ஸ்தல வழிபாடு
தொடர்கள்
Published:Updated:

தசாவதாரம் திருத்தலங்கள்!

தசாவதாரம் திருத்தலங்கள்!

தசாவதாரம் திருத்தலங்கள்!
தசாவதாரம் திருத்தலங்கள்!

லைமாமகளின் பேரருள் வேண்டும்! எதற்குத் தெரியுமா? அளப்பரிய செல்வம், ஆனந்த வாழ்வு, மனதுக்கினிய வாழ்க்கைத் துணை, நன்மக்கட்பேறு, நீண்ட ஆயுள்... இவை யாவும் பெற, திருமகளின் பரிபூரண அனுக்கிரகம் தேவை என்கின்றன ஞானநூல்கள். அதுமட்டுமா? நமக்கு அந்த ஆதிநாராயணனின் அருள் கிடைக்கவும் ஸ்ரீலட்சுமியின் துணை வேண்டுமாம்!

நம் மீது பரிவும் பாசமும் கொண்ட ஒரு தந்தையாய், நம் தவறுகளைத் திருத்திப் பணிகொள்ளும் பொருட்டு, எம்பெருமான் நம்மைக் கண்டிக்க திருவுளம் கொள்ளும் தருணத்தில்... தாயினும் சாலப்பறிந்து நம்மை அரவணைத்து ஆட்கொள்வாள் மகாலட்சுமி தாயார். தவிர, நமது பிரார்த்தனைகளைப் பெருமாளிடம் சுட்டிக்காட்டி வரம் வாங்கித் தரும் தயாபரியும் அவளே!

அந்த அகில நாயகியை தன் மடிமீது அமர்த்தியவண்ணம் ஸ்ரீமாலோலனாகவும், தன் கயல் விழிகளில் ஒன்றை நம் மீதும் மற்றொன்றை ஸ்வாமியின் மீதும் நிலைநிறுத்தி செஞ்சுலட்சுமியாய் அவள் திகழ, அவளுடன் ஸ்ரீபாவன

நரசிம்மமாகவும் அஹோபிலத்தில் அருள்கோலம் காட்டுகிறது பரம்பொருள்!

ஸ்ரீமாலோலன் சந்நிதி

ஸ்ரீஜ்வாலா நரசிம்மர் சந்நிதியில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவு மலைப்பாதை பயணம். சிற்சில இடங்களில் படிக்கட்டுகள் அமைத்திருக்கிறார்கள். பெரும்பாலும் இயற்கையே பாறைகளை அடுக்கிப் பாதை போட்டிருக்கிறது. நிசப்தமான நடைபயணத்தின்போது, ஆங்காங்கே  மயிலின் அகவலைப் போன்று மிக வித்தியாசமான ஒரு சத்தம். கேட்டால், ''பாவுரப் பறவைகள் எழுப்பும் சத்தம்தான் அது'' என்கிறார் வழிகாட்டி பாவன நரசிம்மன் (தன் பெயரை இந்த வழிகாட்டி அன்பர் சொன்னதுமே நமக்குள் ஒரு சிலிர்ப்பு... அந்த நரசிம்மரே துணைக்கு வருவதாக!). பாறை இடுக்குகளில் தங்கியிருக்கும் இந்தப் பறவைகள் பெரும்பாலும் இரவிலேயே வெளிவருமாம்!

''அதுமட்டுமில்லீங்க... ஜாம்பவான் (கரடிகளைத்தான் இப்படிச் சொல்கிறார்) மற்றும் புலிகள் நடமாட்டமும் இரவில் அதிகம் உண்டு'' என்கிறார் வழிகாட்டி. கரடிகள் பசியாற வசதியாக... மரக்கிளைகளில் பெரிது பெரிதாகத் தொங்குகின்றன தேனடைகள்!

இயற்கையை வியந்தபடி, ஒருபுறம் மலைச் சரிவும் மறுபுறம் அதலபாதாளமுமாகத் திகழும் பாதையில் கவனமாகப் பயணித்து, மாலோலரைத் தரிசிக்க வந்துவிட்டோம். வேதாத்திரி பர்வதத்தில், கனகப்பிரிய நதியின் அருகில் அமைந்துள்ளது ஸ்ரீமாலோல நரசிம்மரின் சந்நிதி.

