ஸ்தல வழிபாடு
தொடர்கள்
Published:Updated:

தாரமங்களத்தில் கண்ணனூர் மாரி

தாரமங்களத்தில் கண்ணனூர் மாரி


ஸ்தல வழிபாடு
நல்ல பிள்ளைகளைப் பெற்றெடுக்க...
தாரமங்களத்தில் கண்ணனூர் மாரி
தாரமங்களத்தில் கண்ணனூர் மாரி
தாரமங்களத்தில் கண்ணனூர் மாரி

சேலத்தில் இருந்து சுமார் 23 கி.மீ. தொலைவில் உள்ளது தாரமங்கலம். இந்த ஊரின் நடுநாயகமாகக் கோயில்கொண்டிருக்கிறாள் கண்ணனூர் மாரியம்மன்.

திருச்சி- சமயபுரத்துக்கு அருகில் உள்ளது கண்ணனூர். இங்கு அருள்பாலித்த மாரியம்மனே, தாரமங்கலத்திலும் சுயம்புவாகத் தோன்றினாளாம். தனது வருகையை ஊர் மக்களுக்கு அவள் தெரியப்படுத்த, தாரமங்கலத்து மக்களும் அம்பிகைக்கு அற்புதமாக ஆலயம் அமைத்து, வழிபட ஆரம்பித்தனராம். கண்ணனூரில் இருந்து வந்தவள் என்பதால், அம்மனின் பெயருடன் கண்ணனூரும் சேர்ந்து கொண்டுவிட்டது.

தாரமங்களத்தில் கண்ணனூர் மாரி

தாரமங்கலம் கோயிலின் சிறப்பம்சமே, இங்கு மாரியம்மன், காளியம்மன் இருவரும் சேர்ந்து அருள்பாலிப்பதுதான். திருமணம் நடந்து பல வருடங்களாகியும் குழந்தை பாக்கியம் இல்லாமல் வாடும் பெண்கள் பௌர்ணமி, அமாவாசை மற்றும் மூன்றாம் பிறை நாளில் இந்தக் கோயிலுக்கு வந்து அம்மனை மனதாரப் பிரார்த்தித்துச் சென்றால் போதும்... விரைவில் வீட்டில் தொட்டில் சத்தம் கேட்பது உறுதி என்கின்றனர்.

அதேபோல், தாயின் வயிற்றில் கரு உருவாகத் துவங்கிய தும், கோயிலுக்கு வந்து மாரியம்மனை வழிபட்டுச் செல்ல... கரு நல்லபடியாக வளர்ந்து சுகப்பிரசவம் ஆகும் வரை, கூடவே இருந்து அருள்பாலிப்பாளாம் மாரியம்மன்.

பிரார்த்தனை பலித்ததும், ஆடி மாதத் திருவிழாவின்போது, கையில் குழந்தையைச் சுமந்தபடி பூ மிதித்தும், குழந்தைகளுக்கு முடிகாணிக்கை செலுத்தியும், உருவங்கள் (காணிக்கை பொம்மைகள்) காணிக்கை செலுத்தியும் அம்மனை வழிபட்டுச் செல்கின்றனர். இன்னும் சிலர், பூக்குண்டத்தில் நாற்காலியைப் போட்டு, அதில் அமர்ந்தபடி குழந்தைக்குத் தாய்ப்பால் ஊட்டி, தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர்.

சேலம், தாரமங்கலம், உத்தமசோழபுரம் முதலான சேலம் மாவட்டத்து மக்கள் மட்டுமின்றி, அருகில் உள்ள ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் இருந்தும் எண்ணற்ற பக்தர்கள் அமாவாசை, பௌர்ணமி மற்றும் மூன்றாம் பிறை ஆகிய நாட்களில் குடும்ப சகிதமாக வந்து, பிள்ளை வரம் கேட்டு, தொட்டில் கட்டிப் பிரார்த்தித்துச் செல்கின்றனர்.

தாரமங்கலத்தில் குடியிருக்கும் கண்ணனூர் மாரியம்மனைக் கண்ணார தரிசித்துப் பிரார்த்தித்துக் கொள்ளுங்கள். 'கண்ணே, மணியே...' என்று நீங்கள் சீராட்டிப் பாலூட்டி வளர்க்க, குழந்தையைத் தந்தருள்வாள் மாரியம்மன் என்பது உறுதி!

- வே. கிருஷ்ணவேணி
படங்கள் க. தனசேகரன்