ஸ்தல வழிபாடு
தொடர்கள்
Published:Updated:

கீழமங்கலம் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர்

கீழமங்கலம் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர்


ஸ்தல வழிபாடு
கல்வியில் மேலோங்க...
கீழமங்கலம் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர்
கீழமங்கலம் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர்
கீழமங்கலம் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர்

ல்வி-ஞானம் அருளும் ஸ்ரீதட்சிணாமூர்த்தி, தெற்கு நோக்கி அருள்பவர்; அதனால், தென்முகக்கடவுள் எனப் போற்றப்படுபவர் என்றெல்லாம் அறிந்திருப்பீர்கள். இவரே, திசைக்கு ஒருவராக எட்டுத் திக்குகளிலும் காட்சி தரும் திருத்தலம் குறித்து உங்களுக்குத் தெரியுமா?

தூத்துக்குடி மாவட்டம், பசுவந்தனையில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது கீழமங்கலம். இங்கு ஸ்ரீஞானாம்பிகையுடன் அருளும் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் ஆலயத்தில் அஷ்ட தட்சிணாமூர்த்தியரை தரிசிக்கலாம்.

கிழக்குத் திசையில்- ஸ்ரீஞான தட்சிணாமூர்த்தி; வட கிழக்கில்- ஸ்ரீயோக பட்டாபிராம தட்சிணாமூர்த்தி; தென்கிழக்கில்- ஸ்ரீசக்தி தட்சிணாமூர்த்தி; தெற்கில்- ஸ்ரீயோக தட்சிணாமூர்த்தி; தென்மேற்கில்- ஸ்ரீகுரு தட்சிணாமூர்த்தி; மேற்கில்- ஸ்ரீமேதா தட்சிணாமூர்த்தி; வடமேற்கில்- ஸ்ரீஆசிந தட்சிணாமூர்த்தி, (பரசுராமருக்கு வில்லும் அம்பும் வழங்கியவர்); வடக்கில்- ஸ்ரீவர தட்சிணாமூர்த்தி (வேதத்துக்கு குரு) என தரிசனம் தருகின்றனர்.

படிப்பில் மந்த நிலையில் உள்ளவர்கள், ஞாபக சக்தி குறைவாக உள்ளவர்கள், அதிக மதிப்பெண் எடுத்து உயர் கல்வியில் சேரத் துடிப்பவர்கள், மேலை நாடுகளுக்குச் செல்ல எண்ணுவோர்... இந்தத் தலத்துக்கு வந்து அஷ்ட தட்சிணாமூர்த்தியரையும் வணங்கினால், உரிய பலன் கிடைக்கும்.

கீழமங்கலம் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர்

ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், தோஷம் நீக்கும் நாயகனாய் அருள்பாலிக்க, அம்பாள் ஸ்ரீஞானாம்பிகை அறிவுச் செல்வத்தை அள்ளிக் கொடுப்பவளாகத் திகழ்கிறாள்.

கோயிலின் ஞான கங்கை தீர்த்தக்குளத்தில் 11 வியாழக் கிழமைகள் நீராடி, அஷ்ட தட்சிணாமூர்த்திகளுக்கும் 11 வகை அபிஷேகங்கள் செய்து, எட்டு நெய்த் தீபங்கள் ஏற்றி வைத்து, மஞ்சள் பட்டு மற்றும் மஞ்சள் அரளிப்பூ சார்த்தி வழிபட, தடைப்பட்ட கல்விச் செல்வம் தங்குதடையின்றிக் கிடைக்கும்; விரும்பிய பாடப் பிரிவில் சாதனை படைக்கலாம் என்கின்றனர். தேர்வில் அதிக மதிப்பெண் பெற, அஷ்ட தட்சிணாமூர்த்தியருக்கு சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து வழிபடுகின்றனர். அஷ்ட தட்சிணாமூர்த்தியரின் அருளால் வெளிநாட்டில் கல்வி பயிலும் யோகமும் உண்டாகும் என்பது நம்பிக்கை!

கீழமங்கலம் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர்

குடும்பத்துடன் கீழமங்கலத்துக்கு வந்து, அஷ்ட தட்சிணாமூர்த்தியரைத் தரிசிப்பதோடு, சுமார் 6 அடி உயரத்தில், சனி பகவானுக்கு உபதேசிக்கும் ஞான பைரவரையும், நான்கு திருமுகம், நான்கு கரங்கள், பன்னிரண்டு கண்களுடன் வெண்தாமரையில் வீற்றிருக்கும் ஸ்ரீஆதிசண்டேஸ்வரரையும் வழிபட்டுச் செல்லுங்கள்... கல்வியில் முதலிடம் உங்கள் குழந்தைகளுக்குதான்!

- இ. கார்த்திகேயன், படங்கள் எல். ராஜேந்திரன்