ஸ்தல வழிபாடு
தொடர்கள்
Published:Updated:

கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி

கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி


தொடர்கள்
கலகலப் பக்கம்!
கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி
கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி

ம்ம ஆள் ஒருத்தருக்கு, 'ஒன்வே டிராஃபிக்'னு பேரு. யாராவது வெகுமதி தந்தால், 'வந்ததை வரவில் வை'ன்னு சந்தோஷமாக வாங்கிக்கொள்வார். ஆனால், அவரிடமிருந்து சின்னப் பொருள்கூட அடுத்தவருக்குக் கிடைக்காது. இந்த நண்பர் அனுசரிக்கிறாரோ இல்லையோ... 'பதில் மரியாதை' என்னும் நல்ல பழக்கம், இன்றைக்கும் பலரிடம் இருக்கத்தான் செய்கிறது.

நான் இருக்கும் குடியிருப்பில், எங்கள் வீட்டுப் பாத்திரங்கள் அடிக்கடி அக்கம்பக்கத்து வீடுகளுக்குப் போவதும் வருவதுமாக இருக்கும். திரும்பி வருகிற பாத்திரத்தை ஆராய்ந்தால், உள்ளே பலகாரமோ பட்சணமோ... குறைந்த பட்சம் இரண்டு வாழைப்பழங்களாவது இருக்கும்.

சம்பிரதாயம் தெரிந்தவர்கள், காலிப்பாத்திரமாகத் திருப்பி அனுப்பமாட்டார்கள். ஒருமுறை... ஒரு வீட்டிலிருந்து, துணி உலர்த்த பயன்படும் சின்னக் கிளிப்புகள்கூட டிபன்பாக்ஸில் வந்திருக்கிறது!

ஒருவரிடம் இருந்து எதையேனும் வாங்கினால், நம்மால் முடிந்த எதையாவது அவருக்குத் திருப்பித் தரவேண்டும் என்கிற உயர்வான எண்ணம், இன்றும் பலரிடம் இருக்கத்தான் செய்கிறது.

குடியிருப்பில் உள்ள பொடியன்கள், நண்பர்களுக்குள் அடிக்கடி பிறந்தநாள் கொண்டாடுவார்கள். கையில் பரிசுப் பாக்கெட்டுகளுடன் செல்வார்கள். திரும்பும்போது, பிறந்தநாள் கொண்டாடிய பையனோ, பெண்ணோ... ஒரு ரிடர்ன் கிஃப்ட் அளித்திருப்பார்கள்.

'பர்த்டே பேபி'க்குச் சில பிள்ளைகள் 300 ரூபாய் பெறுமான கிரிக்கெட் மட்டையைப் பரிசாகத் தந்திருக்க, பர்த்டே பையனோ, இரண்டு ரூபாய் பேனாவை பதில் மரியாதையாகத் தந்திருப்பான். ஆனால், எந்தப் பிள்ளையும் இதையெல்லாம் ஒருபொருட்டாக எடுத்துக்கொள்வதில்லை. அவர்களின் பெற்றோர்தான், ''அவங்க வீட்டைப் பத்திதான் உனக்குத் தெரியுமே?! எதுக்கு 300 ரூபாய்க்கு கிரிக்கெட் மட்டை வாங்கினே? ஒரு கலர் பாக்ஸோ, ஜாமென்ட்ரி பாக்ஸோ தந்திருந்தால் போதாதா?'' என்று அங்கலாய்ப் பார்கள்.

இதில் எந்த நியாய, தர்மமும் இல்லை. தராசுக் கணக்கெல்லாம் இங்கே உதவாது. மனசுதான் இங்கே பிரதானம். 'பத்து ரூபாய் பரிசுக்கு, பதில் மரியாதையும் பத்து ரூபாய்' என்று சிலர் நினைப்பார்கள். பெண்களில் சிலர், ரவிக்கைத் துணிக்கு ரவிக்கைத் துணி... அதுவும் எப்படி? 60 செ.மீ. தந்தால், இந்தா பதிலுக்கு 60 செ.மீ. ரவிக்கைத் துணி என்று அளக்காத குறையாக ரிடர்ன் கிஃப்ட் தருவார்கள்.

குபேரனுக்கு நிகரான செல்வந்தராக இருந்தவர் பட்டினத்தார். கொடுத்துக் கொடுத்துக் கை வலித்ததோ என்னவோ... ஒரு நாள் வீட்டையே திறந்து வைத்துவிட்டு, 'வேண்டியவற்றை அள்ளிக்கொள்ளுங்கள்' என்று ஊர் மக்களிடம் அறிவித்துவிட்டுத் துறவியாகிவிட்டார். இப்படி ரிடர்ன் கிஃப்ட் எதிர்பாராத வெகுமதியைத் தானம் என்கிறோம். தானம் தரும்போது கர்வமோ, பெறுபவரிடம் இருந்து எந்தவித எதிர்பார்ப்போ இருக்கக்கூடாதாம்!

'இந்தத் தானத்தையும், இதனால் வரும் புண்ணியத்தையும் சேர்த்தே தானமாகத் தந்தேன் என தானம் செய்யவேண்டும்' என்கிறார் சுவாமி விவேகானந்தர்.

தானம் செய்வதை ஸாத்விக, ராஜஸ, தாமஸ என மூன்றாக வகைப்படுத்தியுள்ளனர்.

யத்து ப்ரத்யுபகாரார்த்தம் பலமுத்திச்ய வா புன
தீயதே ச பரிக்லிஷ்டம் தத்தானம் ராஜஸம் ஸ்ம்ருதம்

எதையும் எதிர்பார்க்காமல் கொடுக்கப்படும் தானத்தை ஸாத்விக தானம் என்பர். எது பிரதிபலனைக் கருதியும், எதிர்பார்ப்புடனும் கொடுக்கப்படுகிறதோ, அது ராஜஸ தானம். இந்தக் காலத்தில், நாம் தரும் கிஃப்டுகளும் ரிடர்ன் கிஃப்டுகளும் ஒரு வகையில் ராஜஸ தானம்தான்!

தகுதியற்ற இடத்தில், தகுதியற்ற காலத்தில், தகுதியற்றவர் களுக்கு, பணிவோ பெருந்தன்மையோ இன்றி வழங்கப்படும் தானத்துக்கு, தாமஸ தானம் என்று பெயர்.