'மா’என்றால் திருமகள்; 'லோலம்’ என்றால் காதல்.  ஆமாம்... அசுர வதத்துக்குப் பிறகு தேவியின் திருமுகம் கண்டு சினம் தணிந்து, திருமகளின் காதலனாக, மிக்க அன்புடன் அவளைத் தன் மடியில் அமர்த்தி அருள்பாலித்த சந்நிதி இது. சங்கு சக்ரதாரியாக, அபய ஹஸ்தமும் திகழ, தேவியை இடது தொடையில் அமர்த்தி அணைத்தவாறு காட்சி தருகிறார் ஸ்ரீமாலோல நரசிம்மர்.

நவ நரசிம்மர்களில் எந்த மூர்த்தியை அடிப்படையாகக் கொண்டு உற்ஸவரை அமைப்பது எனும் கேள்வி எழுந்த போது, ஸ்ரீமாலோலரின் திருவுருவத்தில் முதலாம் ஜீயருக்குக் காட்சி தந்து அருளினாராம் ஸ்ரீநரசிம்மர். இன்றைக்கும் ஜீயர்கள் மாலோல நரசிம்மரின் விக்கிரகத்தையே, ஆன்மிக யாத்திரையாகச் செல்லும் இடங்களுக்கு எடுத்துச் செல் கிறார்கள். இவரின் உற்ஸவ விக்கிரகம் மேல் அஹோபிலம் ஸ்ரீஉக்ரநரசிம்மரின் சந்நிதியில் உள்ளது. உள்ளம் உருக ஸ்ரீமாலோல நரசிம்மரை வழிபட, செவ்வாய் தோஷம் அகலும், செல்வம் செழிக்கும் என்பது ஐதீகம்.

தசாவதாரம் திருத்தலங்கள்!


பூமா தேவியைத் தோளில் தாங்கும் வராக நரசிம்மர்

தசாவதாரம் திருத்தலங்கள்!

மது நான்காவது தரிசனம்... வராகமும் நரசிம்மமும் சேர்ந்து அருளும் ஒரு சந்நிதி; குருதோஷம் நீக்கும், சகல ஐஸ்வரியங்களும் அள்ளித் தரும்  ஸ்ரீவராக நரசிம்மர் திருச்சந்நிதி.

மேல் அஹோபிலம் ஸ்ரீஉக்ரநரசிம்மர் சந்நிதியில் இருந்து, 1 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது ஸ்ரீவராக நரசிம்மரின் சந்நிதி. ஸ்ரீஜ்வாலா நரசிம்மரைத் தரிசிக்கச் செல்லும் வழியிலேயே இவரையும் தரிசித்துவிடலாம்.

அதாவது, ஸ்ரீஉக்ரநரசிம்மர் சந்நிதி... அங்கிருந்து சுமார் 1 கி.மீ. தூரத்தில் ஸ்ரீவராக நரசிம்மர் சந்நிதி; இவரைத் தரிசித்தபின், ஜ்வாலா நரசிம்ம தரிசனம்; அங்கிருந்து ஸ்ரீமாலோல நரசிம்மரைத் தரிசித்துப் பயணம் தொடர, மீண்டும் ஸ்ரீவராக நரசிம்மர் சந்நிதியை அடைகிறது மலைப் பாதை!

பீம குண்டம், கஜ குண்டம், வராக குண்டம் எனும் தீர்த்தங்கள் சூழ, பவநாசினியின் கரையில் அமைந்துள்ளது ஸ்ரீவராக நரசிம்மர் சந்நிதி. ஆங்காங்கே குழிகளில் தேங்கியும், சிறு ஓடையாகத் தவழவும் செய்யும் பவநாசினியின் குளிர்ந்த நீரில் நம் பாதங்களைப் பதிக்க... ஒட்டுமொத்த பயணக் களைப்பும், நோவும் நீங்கியது போன்று ஒரு புத்துணர்ச்சி. மூலிகைத் தண்ணீரைப்போல, பச்சிலை மணத்துடன் திகழும் அந்த ஆற்று நீரின் சுவைக்கும் குறைவில்லை; கற்கண்டு தித்திப்பு!

