியும் சிநேகிதர்களும் ஆச்சரியப்பட்டனர். ''எப்படி நீங்க இத்தனை அமைதியானவரா ஆகிட்டீங்க? சாம்பாரில் சிறிது உப்புக் குறைந்தால்கூடத் தட்டைத் தள்ளிவிட்டு எழுந்துவிடுவீர்களே? அப்படி என்ன மந்திரம் அது? எனக்கும் சொல்லக்கூடாதா?'' என்று கேட்டாள் மனைவி.

'புறப்பட்டாச்சு' என்பதே அந்த மந்திரம்.

கோபமூட்டும்படி யார் எது சொன்னாலும், 'புறப்பட்டாச்சு' என்று சாமியார் சொல்லிக்கொடுத்தபடி, மனதில் ஒருதரம் சொல்லிக்கொள்வேன். பொங்கிய பாலில் தண்ணீர் தெளித் ததுபோல், கோபம் புஸ்ஸென்று அடங்கிவிடும்.

'ஆமாம். நம்ம ஆயுள் முடிஞ்சு புறப்பட்டாச்சு... இப் பவோ, நாளைக் காலையிலேயோ! அதன்பின் இந்தத் திட்டோ, பாராட்டோ, பட்டமோ, பதவியோ, லாபமோ, நஷ்டமோ வந்தால் நமக்கு என்ன? நம்மை எதுதான் என்ன செய்துவிடமுடியும்? நாம்தான் புறப்பட்டாச்சே!'

நாமெல்லாரும் ஒருநாளைக்குப் புறப்படப் போகிறவர்கள் தான்! அதன்பின் இந்த உடம்பு ஒரு பிடி சாம்பலாகப் போகிறது என்பதை நமக்கு அடிக்கடி நினைவூட்டிக்கொண்டு இருக்கத்தான் நெற்றியில் விபூதி (சாம்பல்) பூசுகிறோம் என்று உபந்யாசகர் ஒருவர் சொன்னார்.

என்றைக்கோ புறப்படப் போகிறோம் என்றிருப்பதைவிட, 'இதோ, புறப்பட்டாச்சு!' என்று நினைத்துக்கொண்டால், குரங்கு மனம் கட்டுக்குள் அடங்கும்; போட்டி, பொறாமை, கோபம், வெறுப்பு போன்ற சகல உபாதைகளும் நீங்கும்.