அண்ட சராசரங்களுக்கும் ஆதிநாயகியாம் பராசக்தி, ஜவ்வாது மலைக்கு அருகில், பாலாற்றின் தென் கரையில், வெட்டுவாணம் எனும் ஊரில் எல்லையம்மனாக அருளாட்சி நடத்தி வருகிறாள்.
வேலூரில் இருந்து சித்தூர் செல்லும் சாலையில் சுமார் 23 கி.மீ. தொலைவில் உள்ளது வெட்டுவாணம். படவேட்டில் ஸ்ரீரேணுகாம்பாளாகக் குடிகொண்டிருப்பவள், இங்கே எல்லையம்மனாக அருள்பாலிக்கிறாள்.
ஒருகாலத்தில், குண்டலிபுரம் என அழைக்கப்பட்ட இந்தப் பகுதியில் கோட்டை கட்டி, படைவீடு அமைத்து போர் புரிந்தானாம் நன்னன் எனும் மன்னன். அழகு கொஞ்சும் ஜவ்வாது மலையில் உற்பத்தியாகும் நதியானது இரண்டு கிளைகளாகப் பிரிந்து, படவேடு வழியாக ஒன்றும், வெட்டுவாணம் வழியே ஒன்றுமாகப் பிரிந்து செல்கிறதாம். இரண்டுமே புண்ணிய நதிகள் எனப் போற்றுகின்றன ஸ்தல புராணம்.
ஜமதக்னி முனிவரின் மனைவி ரேணுகாதேவி. இவர்களுக்கு விசு, விஸ்வாஸ், விஸ்வரூபன், பரஞ்ஜோதி மற்றும் பரசுராமன் என ஐந்து புதல்வர்கள்.
ஜமதக்னி முனிவர் பூஜை செய்யத் தேவையான தண்ணீரை எடுத்து வருவதற்காக, ரேணுகாதேவி வழக்கம் போல் ஒருநாள் ஆற்றுக்குச் சென்றபோது, நீரில் பிரதிபலித்த கந்தர்வனது திருமுகத்தைக் கண்டு, அவனது அழகில் சில நிமிடம் மெய்ம்மறந்து நின்றாள். இதைத் தனது ஞானதிருஷ்டியால் அறிந்த ஜமதக்னி முனிவர் கோபம் கொண்டு, தன் மகன்களை அழைத்து, ரேணுகாதேவியின் தலையை வெட்டி எறிய உத்தரவிட்டார். தாயின்மீது கொண்ட பாசத்தால், முதல் நான்கு மகன்களும் இதற்கு மறுத்துவிட, அவர்களைச் செடி-கொடிகளாக மாறும்படி சபித்தார் ஜமதக்னி.
|