நூறு முறை அரசமரத்தையும், ஆயிரம் முறை ஆலமரத்தையும், ஒரு லட்சம் முறை வன்னிமரத்தையும் பூஜித்து வணங்கினால் என்ன பலன் கிடைக்குமோ... அதைவிட அதிகப் பலன், ஒரேயரு தேவ அர்க்யவல்லி மலரைக் கண்ணாரக் கண்டு, அதனை இறைவன் சூடிக்கொண்டதையும் தரிசித்துவிட்டால் கிடைக்குமாம்; மோட்சம் கிடைக்கும்; திருக்கயிலாயத்தில் மகா வில்வத்தை தரிசிக்கும் பாக்கியம் கிடைக்கும்; தவிர, இப்பிறவி எடுத்த பயன் பூர்த்தியாகும்; அடுத்த பிறவி என்பதே கிடையாதாம்!
இந்த மலைக்குத் தன் மனைவி லோபாமுத்திரையுடன் வந்து இறைவனை தரிசித்த அகத்திய முனிவர், ''எந்தப் பிறவியிலோ செய்த பாவத்தால் பட்சிகளாகி, தேவ அர்க்யவல்லி பூவையும், அதனைச் சூடியிருக்கும் இறைவனையும் தரிசித்ததால் பலன் கிடைத்து, அவை திருக் கயிலாயத்தை அடையும் பேறு பெற்றன; அந்தப் பூ எப்போது மலரும் என்பதைப் பட்சிகள் முன் கூட்டியே அறிந்துகொள்ளும்; எனவே, பட்சிகளின் பாஷையைப் புரிந்து உணர்வாயாக'' என்று பிருங்கி முனிவருக்கு அறிவுறுத்தினார்.
அதன்படி, பட்சிகளின் பரிபாஷையைக் கூர்ந்து கவனிக்கலானார் பிருங்கி முனிவர். அப்படித்தான் ஒருநாள், தேவ அர்க்யவல்லி பூக்கும் நாளையும், ஹோரையையும் முன் கூட்டியே உணர்ந்து, அந்த இரண்டு கிளிகளும் தங்களுக்குள் சேதி பரிமாறிக் கொண்டதை அறிந்து, ஆனந்தக் கூத்தாடினார்; இறைவனை எண்ணித் தவத்தில் ஆழ்ந்தார்.
குறிப்பிட்ட அந்த நாளில், அந்த ஹோரையில்... சுனையில் இருந்து சங்கு வடிவிலான அந்தப் புஷ்பம், மெள்ள மெள்ள மலர்ந்தது; அந்த வனம் முழுவதும் மணம் பரப்பி, ரம்மியத்தைக் கூட்டியது! கிளிகள் அமைதியாயின; தன் இறக்கைகளைச் சத்தமின்றி விரித்து, மலையில் உள்ள சுனை நோக்கிப் பறந்து வந்தன. பிருங்கி முனிவரும் மெள்ளக் கண் திறந்தார். அந்தச் சுனையில் அழகு மிளிர மிதந்துகொண்டிருந்த அந்தப் பூ, அப்படியே நகர்ந்து, அங்கே குடிகொண்டிருக்கும் லிங்கத் திருமேனியின் திருமுடியில் அமர்ந்துகொண்டது. அந்த நிமிடம்... பிருங்கி முனிவர் மற்றும் கிளிகளுக்கு திருக்காட்சி தந்தார் சிவனார். கிளிகள் திருக்கயிலாயம் நோக்கிப் பறந்தன; பிருங்கி முனிவரை ஆட்கொண்டார் ஈசன் என்கிறது ஸ்தல புராணம்.
|