இரண்யாட்சனிடம் இருந்து பூமியைக் காக்க ஒரு அவதாரம்; இரண்யகசிபுவிடம் இருந்து பக்தனைக் காக்க ஒரு அவதாரம்... இரண்டையும் நினைவூட்டும் அற்புத திருவிடம்- ஸ்ரீவராக நரசிம்மர் சந்நிதி. இங்கு, ஸ்ரீக்ரோடகார நரசிம்மா என்று போற்றி வழிபடுகிறார்கள் பக்தர்கள். ஸ்வாமியின் வீரத் தோளில் ஸ்ரீபூமாதேவி. 'பக்தியால் பரிபூரணமாக என்னிடம் சரணடைந்துவிடு; உன்னையும் தோளில் தூக்கிச் சுமப்பேன்’ என்று சொல்லாமல் சொல்கிறாரோ ஸ்வாமி?! பரிபூரணமாக நம்மை ஒப்படைத்தோம்; நிலம் தோய வீழ்ந்து வணங்கினோம்.

'இனி ஒருபோதும் பயமில்லை... எந்தக் கவலையும் இல்லை’ என்றொரு உணர்வு நமக்குள். நம்பிக்கையுடன் பயணம் தொடர்ந்தது.

தசாவதாரம் திருத்தலங்கள்!


அனுமனுக்கு அருளிய ஸ்ரீகரஞ்ச நரசிம்மர்

வ நரசிம்மர்களில் எளிதில் தரிசிக்க இயலும் சந்நிதி. கீழ் அஹோபிலத்தில் இருந்து வாகனங்களில் மேல் அஹோபிலம் வரும் பாதையிலேயே, சாலையோரத்தில் அமைந்திருக்கிறது ஸ்ரீகரஞ்ச நரசிம்மர் சந்நிதி.

'நானும் ராமனும் ஒன்றே’ என உணர்த்தும் தனுசு (வில்) ஏந்திய அந்தத் திருக்கரத்தை, சிம்ம திருமுகத்தை... அஞ்சனை மைந்தனுடன் அருளாடல் செய்த எழில் கோலத்தைக்  கண்களால் பருகுகிறோம். இவரை வழிபட, கேது தோஷம் நீங்கும்; ஞானம்- பக்தி வைராக்கியம் மேம்படும் என்கிறார்கள். இந்தச் சந்நிதியில் ஸ்ரீஅனுமனையும் தரிசிக்க முடிகிறது.

தசாவதாரம் திருத்தலங்கள்!


ஸ்ரீபார்கவ நரசிம்மர்

றாவதாக ஸ்ரீபார்கவ நரசிம்மர் தரிசனம். கீழ் அஹோபிலத் தில் இருந்து குறிப்பிட்ட தூரம் வரை ஆட்டோவில் பயணிக்கலாம். பிறகு சிறிது தூரம் நடந்தால் போதும் சந்நிதி வந்துவிடுகிறது.

நீர் தளும்ப காட்சி தரும் அக்ஷய தீர்த்தம், 135 படிகளுடன் சந்நிதி, வளர்ந்தோங்கி நிற்கும் மரங்கள், நம் முகம் தழுவிச் செல்லும் குளிர் காற்று... மிக அற்புதமான சூழல்!

அக்ஷயம் என்றால் வளருதல் என்று பொருள். என்றென்றும் குறையாமல் வளர்வதை அஷயம் என்பார்கள்.

கொடும் கோடை காலத்திலும் நீர் வற்றாமல் திகழ்வதால், இங்குள்ள திருக்குளத்துக்கு அக்ஷய தீர்த்தம் எனப் பெயர். குளம் முழுக்க அல்லி மலர்கள். கரைகளில் காலடித் தடங்கள்! மான்கள், கரடிகள், குரங்குகள் யாவும் இரவில் தாகம் தணிக்க இங்கு வருமாம்.

இந்தப் பகுதி மக்கள், மிகப் புனிதமாகப் போற்றுகிறார்கள் இந்தத் தீர்த்தத்தை. தீர்த்த நீரில் பாதம் படக்கூடாது  என்பதற்காக, படிக்கட்டுகளில் கவனமாக இறங்கி, தலையில் தீர்த்தத்தைத் தெளித்துக்கொண்டு கரையேறுகிறார்கள். பரசுராமர் ஏற்படுத்திய தீர்த்தம் என்பதால், இப்படியரு பயபக்தி அவர்களிடம்!

