ஸ்ரீகூர்மம்- அவதாரத்தின் பெயரிலேயே திகழும் அற்புதத் தலம். கருவறையில் ஆமை (ஸ்ரீகூர்ம) வடிவிலேயே இறைவன் அருள் பாலிக்கும் புண்ணிய க்ஷேத்திரம்!
ஆந்திர மாநிலம்- ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில்... வங்கக் கடற்கரையில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் உள்ளது ஸ்ரீகூர்மம். விசாகப்பட்டினத்தில் இருந்து சுமார் 130 கி.மீ. தூரம் (சென்னையில் இருந்து விசாகப் பட்டினம் சென்று, அங்கிருந்து பேருந்துகள் அல்லது மீண்டும் ரயில் மார்க்கமாகவே ஸ்ரீகாகுளத்தை அடையலாம். ஸ்ரீகூர்மம் அருகில் சோமேஸ்வரர் ஆலயம், முகலிங் கேஸ்வரர், பீமேஸ்வரர் ஆகிய சிவத் தலங்களும் அமைந்திருப்பதால் அவற்றையும் தரிசித்து வரலாம்).
எழிலார்ந்த கிராமத்தின் நடுநாயகமாகத் திகழ்கிறது கோயில். 'பரம்பொருளே சரணம்... பரந்தாமா சரணம்' என கூர்மநாதரின் பாதாரவிந்தங்களில் சரணடையும் உள்ளத் துடிப்புடன் உள்ளே நுழைகிறோம்.
நீர் ததும்பக் காட்சி தருகிறது ஸ்வேத புஷ்கரணி. கோடி புண்ணியம் தரும் அற்புத தீர்த்தம் இது. ஆலயக் கட்டுமானம், மத்திய காலச் சிற்பக் கலையுடன் திகழ்கிறது. அழகிய மண்டபங்களையும், தூண் சிற்பங்களையும் ரசித்தபடி வலம் வரும் போதே நமக்குள் ஒரு கேள்வி...
ஸ்ரீகூர்மநாதனுக்கு இப்படியோர் அழகான கோயிலைக் கட்டும் பேறு எவருக்குக் கிடைத்திருக்கும்? இதற்கு, கோயிலின் கல்வெட்டு சாசனங்களில் பதில் கிடைக்கிறது.
முற்காலத்தில் இந்தப் பகுதி... வைதரணி நதிக்கும் வராக நதிக்கும் இடையே பரந்துவிரிந்திருந்த கலிங்க தேசத்துக்கு உட்பட்டிருந்ததாம். இந்தப் பகுதியை ஆட்சி செய்த கீழைக் கங்க அரசர்கள் பலரும் சிவ வழிபாட்டில் திளைத்திருந்தனர் என்றும் அவர்களில் ஒருவன் இந்தக் கோயிலுக்கு திருப்பணி செய்தான் என்றும் கல்வெட்டு சாசனங்கள் தெரிவிக்கின்றன (வியப்பான விஷயம்தான்). ஆமாம்! கி.பி. 12-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்தக் கோயில், அனந்தவர்மன் என்ற கங்க அரசனால் திருப்பணி செய்யப்பட்டதாம். மேலும், கோயிலுக்கு அளிக்கப்பட்ட நிவந்தங்கள் குறித்தும் நிறைய சாசனங்கள் உள்ளன. இவற்றின் மூலம் கங்க அரசர்கள் பலரது வரலாற்றையும் அறிந்துகொள்ளலாம் என்கிறார்கள்.
மன்னர்கள் மட்டுமின்றி, மகான்களாலும் சிறப்பிக்கப் பட்ட ஆலயம் இது. மத்வாச்சார்யரின் சீடராகிய ஸ்ரீநரஹரி தீர்த்தர், இங்கு சிறிது காலம் தங்கியிருந்து ஆன்மிகப் பணியாற்றியிருக்கிறாராம். நம் உடையவர் ஸ்ரீராமானுஜரைப்போல கலிங்க தேசத்தில் பக்திப் பணியாற்றியவர் இவர். அடடா... ஸ்ரீராமானுஜர் என்றதும்தான் ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது.
ஆமாம்... இந்தக் கோயிலில், ஸ்ரீராமானுஜரும் அருட் பணியாற்றியிருக்கிறார் என்று செவிவழித் தகவல்கள் உண்டு. ஸ்ரீஜெகந்நாதப் பெருமாளை தரிசிக்க பூரிக்குச் சென்ற ஸ்ரீராமானுஜர், அங்கு சிலகாலம் தங்கியிருந்தாராம். அங்குள்ளவர்கள், தங்கள் மனதுக்குத் தோன்றியதுபோல் வழிபாடுகள் நடத்திக்கொண்டிருந்தனராம். ஸ்ரீராமானுஜர், வழிபாடுகளை நெறிப்படுத்த முயற்சிகள் மேற்கொண்டாராம்.
நம்பிக்கை அடிப்படையிலான அந்த வழிபாடுகள் அப்படியே தொடரட்டும் என்று திருவுளம் கொண்ட, பூரி ஜகந்நாதர், கருடாழ்வாரை ஏவி, ஸ்ரீராமானுஜரை ஸ்ரீகூர்மம் தலத்தில் சேர்ப்பித்ததாகச் சொல்வர்.
இடைப்பட்ட காலத்தில் சைவத் தலமாக விளங்கிய இந்தக் கோயிலில் மீண்டும் வைணவத்தை ஸ்தாபித்ததும் ஸ்ரீராமானுஜரே என்றும், இங்கிருந்தே அவர் சிம்மாசலத்துக்குச் சென்றார் என்றும் கூட ஒரு கருத்து உண்டு. ஆனால், இந்தத் தகவல்களுக்குச் சரித்திரபூர்வமான ஆதாரங்கள் இல்லை!
ஆலயம் பற்றிய சுவாரஸ்யமான பல தகவல்கள் மனதை நிறைக்க... ஸ்ரீகூர்ம நாதரை தரிசிக்க விரைகிறோம்.
பிராகாரத்தில்... சீதா, லட்சுமணருடன் ஸ்ரீராமன் தரிசனம் தரும் பெரிய ஸ்தூபம் ஒன்று உள்ளது. தொடர்ந்து ஸ்ரீகருட சந்நிதி, கொடிமரம். ஸ்வாமியின் சந்நிதிக்கு இடப்புறம் ஸ்ரீலட்சுமிதேவி தரிசனம்!
அமர்ந்த கோலத்தில், மேற்கு நோக்கி அருள்கிறாள் ஸ்ரீகூர்மநாயகி! நமது வேண்டுதலை செவிமடுத்துத் தன் நாயக னிடம் நமக்காகப் பரிந்துரைக்கும் ஸ்ரீலட்சுமி பிராட்டி!
'தாயே... வஞ்சம் இல்லா நெஞ்சமும், துன்பம் இல்லா வாழ்வும் தா..!' என வணங்கி நிமிர்ந்தால்... ஆயிரம் இதழ் கொண்ட தாமரையாய் மலர்ந்திருக்கும் அந்த தேவியின் திருமுகத்தில்... 'இப்போதே தந்தோம்' என்பதுபோல் இதழோரப் புன்னகை! அற்புத தரிசனம்!
|