கௌதம முனிவர் வழிபட்ட திருத்தலம், பிரம்மன் வணங்கிய லிங்கத் திருமேனி, தேவாரப் பாடல் பெற்ற ஆலயம் எனப் பல பெருமைகள் கொண்டது ஸ்ரீகரவீரநாதர் திருக்கோயில்.
கரவீரம் என்றால் செவ்வரளி என்று பொருள். ஒரு காலத்தில், செவ்வரளிக் காடாகத் திகழ்ந்ததாம் இந்தப் பகுதி. எனவே, இங்குள்ள ஸ்வாமிக்கு ஸ்ரீகரவீரநாதர் என்றும், பிரம்மனால் பூஜிக்கப்பட்டவர் ஆதலால், ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் என்றும் பெயர். சுமார் ஆறரை அடி உயரத்துடன் திகழ்கிறது, ஸ்வாமியின் லிங்கத் திருமேனி. தேவியருடன் முருகப்பெருமானும் அழகே உருவாகத் தரிசனம் தருகிறார்.
குலோத்துங்க சோழன் காலத்தில் கட்டப்பட்ட இந்த ஆலயம், திருவாரூர்- கும்பகோணம் சாலையில், திருவாரூரில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ள வடகண்டம் கிராமத்தில், வெட்டாற்றங்கரையில் அமைந்துள்ளது (கர வீரம் என ஆதிகாலத்தில் அழைக்கப்பட்டதாம்).
இந்தக் கோயிலில், அம்பாள் ஸ்ரீமின்னம்மையும் வரப் பிரசாதியாகத் திகழ்கிறாள். ஒருமுறை, வீதியுலா சென்ற ஈசன் எப்போது திரும்புவார் என்று அம்பாள் காத்திருந்தாளாம். அப்போது அவளிடம் கன்னிப்பெண்கள் சிலர், ''நீ கணவனுக்காகக் காத்திருக்கிறாய்; நாங்களோ கல்யாணம் நடைபெறாதா என்று காத்திருக்கிறோம்'' என ஏக்கத்துடன் சொன்னார்களாம். அவர்களது கவலை நீக்கி, கல்யாண வரம் தந்து அருளினாளாம் ஸ்ரீமின்னம்மை. ஸ்வாமிக்கு வலப்புறம் ஸ்ரீமின்னம்மையின் சந்நிதியும், எதிரில் சூரியபகவான் சந்நிதியும் அமைந்திருப்பது சிறப்பு என்கின்றனர் பக்தர்கள். அமாவாசை நாளில், அம்பாளின் திருப்பாதத்தில் ஜாதகத்தை வைத்து வேண்டிக்கொண்டால், விரைவில் திருமண வரம் கிடைக்குமாம்.
|