தவலையைத் தூக்கிக்கொண்டு நிதானமாகத் தெருக்கோடிக்குப் போய், தண்ணீரை நிரப்பித் தோளில் வைத்துக்கொண்டு, வீட்டுக்கு வந்து, பெரிய அண்டாவில் ஊற்றி, மறுபடியும் போய் இன்னொரு தவலை சுமந்து... இப்படி இரண்டு, மூன்று தவலைகள் தண்ணீர் எடுத்து வந்து அண்டாவை நிரப்பி, தவலையையும் நிரப்பிக் கீழே வைத்துவிட்டு, மறுபடியும் புத்தகத்தோடு உட்காருவான்.
பகல் முழுவதும் அலைந்ததால் உண்டான அயர்ச்சி மேலிட, உடம்பைத் தரையில் கிடத்துவான். மனம், கிடத்தப்பட்ட உடம்பை வேடிக்கை பார்க்கும். அது உறங்காமல் உள்ளுக்குள்ளே எப்போதும் விழித்துக்கொண்டு இருக்கும். உடம்பு நன்றாக ஓய்வெடுத்தது. உள்ளம் அமைதியாக, எந்த உணர்வுமற்று, விழிப்பு நிலையில் இருந்தது. உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது.
பள்ளிக்குப் போகும்போது, ஆகாயத்தின் பிரமாண்டம் மனதைக் கவரும். எல்லாப் புராணங்களும் 'கடவுள் ஆகாயத்தில் தோன்றினார்' என்றுதானே சொல்கின்றன! இப்போது வரமாட்டாரா, வந்து எதிரே நிற்கமாட்டாரா, 'ரிஷபாரூடராக...' என்று பெரிய புராணம் அடிக்கடி சொல்கிறதே.. அப்படி, ரிஷபத்தின் மீது அம்மையோடு வந்து நின்று, 'வேங்கடராமா' என்று கூப்பிடமாட்டாரா, 'என்ன' என்று நாம் அவரிடம் ஓடமாட்டோமா என்று உள்ளே மனம் ஏங்கும்.
கோயிலுக்குள் போய் சந்நிதியில் நிற்கும்போது... வெறுமே விபூதி, குங்குமம் இட்டுக்கொண்டு அடுத்த சந்நிதிக்குப் போகவேண்டும் என்கிற மனதின் பரபரப்பு அடங்கிப் போயிற்று. கோயில் என்பது வேகமாகவோ வேடிக்கையாகவோ சுற்றுகிற இடமில்லை. சரியான மனநிலையில், சரியான இடத்தில் இருந்து, சரியானபடி தரிசனம் செய்தால், உள்ளுக்குள் இறை ஈடுபாடு கூர்மையாகும். பிரதிமை நடராஜரோ, அம்பாளோ யாராக இருந்தாலும், அந்தப் பிரதிமையின் மேன்மை, அது சொல்லும் விஷயம் நெஞ்சுக்குள் 'குபுக்'கென்று பற்றிக் கொள்ளும். கால் தூக்கி ஆடுகின்ற களி நடனம் என்னவென்று தெரியும். எல்லையில்லா ஆனந்தத்தை ஒரு சிற்பி இப்படித்தான் வடிக்கமுடியும் என்பது புரியும்.
மனம் மனதோடு பேசுவதுகூட ஒரு கூடல்தான்; மூச்சு உள்ளே புகுந்து வெளியே வருவதும் ஒரு கூடல்தான்; பார்வை ஒன்றின்மீது பட்டு ஒரு விஷயம் புரிவதும் கூடல்தான்; இரண்டு பேர் பேசுவதும் கூடல்தான்; வணக்கம் சொன்னாலும் கூடல்தான். வெயிலிலிருந்து மர நிழலில் ஒதுங்குவது, குளிரிலிருந்து வெப்பத்துக்குப் போவது எல்லாமே கூடல்தான். இதை எப்படிச் சொல்ல; எந்த வார்த்தையில் விவரிக்க!
ஆவுடையாரும் லிங்கமும் ஓர் அடையாளம்தான்; உலகம் முழுவதும் கூடிக்கூடி இடையறாது ஒன்றோடு ஒன்று கலந்துகொண்டிருக்கிற விஷயம் என்பதைச் சொல்லத்தான் இந்தப் பிரதிமை.
இந்த நினைப்பு உள்ளுக்குள்ளே தோன்ற, மனம் பரிதவித்து எழும். 'வா! வந்து என்னுள் புகுந்துகொள். என்னை ஆட்சி செய். என்னை மயக்கித் தனியே பித்தனாக விடாதே! என்னை முழுவதுமாகத் தின்று தீர்த்துவிடு' என்று கதறும். கண்ணீர் பெருகும். கைகூப்பி விம்மி விம்மி அழும்.
எதிரே, மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள சந்நிதிகளில்... வேங்கடராமன், உள்ளேயிருந்த 'தான்' என்ற இடத்திலிருந்து 'கடவுள்' என்ற இடம் நோக்கிக் கதறினான். அது அவலமான அழுகையில்லை; ஆனந்தக் கண்ணீருமில்லை. அது தானற்றுக் கிடக்கும்போது ஏற்படுகின்ற நிகழ்ச்சி; தானே எல்லாமுமானபோது ஏற்பட்ட பரவசம்.
|