ஆமாம்... தீர்த்த யாத்திரை மேற் கொண்டிருந்த பரசுராமர் இந்தத் தலத்துக்கும் வந்தார். பகவானின் அவதாரக் கோலங்களைக் காணவேண்டும் என்ற அவரது விருப் பத்துக்கு- வேண்டுதலுக்கு இணங்க, பரம்பொருள் தசாவதாரக் கோலங்களையும் காட்டியருளிய பதி இது.

இந்த இடத்தில் ஒரு கேள்வி எழலாம்... ஸ்ரீபரசுராமரும் ஒரு அவதாரம்தானே என்று. பரம்பொருளின் அருளாடலுக்கு எல்லை ஏது?!  தனது ஒவ்வொரு அவதாரத்தையும் அதற்கான காரணத்தையும், அதர்மம் விலக்கி தர்மம் காக்கப்பட வேண்டிய அவசியத்தையும் உலக மாந்தர்கள் உணர்ந்து மேம்பட வேண்டும். அதற்காக தன்னையே கருவியாக்கி, தன்னில் தன்னைக் காட்டி இறை நிகழ்த்திய அற்புதங்களில் இதுவும் ஒன்று என்றே சொல்ல வேண்டும்.

தசாவதாரம் திருத்தலங்கள்!

பரசுராமரை பார்கவ ராமர் என்றும் சொல்வார்கள். அவர் உருவாக்கிய தீர்த்தத்துக்கு பார்கவ தீர்த்தம் என்றும் ஒரு பெயர் உண்டு. ஸ்வாமிக்கு ஸ்ரீபார்கவ நரசிம்மர் என்று திருநாமம்.

படிகளில் ஏறி சந்நிதியை அடைந்தால், இரண்ய கசிபுவை வதம் செய்யும் கோலத்திலேயே காட்சி தருகிறார் ஸ்ரீபார்கவ நரசிம்மர். சிற்பத்தின் தோரணத் தில் தசாவதாரக் காட்சிகள். ஸ்வாமியின் பாதத்தருகே பக்த பிரகலாதன். அவன் மட்டும் இல்லையென்றால், இப்படியோர் அவதாரமும்  அது நிகழ்ந்த அஹோபிலம் எனும் புண்ணிய க்ஷேத்திரமும் நமக்குக் கிடைத்திருக்குமா?

நன்றி பெருக்குடன் பக்த பிரகலாதனையும் மனதார வணங்கி வழிபட்டுவிட்டுப் புறப்பட்டோம், ஏழாவதாக ஸ்ரீயோகானந்த நரசிம்மரைத் தரிசிக்க!

அசுர வதத்துக்குப் பிறகு, பிரகலாதனுக்கு யோக முத்திரைகளைக் கற்பித்த கோலத்தில் காட்சி தரும் மூர்த்தியாம் இவர். அத்துடன், தொடையில் தாளம் போட்டு கந்தர்வர்களின் இன்னிசையை ரசித்த ஒரு நரசிம்மரின் கோலம், மலைவாழ் மக்களின் குலமகளான செஞ்சுலட்சுமியை கரம்பிடித்த ஸ்வாமியின் ஆலயம் ஆகியவற்றையும் நாம் தரிசிக்க வேண்டியிருக்கிறது.

அதற்குமுன்... அனுதினமும் இந்தத் தலத்தில் ஸ்வாமி நிகழ்த்தும் அற்புதங்களுக்கு உதாரணமாக, ஒரு சம்ப வத்தையும் நாமறிவது அவசியம்.

ஆந்திர மாநிலத்தை பெரும்புயல் தாக்கிய தருணம். ஒரு நள்ளிரவில்... ஸ்ரீஜ்வாலா நரசிம்மரின் சந்நிதியில் தங்கியிருந்தனர் அந்த அன்பர்கள்.

மனமுருக ஸ்ரீநரசிம்ம நாமத்தை ஜபித்தபடி, அவர்கள் தியானத்தில் லயித்திருக்க... இடியோசையாய், காதைப் பிளக்கும் பெரும் சத்தம்!

