மந்திரங்கள் மகத்துவமானவை; இவற்றைக் காதாரக் கேட்பதற்கான வசதிகள் இன்றைக்கு அதிகம். ஆனால், 'ஓம் நமோ நாராயணா' எனும் அஷ்டாட்சர மந்திர உபதேசத்தைப் பெற, ஸ்ரீராமானுஜர் பட்ட கஷ்டங்கள் அதிகம்.
ஸ்ரீரங்கஸ்ரீயின் பொறுப்புக்கு வந்த உடையவர் எனும் ராமானுஜர், பெரியநம்பிகளிடம் த்வய மந்திரம் மற்றும் விளக்கத்தைக் கற்றறிந்தார். பெரிய நம்பிகள், ''இன்னும் சில மந்திரங்களை, ஆளவந்தாரின் அந்தரங்கச் சீடரான திருக்கோட்டியூர் நம்பியிடம் கற்றுக்கொள்'' எனக் கூறினார். அதன்படி, ஸ்ரீரங்கத்தில் இருந்த ஸ்ரீராமானுஜர், நம்பிகளிடம் மந்திரோபதேசம் பெற, திருக்கோட்டியூருக்குச் சென்றார். ஆனால், ராமானுஜரை ஏறெடுத்தும் பார்க்கவில்லை நம்பிகள். கனத்த மனதுடன் திருவரங்கம் திரும்பிய ராமானுஜர், அரங்கனிடம் முறையிட்டார். உடனே அரங்கன், திருக்கோட்டியூர் நம்பிகளிடம், 'நம் ராமானுஜனுக்கு ரகசிய அர்த்தங்களை உபதேசியும்' என அர்ச்சகர் மூலமாகத் தெரிவித்தார். ஆனால் நம்பிகளோ, 'நா ஸம்வத்ஸரவாஸிநே ப்ரப்ரூயாத்' என்றார்.
அதாவது... 'சீடனானவன், ஓராண்டு காலமேனும் குருவுக்குப் பணிவிடை செய்திருக்கவேண்டும். தவிர, தவம் புரியாதவருக்கும், இறைவனிடமும் குருவிடமும் பக்தி இல்லாதவருக்கும் உபதேசிக்கக் கூடாது' என சாஸ்திரங்களைக் சுட்டிக்காட்டினாராம் நம்பிகள். இதற்கு அரங்கன், ''சரீரம், பொருள், அறிவு, வசிக்குமிடம், செயல்கள், குணங்கள், பிராணன் ஆகிய அனைத்தையும் ஆச்சார்யனுக்காகவே எவன் அளிக்கி றானோ, அவனே சிறந்த சிஷ்யன். இவையனைத்தும் கொண்ட உடையவருக்கு உபதேசிப்பதால் எந்த தோஷமும் இல்லை'' என அருளினார். அதையடுத்து, தனக்கு எதிரே பரிதவிப்புடன் நின்ற ராமானுஜரிடம், 'ஊருக்கு வாரும்' என்று சொல்லிச் சென்றார் நம்பிகள். அதன்படி, திருக்கோட்டியூர் சென்ற ராமானுஜரை, 'இன்றைக்குப் போய், பிறகு வா' எனப் பலமுறை திருப்பியனுப்பினார் நம்பிகள். இப்படித் திருவரங்கத்துக்கும் திருக்கோட்டி யூருக்குமாக சுமார் 18 முறை நடையாய் நடந்தார் ஸ்ரீராமானுஜர். 'மந்திரோபதேசம் பெறும் பாக்கியம் கிடைக்காதா?' என ஏங்கினார்.
ஒருநாள், திருக்கோட்டியூர் நம்பியின் சீடர் ஒருவர், அரங்கனை தரிசிக்க வந்தார். அவரிடம், 'பூந்துழாய் முடியார்க்குத் தகவல்ல; பொன்னாழிக்கையார்க்குத் தகவல்ல' எனச் சொன்னார் ராமானுஜர். அதாவது, ''திருத்துழாயையும் (துளசி) பூவையும் தலையில் தரித்திருக்கும் சங்கு- சக்கரதாரியான உங்கள் பெருமாளுக்கு இது நியாயமா?'' என வருந்தினார். இதைக் கேட்டு கலங்கிய அந்தச் சீடர், தன் குருநாதரிடம் சென்று, உடையவரின் ஏக்கத்தைத் தெரிவித்தார். இதன்பிறகே, உடையவருக்கு உபதேசிக்கலாம் எனும் முடிவுக்கு வந்தார் நம்பிகள். தன் சீடரை அனுப்பி, 'தண்டும் பவித்திரமும் கொண்டு தனியருவராக வரச் சொல்' எனத் தெரிவித்தார். அதையடுத்து, தன் சீடர்களான முதலியாண்டான் மற்றும் கூரத்தாழ்வானுடன் திருக்கோட்டியூருக்குச் சென்று நம்பிகளை வணங்கினார் உடையவர். ''உன்னை மட்டும்தானே வரச்சொன்னேன்?!'' என நம்பிகள் கேட்க, ''ஆம். நான் மட்டுமே வந்தேன். இவர்கள், தண்டும் பவித்திரமுமாகத் திகழ்பவர்கள்'' என்றார் உடையவர்.
பிறகு, ''மந்திரம் மற்றும் அதன் அர்த்தத்தை எவருக்கும் உபதேசிக்கக்கூடாது'' என்று உடையவரிடம் சத்தியம் வாங்கிக்கொண்டு, நலம் தரும் ஸ்ரீநாராயண மந்திரத்தை- அஷ்டாட்சரத்தை, உபதேசித்தார் நம்பிகள். உடையவரின் மனம் நிறைந்தது!
மறுநாள்... திருக்கோட்டியூர் ஆலய கோபுரத்தில் நின்றபடி, ஸ்ரீநாராயண மந்திரத்தை உரக்க உபதேசித்தார் உடையவர்.இதையறிந்த திருக்கோட்டியூர் நம்பிகள் அதிர்ந்தார்; ராமா னுஜரை அழைத்து, ''சத்தியம் செய்துவிட்டு, குருவின் கட்ட ளையை மீறிவிட்டாயே!'' என கடுகடுத்தார்.
உடையவரோ நிதானமாக, ''ஆமாம். ஆச்சார்யரின் கட்டளையை மீறிய அடியேனுக்கு நரகம் உறுதி. ஆனால், இதனால் நான் ஒருவன் மட்டுமே நரகத்துக்குச் செல்வேன். நாராயண மந்திரத்தைக் கேட்ட மக்கள் அனைவரும் பரமபதத்தை அடைவார்களே! அதனால்தான் உபதேசித்தேன்'' எனத் தெரிவித்து, நம்பிகளை நமஸ்கரித்தார். இதைக் கேட்டு நெகிழ்ந்த நம்பிகள், ''எம்பெருமானாரே... வாரும்!'' என ராமானுஜரை அருகில் அழைத்து, தம்மோடு சேர்த்து இறுக அணைத்துக் கொண்டார். பிறகு அங்கிருந்த வைணவர்களிடம், ''இதுவரை திருமந்திரப் பொருள் பரம ரகசியமாக இருந்தது. இன்று முதல், இது 'எம்பெருமானார் தரிசனம்' என்றே அழைக்கப்படட்டும்'' என அருளினார். அதுவரை பிடிகொடுக்காமல் இருந்த திருக்கோட்டியூர் நம்பிகள், இந்தச் சம்பவத்துக்கு பிறகு ராமானுஜரை விடவே இல்லை. தாம் அறிந்த அனைத்தையும் அவருக்கு போதித்து அருளினார்.
|