ஸ்தல வழிபாடு
தொடர்கள்
Published:Updated:

எல்லை சாமிகள்! - பெரமைய்யா கோயில்

எல்லை சாமிகள்! - பெரமைய்யா கோயில்


தொடர்கள்
எல்லை சாமிகள்!
எல்லை சாமிகள்! - பெரமைய்யா கோயில்
எல்லை சாமிகள்! - பெரமைய்யா கோயில்
எல்லை சாமிகள்! - பெரமைய்யா கோயில்
எல்லை சாமிகள்! - பெரமைய்யா கோயில்

சிறுவன் பெரமைய்யாவும் அவனுடைய நண்பர்களும் ஊருக்கு வெளியே உள்ள தனியகுளத்துக் கரையில், சொப்பு (மண்ணைக் கொண்டு விளையாட்டுப் பொருட்கள்) செய்து விளையாடுவது வழக்கம். அப்படி ஒருநாள், மண்ணைக் கொண்டு அரிவாள் செய்த பெரமைய்யா, அதை அங்கேயே போட்டுவிட்டு வந்தான். மறுநாள், அவனும் நண்பர்களும் குளக்கரைக்குச் சென்றபோது, அந்த அரிவாள் சற்றே பெரிதாகியிருப்பதைக் கண்டு அதிர்ந்தனர்!

ஆனால், பெரமைய்யாவோ விளையாட்டாக... அந்த அரிவாளை எடுத்து நண்பன் ஒருவனிடம் கொடுத்து, தன் கழுத்தை வெட்டச் சொன்னான். அந்த நண்பனும், 'மண் அரிவாள்தானே' என்ற எண்ணத்தில் கழுத்தை வெட்ட, பெரமைய்யாவின் தலை துண்டாகி விழுந்தது!

அதைக்கண்டு மிரண்டுபோன சிறுவர்கள், அலறியடித்துக் கொண்டு ஊருக்குள் ஓடிவந்து, நடந்ததை விவரித்தனர். அதைக் கேட்ட ஊர்மக்கள் பதறியபடி குளக்கரைக்கு ஓடோடி வந்தனர். பெரமைய்யாவின் நிலையைக் கண்டு கண்ணீர்விட்டனர். குளக்கரையிலேயே பெரமைய்யாவின் உடலைப் புதைத்து விட்டு, வீடு திரும்பினர்.

நாட்கள் நகர்ந்தன. மெள்ளத் தனது வேலையைக் காட்டத் துவங்கினான் பெரமைய்யா. மதியம் மற்றும் அந்தி சாயும் வேளையில், அரூபமாக வந்து அனைவரையும் பயமுறுத்தினான். தனியகுளம் அருகில் வரும் பெண்களை ரத்த வாந்தி எடுக்கவைத்தான். அதிர்ச்சியிலும் பயத்திலும் பெண்கள் பலர் இறந்துபோக... ஒருகட்டத்தில் அந்த ஊரில் வாழவே பெண்கள் பயந்தனர்.

இதற்குத் தீர்வு காண விரும்பிய ஊர் மக்கள் ஒன்றுகூடி, கோடாங்கியை அழைத்து வந்து குறி கேட்பது என முடிவு செய்தனர். கோடாங்கியும் வந்தார். அவர் மீது அருளாக வந்து இறங்கிய பெரமைய்யா, ''மண் அரிவாளால் உயிரை விட்டு, இந்த இடத்திலேயே ஊரைக் காக்கும் தெய்வமாக இருக்கணுங்கறதுதான் நான் வாங்கி வந்த வரம். ஆனால், என் உடலைப் புதைத்த கையோடு, என்னை நீங்கள் மறந்தே போனீர்கள். என் சக்தியை உங்களுக்குப் புரிய வைக்கவே உயிர்ப்பலி வாங்கினேன்'' என்றான்.

அதைக்கேட்டு ஊர் மக்கள் சிலிர்த்தனர். பெரமைய்யாவுக்குக் கோயில் கட்டி வழிபட முடிவு செய்தனர். அடுத்த சில நாட்களில், திறந்தவெளியில் பெரமைய்யாவுக்குச் சிலை வடித்துக் கோயில் எழுப்பி, வழிபடத் துவங்கினர். அது முதல், பெண்களைக் காவு வாங்குவதை நிறுத்தினான் பெரமைய்யா; ஊரைக் காக்கும் தெய்வமானான்!

பட்டுக்கோட்டையில் இருந்து மன்னார்குடி செல்லும் சாலையில், சுமார் 11 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது மதுக்கூர். இதன் கிழக்கு எல்லையில் உள்ளது தனியகுளம். இங்குதான் பெரமைய்யாவின் பூர்வீகக் கோயில் அமைந்துள்ளது. இது ஊருக்கு வெளியே ஒதுக்குப்புறமாக இருப்பதால், மக்களின் வசதிக்காக ஊரின் வடக்கு எல்லையில் நெடுஞ்சாலையை ஒட்டி, இன்னொரு கோயிலும் எழுப்பியுள்ளனர்.

குளக்கரைக் கோயிலுக்கு, இன்றளவும் பெண்கள் வருவதில்லை. சாலையோரத்தில் உள்ள கோயிலுக்கு மட்டும் வந்து வழிபட்டுச் செல்கின்றனர்.

சாலையோரத்தில் அமைந்திருப்பதால், இந்தப் பகுதி வழியே வாகனங்களை ஓட்டிச் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு வழிவிடும் தெய்வம், வழியில் காக்கும் தெய்வம் எல்லாம் பெரமைய்யாதான்!

