கோயில் நகரமாம் கும்பகோணத்தில் இருந்து சுமார் 16 கி.மீ. தொலைவில் உள்ளது கஞ்சனூர். பலாச வனம், பராசரபுரம், அக்னிபுரம், முக்திபுரம், கம்சபுரம் என்றெல்லாம் இந்தத் தலத்தைப் போற்றுகின்றன புராணங்கள். இதில், கம்சபுரம் என்ற பெயரே 'கம்சனூர்' என்றாகி, பிறகு 'கஞ்சனூர்' என்று மருவியதாகச் சொல்வர்.
கேட்டதைத் தரும் கற்பக விருட்சமாக ஸ்ரீகற்பகாம்பாளும், அள்ளிக் கொடுக்கும் அண்ணலாக ஸ்ரீஅக்னீஸ்வரரும் கோயில் கொண்டிருக்கும் அற்புதத் தலம் இது.
ஒருமுறை, சௌனகர் முதலான முனிவர் பெருமக்கள் கங்கைக் கரையில் சத்ரயாகம் செய்யத் துவங்கினர். சுமார் 12 வருடங்கள் நீடித்த இந்த யாகம்,
நிறைவடையும் தருணத்தில், சூத மகா முனிவர் அங்கே வந்தார். சௌனகாதி முனிவர்கள் இன்முகத்துடன் அவரை வரவேற்றனர். அப்போது அவர்களிடம், ''புனிதமான கங்கை நதிக்கு இணையான காவிரியின் வடகரையில் அமைந்துள்ளது கம்சபுரம் எனும் பலாச வன க்ஷேத்திரம். பராசர முனிவரின் சித்தப் பிரமை நிவர்த்தியானதும், அக்னி பகவான் மற்றும் கம்ச மகாராஜனின் நோய் குணமானதும், சந்திரன், சித்திரசேனன், இந்திரன் ஆகியோரின் பாவங்கள் நீங்கியதும் இந்தத் தலத்தில்தான். அதுமட்டுமா... காலகண்டன் எனும் வேடன், இறை அருளால் மோட்சம் பெற்றதும், தேவர்கள் சுக்கிரதோஷம் நீங்கப்பெற்றதும் இந்தத் தலத்தில்தான்'' என சூத மகா முனிவர் கஞ்சனூரின் மகிமைகளை விவரித்த தாகக் கூறுகிறது ஸ்தல புராணம்.
ஆமாம்... நமது துன்பத்தையெல்லாம் போக்கி, சுகத்தை அருளும் ஸ்ரீசுக்கிரபகவானும் இங்கு குடியிருக்கிறார்.
பரணி, பூரம், பூராடம் ஆகிய நட்சத்திரங்களுக்கு உரியவர், சுக்கிர பகவான். அசுரர்களின் குரு என்பதால், இவரை சுக்ராச்சார்யர் என்பர். மீன ராசியில் உச்சமும் கன்னி ராசியில் நீச்சமும் அடைபவர், சுக்கிரன். இவர் ஒரு ராசியில், சுமார் ஒரு மாதம் வரை சஞ்சரிப்பார். சுக்கிர திசை என்பது, 20 வருடங்கள் வரை நீடிக்கும்.
திருமால் வாமனராக அவதரித்து வந்து, மகாபலியிடம் மூன்றடி மண் கேட்டபோது, 'மூன்றடி மண் தராதே' என மகாபலிக்கு அறிவுறுத்தியவர் சுக்கிர பகவான்தான்! இவரது அறிவுரையை ஏற்காமல், கெண்டியிலிருந்து தண்ணீரை வார்த்துக் கொடுக்க முனைந்தான் மகாபலி. உடனே சுக்கிரன், வண்டாக உருவெடுத்து, கெண்டியின் மூக்குப் பகுதிக்குள் சென்று, தண்ணீர் வெளியேறாதவாறு அடைத்துக்கொண்டார். உடனே வாமனர், தனது பவித்திரத்தை எடுத்துக் கெண்டியின் மூக்கினுள் செருக... அந்த பவித்திரம் குத்தியதால், தனது ஒரு கண்ணை இழந்தார் சுக்கிரன் என்கிறது புராணம்.
|