- அவதாரம் தொடரும்...  
படங்கள்: என்.விவேக்

அஹோபில பயணமும் தரிசனமும்!

ந்திர மாநிலம், கடப்பாவில் இருந்து சுமார் 112 கி.மீ. தொலைவில் உள்ளது அஹோபிலம். அஹோபிலத்துக்கு மிக நெருக்கமான பெரிய ஊர் அல்லகட்டா. இங்கிருந்து அஹோபிலத்துக்குபேருந்துகளும், ஷேர் ஆட்டோக்களும் நிறைய செல்கின்றன. தமிழ்நாட்டில் இருந்து அஹோபிலம் செல்பவர்கள், சென்னையில் இருந்து ரயில் அல்லது பேருந்து மூலம் கடப்பா சென்று, அங்கிருந்து அல்லகட்டாவை அடையலாம். இங்கிருந்து சுமார் 24 கி.மீ. பயணித்தால் கீழ் அஹோபிலம். இங்கு ஸ்ரீபிரகலாதவரதர் ஆலயத்தைத் தரிசிக்கலாம். அருகிலேயே அஹோபில மடம்.

இங்கிருந்து மேல் அஹோபிலத்துக்கு ஷேர் ஆட்டோக்கள் செல்கின்றன (கட்டணம் ஒருவருக்கு ரூ. 10). மேல் அஹோபிலத்தில் இருந்து தகுந்த வழிகாட்டிகளின் உதவியுடன், மேற்கொண்டு பயணத்தைத் துவங்கலாம். அஹோபிலத்தில் நவ நரசிம்மர்களைத் தரிசிக்கும் பயணத்தை மூன்று கட்டங்களாகப் பிரித்து, நம்மை அழைத்துச் செல்கின்றனர் வழிகாட்டிகள்.

முதல் பயணம் மேல் அஹோபிலம் ஸ்ரீஉக்ர நரசிம்மர்

சந்நிதியில் துவங்குகிறது. அங்கிருந்து ஸ்ரீவராக நரசிம்மர்- ஸ்ரீஜ்வாலா நரசிம்மர்- ஸ்ரீமாலோல நரசிம்மர் சந்நிதிகளைத் தரிசித்துவிட்டு, மீண்டும் வராக நரசிம்மர் சந்நிதி வழியே மேல் அஹோபிலம் வந்து, அங்கிருந்து ஸ்ரீகரஞ்ச நரசிம்மரைத் தரிசிக்க அழைத்துச் செல்கிறார்கள். ஆக, முதல் கட்ட பயணத்தில் ஐந்து நரசிம்மர்களைத் தரிசித்துவிடலாம்.

அடுத்ததாக ஸ்ரீபாவன நரசிம்மரைத் தரிசிப்பது தனிப் பயணம். நடந்து செல்வதானால், மலையின் மீது சுமார் 1000-க்கும் மேற்பட்ட படிக்கட்டுகள் ஏற வேண்டும். முதியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் கடினம்! வாகனங்கள் செல்லும் வழியும் உண்டு. ஆனால், கரடுமுரடான பாதை. கோயிலை அடைவதற்குள் உடம்பு முழுக்கப் புழுதி படிந்து விடுகிறது. துணியால் கண்கள் மட்டும் தெரியும்படி முகத்தை மூடிக்கொண்டே பயணிக்க வேண்டியிருக்கிறது. வாகன வாடகை ரூபாய் 1800-க்கும் மேல். சில தருணங்களில், வழிகாட்டிகளே தனித்தனிப் பயணிகளை ஒருங்கிணைத்து அழைத்துச் செல்கிறார்கள். அப்போது, ஒரு நபருக்கு ரூபாய் 300 வீதம் வசூலிக்கிறார்கள். ஆனால், 6 அல்லது 7 பேர் சேரும் வரை காத்திருக்கவேண்டும். குழுவாகச் செல்வோருக்குத் தனி வாகனம் அமர்த்திக் கொள்ளலாம்.

மூன்றாவது கட்டமாக... ஸ்ரீபார்கவ நரசிம்மர், ஸ்ரீயோகானந்த நரசிம்மர், ஸ்ரீசத்ரவட நரசிம்மர் சந்நிதிகளுக்கும் அழைத்துச் செல்கிறார்கள்.