ஒருமுறை, இந்தப் பகுதியில் சாலையை அகலப்படுத்தும் பணிகள் நடந்தன. நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் சிலர் இந்தக் கோயிலை அப்புறப்படுத்த வேண்டும் என்றனராம். இதற்கு ஊர்மக்கள் எதிர்ப்பு தெரிவித்தும் கேட்காமல், கோயிலை அகற்ற கெடுவிதித்துச் சென்றனராம் அதிகாரிகள்.

எல்லை சாமிகள்! - பெரமைய்யா கோயில்

அதையடுத்து, அந்த அதிகாரிகளைப் பெரமைய்யா படாதபாடு படுத்திவிட்டாராம். பதறிப்போன அதிகாரிகள், பெரமைய்யா கோயிலுக்கு ஓடிவந்து மன்னிப்புக் கேட்டனர்; பெரமைய்யாவுக்கு மாலை சார்த்தி, விழுந்து வணங்கிச் சென்றனர்.

பூர்வீகக் கோயிலில் பெரமைய்யாவின் திருவுருவச்சிலை மட்டுமே உள்ளது. சாலையோரத்துக் கோயிலில், ஒன்றுக்கு மேற்பட்ட பெரமைய்யாவின் திருவுருவச் சிலைகள் வரிசையாக உள்ளன. இவை, பக்தர்களால் நேர்த்திக்கடனாகச் செய்து வைக்கப்பட்டவையாம். அருகில், முன்னோடியார் சிலையையும் தரிசிக்கலாம்.

ஆடி மாதத்தின் திங்கட்கிழமைகள் பெரமைய்யாவுக்கு விசேஷம்! இந்த நாட்களில், கிடா வெட்டியும் பொங்கல் வைத்தும் பக்தர்கள் வழிபடுகின்றனர். தீராத வியாதி, உடல் கோளாறு என அவதிப்படுவோர், பெரமைய்யாவுக்கு 'மதலைப் பிள்ளைகள்' எனப்படும் மனித உருவங்களைச் செய்து வைத்து வேண்டிக்கொள்வதும் இந்த நாட்களில்தான்!

ஆடி மாத முதல் திங்கட்கிழமையன்று, இரவு 12 மணிக்கு, குளக்கரை பூர்வீகக் கோயிலில் இருந்து சாலையோர கோயிலுக்குப் பெரமைய்யா கோயில் பூஜைப் பெட்டியை எடுத்து வருவார்கள். கோயிலின் பூசாரி மணி அடித்துக்கொண்டே முன்னே செல்ல, அவருக்குப் பின்னால் பூஜைப்பெட்டி எடுத்துவரப்படும். இந்த வேளையில், எவரும் எதிரில் வரக்கூடாது என்பது ஐதீகம். எனவே, குறிப்பிட்ட அந்த நேரத்தில் தெருவில் எவரும் நடமாடக்கூட மாட்டார்கள்.

இப்படி எடுத்துவரப்படும் பூஜைப்பெட்டி, அந்த மாதம் முழுவதும் சாலையோரக் கோயிலிலேயே இருக்கும். ஆடி மாதக் கொண்டாட்டங்கள் முடிந்ததும், பூஜைப் பெட்டியை எடுத்துச்சென்று, ஊருக்குள் உள்ள கோயில் வீட்டில் வைத்துவிடுவார்கள்.

மற்றபடி, திங்களும் வெள்ளிக்கிழமையும் பெரமைய்யா வுக்கு விசேஷமான நாட்கள். அப்போது தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், தாங்கள் வாங்கிய புதிய வாகனத்தை பெரமைய்யா கோயிலுக்குக் கொண்டுவந்து பூஜிப்பது வழக்கம். ஆயுத பூஜையின் போது... கோயில் அமைந்துள்ள சாலையின் வழியே செல்லும் தனியார் பேருந்துகளின் சார்பில், பெரமைய்யாவுக்கு கிடா வெட்டி வழிபடுகின்றனர்.

குழந்தை பாக்கியம் இன்றி ஏங்கித் தவிப்பவர்கள், இங்கே வந்து தொட்டில் கட்டி மனதார வேண்டிச் சென்றால், விரைவில் பிள்ளை வரம் தந்தருள்வாராம் பெரமைய்யா. அதே போல், தோஷங்களால் திருமணத்தடை உள்ளவர்கள், இங்கு வந்து பெரமைய்யாவை பிரார்த்தித்தால், தடைகள் நீங்கி, திருமணம் கைகூடுமாம்.

இன்னொரு விஷயம்... பொருட்கள் ஏதும் திருடு போய்விட்டால், இங்கு வந்து கற்பூரம் ஏற்றி வைத்து, 'நீதான் கேக்கணும் பெரமைய்யா' என்று வேண்டிக் கொண்டால் போதும்... திருடியவர்கள், அந்தப் பொருட்களைத் தாங்களாகவே கொண்டு வந்து, எடுத்த இடத்தில் வைத்து விடுவார்களாம். இல்லையெனில், அவர்களின் நிம்மதியையும் தூக்கத்தையும் குலைத்துவிடுவார் பெரமைய்யா என்று சிலிர்ப்புடன் விவரிக்கின்றனர் பக்தர்கள்!

- (இன்னும் வரும்)
படங்கள் எம். ராமசாமி