ஸ்தல வழிபாடு
தொடர்கள்
Published:Updated:

காளஹஸ்தி! உடனடி தேவை...

காளஹஸ்தி! உடனடி தேவை...


சிறப்பு கட்டுரை
பிரார்த்திப்போம்!
காளஹஸ்தி! உடனடி தேவை...
காளஹஸ்தி! உடனடி தேவை...

'கோபுர தரிசனம் கோடி புண்ணியம்!' அந்தக் கோபுரமே சுக்குநூறாக இடிந்து விழுந்தால், யாரால்தான் தாங்கமுடியும்?! மனத்தில் சஞ்சலங்கள் பிறப்பது இயல்புதானே! தோஷங்கள் அனைத்தையும் போக்கி, சந்தோஷத்தையும் நிம்மதியையும் அருள்வதுதானே ஆலயங்கள்! ஆனால், ஆலயத்தின் அழகிய- கம்பீரமான கோபுரமே தரைமட்டமாகிக் கிடந்தால்... 'இது தோஷமா... இதற்கென்ன பரிகாரம்?' என்று பதறித்தானே போவார்கள் பக்தர்கள்!

மாநிலம் கடந்த ஆலயம்தான் காளஹஸ்தி; ஆனாலும், தமிழ்கூறும் நல்லுலகில், பலரும் தரிசித்துவரும் அற்புத ஆலயம் இது; கண்ணப்ப நாயனார் வழிபட்டு அருள் பெற்ற புண்ணியத் தலம்; ராகு- கேது தோஷத்தை நிவர்த்தி செய்யும் திருக்கோயில்... என அற்புதங்கள் நிறைந்தது, காளஹஸ்தி திருத்தலம்!

''காளஹஸ்தி ஆலயம், 14-ஆம் நூற்றாண்டில், ஆகம விதிப்படி கட்டப்பட்ட கோயில். மற்ற கோயில்களைவிட, காளஹஸ்தி கோயில் கோபுரத்துக்கு தனித்துவம் ஒன்று உண்டு. அதாவது, கிருஷ்ணதேவராயர் காலத்தில், அஸ்திவாரத்தில் கருங் கல்லையும் மேலே செங்கல்லையும் கொண்டு, களிமண் பூச்சுடன் எழுப்பப்பட்ட கோபுரம் இது! கோபுரம் இடிந்து விழுந்ததற்கான ஆரம்பம், மிகச் சிறிய விரிசல்தான். சுமார் 20 வருடங்களுக்கு முன்பு சின்னதாக விரிசல் ஏற்பட்டபோதே சரிசெய்திருந்தால், இந்தத் துயரம் நிகழ்ந்திருக்காது'' என்கிறார் மாமல்லபுரம் சிற்பத் துறைப் பேராசிரியர் ராஜேந்திரன்.

காளஹஸ்தி! உடனடி தேவை...

இதுவரை சுமார் 1,500 கோயில்களின் கும்பாபிஷேக வைபவத்தை நடத்தியவர் ராஜா பட்டர். மதுரை திருப்பரங்குன்றத்தில் வேதபாடசாலை நடத்தி வரும் இவரிடம் கேட்டபோது, ''நம்

ஆலயங்கள் எல்லாமே ஆகம விதிக்கு உட்பட்டுத்தான் கட்டப்பட்டிருக்கின்றன. என் தாத்தா, தந்தை, இப்போது நான்... என தலைமுறை தலை முறையாக எத்தனையோ கோயில்களுக்குக் கும்பாபிஷேகம் செய்து வந்திருக்கிறோம்.

சுமார் 40 வருடங்களுக்கு முன்பு, தென்காசியில் கோயில் கோபுரம் ஒன்று இடிந்து விழுந்தது. பிறகு, அங்கே புதிய கோபுரம் அமைக்கப்பட்டு, விமரிசையாகக் கும்பாபிஷேகமும் செய்யப்பட்டது. 'ஆந்திரா வுக்குக் கேடு காலம்; உலகம் அழியும் தருணம் வந்துவிட்டதன் அடையாளம்தான் இது' என்றெல்லாம் இப்போது சொல்வதுபோல், அப்போதும் சொன்னார்கள். ஆனால், அன்றைக்குச் சின்ன அசம்பாவிதமோ, துக்கச் செயலோ... எதுவும் நிகழவில்லை'' என்ற வரிடம், 'இதற்கு பரிகாரம் ஏதும் உண்டா?' என்று கேட்டோம்.

