ஸ்தல வழிபாடு
தொடர்கள்
Published:Updated:

ராஜேந்திரபட்டினம் ஸ்ரீகுமாரஸ்வாமி ஆலயம்

ராஜேந்திரபட்டினம் ஸ்ரீகுமாரஸ்வாமி ஆலயம்


ஸ்தல வழிபாடு
நல்ல வாழ்க்கைத் துணை அமைய...
ராஜேந்திரபட்டினம் ஸ்ரீகுமாரஸ்வாமி ஆலயம்
ராஜேந்திரபட்டினம் ஸ்ரீகுமாரஸ்வாமி ஆலயம்
ராஜேந்திரபட்டினம் ஸ்ரீகுமாரஸ்வாமி ஆலயம்

வெள்ளாற்றங்கரையில் அமைந்துள்ள தலம்; திருநீலகண்ட யாழ்ப்பாணர் அவதரித்த பூமி; திருஞானசம்பந்தரால் பாடப் பெற்ற ஆலயம்; வேதத்தின் பொருளை, உமையவளுக்கு சிவனார் அருளிய திருத்தலம்... என ராஜேந்திரபட்டினம் ஆலயத்துக்குதான் எத்தனை எத்தனைப் பெருமைகள்?!

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் இருந்து ஜெயங்கொண்டம் செல்லும் வழியில், சுமார் 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது ராஜேந்திரபட்டினம். இந்த ஊரில்தான், ஸ்ரீநீலகண்டேஸ்வரர் எனும் திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார் ஈசன். அம்பாளின் திருநாமம் - ஸ்ரீநீலமலர்க்கண்ணியம்மை. பஞ்ச புலியூர் திருத்தலங்களில் இதுவும் ஒன்று. வியாக்ரபாதர் வழிபட்ட ஆலயங்களை புலியூர் தலங்கள் எனப் போற்றுவர். முன்னொரு காலத்தில் இந்த இடம், வெள்ளெருக்கம்பூக்கள் நிறைந்த வனமாக இருந்ததாம். இங்கே, வியாக்ரபாதர் முனிவர் தவம் செய்து இறைவனை வழிபட்டதால், எருக்கத்தம்புலியூர் என்றானதாகச் சொல்கிறது ஸ்தல வரலாறு.

அதுமட்டுமா? ராஜராஜசோழ மன்னனுக்கு புத்திர பாக்கியத்தையும் அவனுடைய மைந்தன் ராஜேந்திர சோழனுக்கு திருமண வரத்தையும் தந்தருளிய தலம் எனப் போற்றுகின்றனர். இந்த ஆலயத்தின் சாந்நித்தியத்தை உணர்ந்த ராஜேந்திர சோழன், இந்தக் கோயிலுக்கு ஏராளமான திருப்பணிகள் செய்து, ஊரையும் செழிக்கச் செய்தானாம். இதில் குளிர்ந்து போன ஊர்மக்கள், அவனது பெயரையே ஊருக்குச் சூட்டி மகிழ்ந்தனராம்!

ராஜேந்திரபட்டினம் ஸ்ரீகுமாரஸ்வாமி ஆலயம்

ஸ்தல விருட்சம் - எருக்கம்பூ. தீர்த்தம் - நீலோத்பலம்; ஸ்கந்த புஷ்கரணி. இங்கே... ஸ்வாமிக்கு வலப் பக்கத்தில் அம்பாள் சந்நிதி கொண்டிருப்பதால், திருமண வரம் வழங்கும் தலம் என்கின்றனர் பக்தர்கள். ஸ்ரீநீலகண்டேஸ்வரருக்கு ஸ்ரீகுமாரதேவர், திருக்குமாரஸ்வாமி எனும் திருநாமங்கள் உண்டு. முருகப்பெருமான் தன்னுடைய தோஷம் நீங்க, கடும் தவம் செய்து சிவனாரை வழிபட்ட தலம் என்கிறது ஸ்தல புராணம். இங்கே, முருகப்பெருமானால் உருவாக்கப்பட்ட கந்த புஷ்கரணி தீர்த்தக்குளத்தில் நீராடி, அம்பாளின் திருவடியில் மூன்று மஞ்சள் கிழங்கை வைத்தும், ஸ்ரீநீலகண்டேஸ்வரருக்கு வெண்தாமரை மற்றும் வெள்ளெருக்கு மாலை சார்த்தியும் வழிபட, திருமணத் தடை நிவர்த்தியாகும்; விரைவில் வீட்டில் கெட்டிமேளச் சத்தம் கேட்கும்; மாங்கல்ய பலம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

ராஜேந்திரபட்டினம் ஸ்ரீகுமாரஸ்வாமி ஆலயம்

ஆலயத்தில், சுமார் 52 வருடங்களுக்குப் பிறகு, தேர் புதுப்பிக்கும் பணி நடை பெற்று வருகிறது. அடுத்த வருடம் பங்குனித் திருவிழாவின்போது, தேரோட்டமும் நடைபெறும் எனச் சிலிர்ப்புடன் தெரிவிக்கின்றனர் பக்தர்கள்.

அமாவாசை மற்றும் பிரதோஷ நாட்களில், ஸ்ரீநீலகண்டேஸ்வரை வணங்கி வழிபட... கழுத்தில் கல்யாண மாலை விழுவது நிச்சயம்!

- ஜெ. அன்பரசன், படங்கள் ச. தமிழ்குமரன்