விஷ்ணுசித்தருக்குப் பெருமாள்தான் உலகமே! தன் பேச்சு, செயல், சிந்தனை எல்லாவற்றிலும் பெருமாளைப் பற்றியபடியே வாழ்ந்து வந்தார். தனக்கென எதுவும் வேண்டிக்கொள்ளாமல், சர்வமும் பரம்பொருளே என இறைபக்தியில் திளைத்திருந்தார் விஷ்ணுசித்தர்.
'இப்படியரு மகன் பிறக்க, எந்த ஜன்மத்தில் என்ன புண்ணியம் செய்தோமோ...' எனத் தந்தையார் முகுந்த பட்டரும், தாயார் பத்மாவதியும் பூரித்தனர்.
குரோதன வருடம், ஆனி மாத ஞாயிற்றுக்கிழமையில், சுவாதி நட்சத்திரத்தில் அவதரித்த விஷ்ணுசித்தர், இளம் வயது முதற்கொண்டே, பெருமாளின்மீது அளவற்ற பக்தியுடன் வளர்ந்தார். வேதங்களையும் சாஸ்திரங்களையும் கற்றுத் தேர்ந்தார்.
ஏழாம் நூற்றாண்டு... மதுரையை அப்போது ஆட்சி செய்த வல்லாரதேவ மன்னனின் திருச்சபையில் ஒரு சர்ச்சை... அப்போது, ''நாராயணனே சகலமும்! அவரே பரம்பொருள்'' என்று வேத விளக்கங்களையும், சாஸ்திர நுணுக்கங்களையும் சொல்லி அசத்தி, அனைவரையும் தன் பக்கம் ஈர்த்தார் விஷ்ணுசித்தர். இவரது விளக்கத்தைக் கேட்டு நெகிழ்ந்த மன்னன், இவருக்குப் பணமுடிப்பு வழங்கிக் கௌரவித்தான்.
அதுமட்டுமா?! விஷ்ணுசித்தரை மரியாதை செய்யும் விதமாக, அவரை யானையின்மீது அமரவைத்து, மதுரை வீதிகளில் வீதியுலா வரச் செய்தான். இந்த தருணத்தில் கருட வாகனராக அவருக்குக் காட்சி தந்தார் திருமால். மெய்சிலிர்த்த விஷ்ணுசித்தர், திருப்பல்லாண்டு பாடி, பெருமாளைப் போற்றினார்.
தானும் தன் மனைவி மக்களும் நன்றாக வாழவேண்டும் என எண்ணாமல், இறைவன் நீடூழி வாழவேண்டும் என திருப்பல்லாண்டு பாடி மகிழ்ந்த விஷ்ணுசித்தருக்கு இன்னொரு பெயரும் உண்டு. அது... பெரியாழ்வார். ஆழ்வார்களில் பெரியவர் இவர் என்பதால், பெரியாழ்வார் எனும் திருநாமம் வந்ததாம்!
|