அதன்படி, சிதம்பரத்துக்கு வந்துசேர்ந்தார் பெரியவா. விடியற்காலைல... யார்கிட்டயும் எதுவும் சொல்லாம, நேரா விறுவிறுன்னு கோயிலுக்குப் போயிட்டார்.
அங்கே... சிவகங்கை தீர்த்தக்குளத்துல ஸ்நானம் பண்ணிட்டு, நித்திய அனுஷ்டானத்தையும் முடிச்சிண்டு, நேரா நடராஜர் சந்நிதிக்குப் போய் நின்னுட்டார்.
அப்பத்தான் உஷத் கால பூஜைக்குத் தயாராகிட்டிருந்தாங்க தீட்சிதர்கள். சுவாமிகளைப் பார்த்ததும் தூக்கிவாரிப் போட்டுது அவர்களுக்கு! சாட்சாத் பரமேஸ்வரனே தரிசனம் தர்றதுபோல எண்ணிப் பரவசமானாங்க. பெரியவாளை இத்தனை நெருக்கத்துல பார்த்த சந்தோஷத்துல, தங்களையே மறந்துபோய் சிலையா நின்னுட்டாங்க.
அப்புறம், ஒருவழியா நிதானத்துக்கு வந்தவங்க, பூர்ண கும்ப மரியாதையெல்லாம் செஞ்சு, எந்தக் குறையும் இல்லாம பெரியவாளை நமஸ்காரம் பண்ணி, ஆசீர்வாதம் வாங்கிக்கிட்டாங்க.
அதேநேரம்... சிதம்பரம் கோயிலுக்குள் காஞ்சிப் பெரியவா வந்திருக்கிற தகவலைக் கேள்விப்பட்டு, ஊர் ஜனங்க மொத்தமும் தபதபன்னு கோயி லுக்குள்ளே வந்துட்டாங்க. எல்லாரும் பெரியவாளை தரிசனம் பண்ணி, சிலிர்ப்பும் தவிப்புமா நிக்கறாங்க. 'இந்தச் சம்பவம் நடக்காதா? காஞ்சி மகானை கண்ணாரப் பார்க்கற பாக்கியம் கிடைக்காதா?'ன்னு எத்தனை வருஷத்து ஏக்கம் இது! தங்களோட பிரார்த்தனை பலிச்ச சந்தோஷமும் நிறைவும் அத்தனை பேர் முகத்துலயும் தெரிஞ்சுது.
சரி... சிதம்பரத்துக்கு வந்தாச்சு; எல்லாரையும் பார்த்தாச்சுங்கறதோட பெரியவா கிளம்பிடலை. அடுத்த நாள் துவங்கி, பதினைஞ்சு நாளைக்கு, ஆயிரங்கால் மண்டபத்துல தங்கி, உபந்யாசம் பண்ணினார் பெரியவா. சிதம்பரத்து தீட்சிதர்களுக்கும் ஊர் மக்களுக்கும் பரம சந்தோஷம்!
காஞ்சி மகான், பழுத்த ஞானி. வேற யாரும் செய்யாத, சுவாமிகள் மட்டுமே செஞ்ச காரியம் இது. 'இருநூத்தம்பது வருஷத்துல... பீடத்துல இருந்தவா யாருமே சிதம்பரம் கோயிலுக்குப் போனதில்லை. நாம மட்டும் போய், எதுனா பிரச்னையை உண்டாக்கணுமா?'ன்னெல்லாம் அவர் யோசிக்கலை. 'செயற்கரிய செய்வோர் பெரியோர்'னு சொல்வாங்களே... அப்படித்தான் அமைஞ்சுது இந்தச் சம்பவம்!
சிதம்பரம் கோயில்ல, நடராஜ பெருமானை தரிசனம் பண்ணினப்ப, பெரியவா சங்கல்பம் ஒண்ணு செஞ்சுண்டார். அதாவது, 'தூக்கிய திருவடி'ம்பாங்களே... அந்தக் குஞ்சிதபாதத்துக்கு நவரத்தினக் கவசம் ஒண்ணு சார்த்தணும்னு பிரார்த்தனை பண்ணிண்டார்.
அதுக்கப்புறம், சுமார் 20 வருஷம் கழிச்சு, நவரத்தினத்தாலான கவசத்தை, குஞ்சிதபாதத்துக்குச் சார்த்தி, தன் ஆசையை, பிரார்த்தனையை பூர்த்தி செஞ்சுண்டார் பெரியவா.
அன்னிக்கி என்ன நாள் தெரியுமா?
திருவாதிரை!
தீட்சிதர்களுக்கெல்லாம் மனம் கொள்ளாத பூரிப்பு; முகம் முழுக்க அப்படியரு சந்தோஷம். ஆடல்வல்லான் நடராஜபெருமானை, நவரத்தின கவசம் சாத்தின அலங்காரத்துல பார்த்துட்டு, சிதம்பரத்து மொத்த மக்களும், மெய்ம்மறந்து நின்னாங்க!'' என்று உணர்ச்சிப் பொங்கத் தெரிவித்தார் லட்சுமிநாராயணன்.
|