சுவாமி விவேகானந்தர்மீது, செல்வந்தர் ஒருவர் அளவற்ற மதிப்பு கொண்டிருந்தார். ஒருநாள், அவரின் வேண்டுகோளை ஏற்று, அவரது வீட்டுக்கு உணவருந்தச் சென்றார் விவேகானந்தர். விருந்து முடிந்ததும், நடனக் கச்சேரி! அதைக் கேட்டு திடுக்கிட்டார் விவேகானந்தர்.
துறவிகள், இதுபோன்ற களியாட்டங்களில் பங்கு பெறுவதும், நடனப்பெண்ணைப் பார்ப்பதும் சரியல்லவே என்று தயங்கினார். ஆனாலும், தர்ம சிந்தனைமிக்க செல்வந்தரின் மனம் புண்படக்கூடாது என எண்ணி, நடன நிகழ்ச்சியைக் காணச் சம்மதித்தார்.
வாத்தியங்கள் முழங்கின; இனிய குரலில் பாடியபடி நடனமாடினாள் நாட்டியப் பெண். அவளது பாடலில் ஆழமான கருத்து பொதிந்திருந்தது. 'கருமான் ஒருவனிடம் இரும்புத் தகடு ஒன்று இருந்தது. இரண்டு வெவ்வேறு பொருட்கள் செய்வதற்காக, அந்த இரும்புத் தகட்டை இரண்டு துண்டுகளாக்கினான் அவன். அவற்றில் ஒன்று கூரிய கத்தியாக மாறி, கசாப்புக் கடையில் உயிரைக் கொல்லும் தொழிலில் ஈடுபட்டது. மற்றொன்று, கோயில் கொடிமரம் ஒன்றின் அடிப்பட்டையாக மாறியது. மக்கள் அனைவரும் கொடிமரத்தில் இருந்த பகுதியைத் தொட்டு வணங்கினர். இரும்பு ஒன்றுதான். ஆனால், அதன் இரு வேறு பகுதிகள் விதிவசத்தாலும், அவை இருக்கின்ற சூழலாலும் வேறு நிலைகளை அடைந்தன. இதில், இரும்பின் குற்றம் ஏதேனும் உண்டா?' - அந்தப் பாடலின் கருத்து இதுதான்.
இசை, நடனப் பெண்ணின் குரலில் இருந்த குழைவு மற்றும் நடனம் ஆகியவற்றைக் கடந்து, பாடலினுள் பொதிந்துகிடந்த கருத்தைக் கேட்டதும், விவேகானந்தரின் இதயம் இளகியது. 'உண்மைதான்! அடிப்படையில் அனைவரும் புனிதமானவர்களே! பிழைப்புக்காகப் பொது மேடையில் ஆடும் பெண், குடும்பப் பெண்ணைவிட எந்த விதத்திலும் தாழ்ந்தவள் இல்லை. வாழ்க்கையின் நிர்பந்தங்களும் சூழலுமே உயர்வு- தாழ்வு போன்ற போலி எண்ணங்களை உருவாக்குகின்றன. கருத்துள்ள கவிதை இது!' என உருகினார் விவேகானந்தர்.
இதுபோல் ஆயிரக்கணக்கான பாடல்கள்; அனைத்திலும் வாழ்க்கையைச் சொல்லும் அரிய கருத்துக்கள்; பக்தியையும் நல்லறிவையும் மக்களிடையே பரப்புவதை லட்சியமாகக் கொண்ட அத்தகைய பாடல்களை எழுதியவர்... சூர்தாஸ்.
மதுராவுக்கு அருகில் உள்ள ப்ரஜ் பூமியில், வறுமை சூழ்ந்த அந்தணக் குடும்பத்தில், கி.பி. 1478-ஆம் வருடம் பிறந்தார் சூர்தாஸ். பிறவியிலேயே அவருக்குப் பார்வை இல்லை. பார்வையற்ற அந்தக் குழந்தையைக் குடும்பத்தார் பேணி வளர்க்கவில்லை என்பது இன்னொரு சோகம். பிஞ்சுப் பிராயம் முதலே, அவரது ஊனக்கண்களைக் குறித்துப் பரிகசித்து, அவரை உதாசீனப்படுத் துவதே அவர்களின் வழக்கமாகிப் போனது.
|