அதுமட்டுமா? மற்றொரு இடக்கரத்தில் அக்னியையும், வலக்கரங்களில்- உடுக்கை, சூலம் போன்றவை திகழ... உயரத் தூக்கிய பொற்பாதத்துடன் கனகம்பீரமாக காட்சி தருகிறார் ஆலங்காட்டு ஆடல்வல்லானாம் ஸ்ரீரத்னசபாபதீஸ்வரர்!
அருகிலேயே ஸ்ரீசமீசீனாம்பிகை (வியந்திருந்து அருகிருந்த நாயகி என்று பொருள்). ஸ்வாமி அருள்புரியும் ரத்தின சபை, ஒருகாலத்தில் ரத்தினங்களாலேயே இழைக்கப்பட்டிருந்ததாம்!
ஈசனுடன் ஆடலில் போட்டிப்போட்ட காளிதேவியின் தனிக்கோயில், திருக் குளத்துக்கு வடக்கு திசையில் உள்ளது. முதலில் இவளை வணங்கிவிட்டே ஸ்ரீநடராஜபெருமானைத் தரிசிக்க வேண்டும் என்பது ஐதீகம்.
காரைக்கால் அம்மையாருக்கு முக்தி கொடுக்க, இந்தத் தலத்துக்கு வருமாறு பணித்தாராம் இறைவன். பழையனூரில் இருந்த காரைக்கால் அம்மையாருக்கு, இறைவன் லிங்க வடிவிலேயே வழிகாட்ட... அவர் நடந்து சென்ற பாதையில் கால் பதிக்கக் கூடாது என்பதால், காரைக்கால் அம்மையார் தலையாலேயே பயணித்து திருவாலங்காட்டை அடைய, அவருக்கு திருநடனக் காட்சி காட்டி, முக்தி கொடுத்தாராம் பரமேஸ்வரன்.
ஆலயத்தின் மூலவராம் ஆலங்காட்டு ஈசனுக்கு ஸ்ரீவடவாரண்யேஸ்வரர், ஆலவன ஈசர், தேவர் சிங்கப் பெருமாள் என்றெல்லாம் திருநாமங்கள் உண்டு. அம்பிகை- ஸ்ரீவண்டார் குழலி
வருடம்தோறும் ஸ்ரீநடராஜருக்கு ஆறு அபிஷேகங்கள் விமரிசையாக நடைபெறும். அவற்றுள் ஆனி மாதம் உத்திர நட்சத்திரத்தன்று (இந்த வருடம் ஜூன் 19-ஆம் தேதி) நடை பெறும் அபிஷேக (ஆனித் திருமஞ்சன) வைபவமும் தரிசிக்க வேண்டிய ஒன்று. இந்தத் திருநாளில் நாமும் திருவாலங்காடு சென்று, ஸ்ரீநடராஜரின் திருவடியைப் பணிவோம்.
|