நம் சந்ததி செழிக்க, அவர்கள் நலமுடன் வாழ, பித்ருக்களாகிய நம் முன்னோரின் ஆசியும் அருளும் தேவை. திதி- தர்ப்பணங்களாலும், சிராத்த காரியங்களாலும் முறைப்படி பித்ருக்களை நாம் வழிபட, அவர்கள் மகிழ்ந்து நம் வம்சத்தை வளமுடன் வாழ வைப்பார்கள்.
சரி... ஏதோ காரணங்களால், தங்களின் மூதாதையருக்கு உரிய வழிபாடுகளைச் செய்ய இயலாதவர்கள், பித்ரு தோஷத்துக்கு ஆளானவர்கள், என்ன செய்வது?
ஒருமுறை நென்மேலி கிராமத்துக்குச் சென்று ஸ்ரீலெக்ஷ்மிநாராயணரை தரிசித்தால் போதும்!
செங்கல்பட்டிலிருந்து திருக்கழுக்குன்றம் செல்லும் வழியில், சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ளது நென்மேலி. இங்கு கோயில்கொண்டிருக்கும் ஸ்ரீலெக்ஷ்மி நாராயணர்... சிராத்தம் செய்ய இயலாதவர்களின் சார்பாக, தினமும் பித்ரு வேளையான பகல் 12 முதல் 1 மணி வரை (குதப காலம் என்பர்), விரதம் அனுஷ்டித்து சிராத்தமும் செய்கிறார். இதனால் இந்த ஊருக்கு புண்டரீக நல்லூர், பிண்டம் வைத்த நல்லூர் என்றும் வேறு பெயர்கள் உண்டு.
இறைக் காரியங்களின் பொருட்டு வரிப்பணத்தை செலவு செய்த யக்ஞநாராயண சர்மா என்ற பக்தர், ஆற்காடு நவாபின் கட்டளையால் மரண தண்டனைக்கு ஆளானார். இதனால் மனம் கலங்கியவர், மனைவியுடன் சென்று திருவிடந்தை குளத்தில் மூழ்கி உயிர் துறந்தார். வாரிசு இல்லாத அவர்களுக்கு உறவினர்கள் ஈமக்கிரியை செய்ய முற்பட்டபோது, எம்பெருமானே தரிசனம் தந்து, தாமே சிராத்தம் செய்ததாக சாட்சியம் கூறினாராம். அந்த இடத்திலேயே பகவானின் சுயம்பு மூர்த்தமும் தோன்றியது. அந்தத் திருவடிவே இன்றும் நாம் தரிசிக்கும் ஸ்ரீலெக்ஷ்மிநாராயண பெருமாள். உற்ஸவர்- சிராத்த சம்ரக்ஷண நாராயணர். இங்கு மகாலட்சுமிக்கு தனிச்சந்நிதி இல்லை; அவளின் அம்சமாக சாளக் கிராமம் உள்ளது.
|