''ராஜகோபுரத்தின் இடது மற்றும் வலது பக்கத்தில், நாசித் திரை என்று ஒன்று உண்டு. சுழற்றியடிக்கும் காற்று, இடியுடன் கூடிய மழை ஆகிய தருணங்களில், அந்த நாசித் திரையானது கீழே விழ நேரலாம். அப்படி விழுந்தால், உடனே செய்யவேண்டிய ஹோமங்கள், பரிகார அபிஷேகங்கள் குறித்து ஆகமமும் வேதமும் சொல்லியிருக்கின்றன. ஆனால், கோபுரமே இடிந்து தரைமட்டமாவது என்பது, ஆகமத்துக்கு அப்பாற்பட்ட வேதனையான சம்பவம்! ஆகமம், வேதம், சாஸ்திரம்... அனைத்தையும்விட சக்தியானது கூட்டுப் பிரார்த்தனை. மக்கள் அனைவரும், 'இப்படியரு வேதனையான சம்பவம் இனி நிகழக் கூடாது' என பிரார்த்திப்பதுதான் ஒரே வழி; ஆறுதல்!'' என்றார் ராஜா பட்டர்.

காளஹஸ்தி! உடனடி தேவை...

இதுகுறித்து, சேஷாத்ரிநாத சாஸ்திரிகள் என்ன சொல்கிறார்?

''அறம் வளர ஆலயம் வேண்டும் என்கிறது சாஸ்திரம் (குர்யாத் யசோ தர்மாபிலிருத்தயே). தேவதைகளின் இருப்பிடம் கோயில்கள்; அறத்தை வளர்ப்பதுடன் கோயிலை உருவாக்கியவரின் புகழையும் வளர்க்கும்! உடலில்... இதயத்தில் ஆத்மா குடியிருக்கிறது எனில், தேசத்தின் இதயமான

ஆலயத்தில் பரமாத்மா குடியிருக்கிறார். உடலுறுப்புகள் வலுவிழந்தால், உடலையும் உள்ளத்தையும் பாதிப்பதுபோல், மக்களின் செயல்பாட்டில் விபரீதங்கள் இருப்பின், அது ஆள்பவர்களையும் ஆலயங்களையும் பாதிக்கும் என்கிறது சாஸ்திரம். இதைத்தான் அதர்மம் என்கிறோம்.

அதுமட்டுமா?! காற்று தூய்மையை இழக்கும்; தண்ணீர் கெடும்; நிலம், பயிர்கள், அந்த விளைச்சலில் கிடைத்த உணவைச் சாப்பிட்ட மக்கள்... எனச் சங்கிலித் தொடராக மாசு பரவும். இது மனிதனது சிந்தனையைப் பாதிக்கும்; இதனால், அவன் தகாத செயல்களில் ஈடுபடுவது அதிகரிக்கும். இதன் தாக்கம் ஆலயங்களையும் பாதிக்கும்.இவற்றால் சினம் கொள்ளும் தேவர்கள், விபரீதங்களை நிகழ்த் துவர் என்கிறது சாஸ்திரம். இதனை 'உத்பாதம்' (பேரழிவு) என்பர்.

ஆலயம், கோபுர வாசல், கொடி மரம் ஆகியவை இயற்கையாலும் பராமரிப்பின்றியும் நிலைகுலைந்து சரிவது பேரழிவுக்கான எச்சரிக்கை மணி என்கிறார் வராஹமிஹிரர் (ப்ரா சாத பவள தோரண கேத்வாதி...).

தற்போதைய தேவை... தனிமனித ஒழுக்கம்; இறைச் சிந்தனை; ஆலயப் பராமரிப்பு! மனிதர்களிடம் நல்லொழுக்கம் இருந்துவிட்டால், இறைச் சிந்தனையும், அதைத் தொடர்ந்து ஆலயங்களைப் பராமரிக்கும் ஆசையும் தானாக வந்துவிடும். ஜனங்கள் பொருளாதார முன்னேற்றத்தில் காட்டுகிற ஆர்வத்தைத் தனிமனித ஒழுக்கத்திலும் காட்டினால் தேவலை!'' என்கிறார் சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்.

கோபுரம் இடிந்ததை துர்ச் சகுனமாகக் கருதாமல், தனி மனித ஒழுக்கம் பேண இறைவன் நமக்கு விடுத்த எச்சரிக்கை மணியாக இதை எடுத்துக்கொள்வோம். இறைவனைப் பிரார்த்திப்போம்!

- இர. ப்ரீத்தி, ந. வினோத்குமார்,
படங்கள் கே. கார்த்திகேயன், எஸ். கிருஷ்ணமூர்த்தி