மதுரை அருள்மிகு மீனாட்சியம்மையைத் தரிசித்து முடித்து, சுவாமி சந்நிதியின் 2-ஆம் பிராகாரத்தை அடைகிறோம். இந்தப் பிராகாரம் தெற்கு, மேற்கு, வடக்கு ஆகிய மூன்று பகுதிகளில் மட்டுமே அமைகிறது. கிழக்குப் பகுதியில் இதுவே விரிவாகி, பெரிய மண்டபமாகி விட்டது; கம்பத்தடி மண்டபம் என்று பெயர்.
இந்த மண்டபப் பகுதிக்கு நடுவில், சுவாமி கொடிக் கம்பமும் பலிபீடமும் உள்ளன. கொடிக் கம்பத்தடியில் உள்ள மண்டபம் என்பதால், கம்பத்தடி மண்டபம். இதில், நிறையத் தூண்கள்; ஒவ்வொன்றிலும் சிற்பங்கள். தூண்களுக்கு நடுவில், அதாவது கொடிமரத்துக்குக் கிழக்கில், நான்கு கால் மண்டபம்; அதில் அழகுற அமைந்திருக்கிறது நந்தி. இதன் விதானத்தில், அழகழகாகச் சுதைச் சிற்பங்கள்! கம்பத்தடி மண்டபத்தில் நின்று பார்வையைச் சுழல விடுகிறோம். வியப்பால் விரியும் கண்கள் குறுகவேயில்லை. தூண்களில், சிவனாரின் அதியற்புதமான சிலா வடிவங்கள்; மொத்தம் 25 வடிவங்கள். 19-ஆம் நூற்றாண்டில், கோயில் திருப்பணி நடைபெற்றபோது, அதில் பங்கேற்ற நகரத்தார் பெருமக்கள், தூண்களையும் சிவத்திருமேனிகளையும் அமைத்தனராம்.
ஈசனுக்கு ஐந்து திருமுகங்கள்; ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம் ஆகிய முகங்கள்; ஒவ்வொன்றிலிருந்தும் ஐந்தைந்து வடிவங்கள் தோன்றியதாகச் சொல்வர். பிரதட்சிண முறையிலேயே, வடக்கில் உள்ள நான்கு தூண்களையும், தெற்கில் உள்ள நான்கு தூண்களையும் ஒவ்வொன்றாகச் சுற்றி வந்தால், ஏகபாதமூர்த்தி, ரிஷபாரூடர், அர்த்தநாரீஸ்வரர், ஹரிஹரர், சக்கராதனர், ஜலந்தரவதமூர்த்தி, தட்சிணாமூர்த்தி, கஜ சம்ஹாரமூர்த்தி, சண்டேச அனுக்கிரக மூர்த்தி, பிட்சாடனர், வீரபத்திரர், கிராத அர்ச்சுனர், ரிஷபாந்திகர், சோமாஸ்கந்தர், சுகாசனர், கல்யாண சுந்தரேஸ்வரர், திரிபுராந்தகர், கால சம்ஹாரமூர்த்தி, பாசுபதமூர்த்தி, நடராஜர், காமதகன மூர்த்தி, சந்திரசேகரர், உமாமகேசர், லிங்கோத்பவர், ராவண அனுக்கிரகமூர்த்தி ஆகிய திருவடிவங்களைத் தரிசிக்கலாம். இதே தூண்களில் திருமால் வடிவங்கள், நரிகளைப் பரிகளாக்கிய வரலாறு, திரிபுரம் அழிக்கப் புறப்பட்ட சிவனாருக்குத் திருமால் அம்பாக நின்ற சம்பவம், குமார சம்பவம், பிட்டுக்கு மண் சுமந்த சம்பவம் போன்ற காட்சிகளும் உள்ளன.
|