ஸ்தல வழிபாடு
தொடர்கள்
Published:Updated:

ஸ்ரீரமண மகரிஷி

ஸ்ரீரமண மகரிஷி

ஸ்ரீரமண மகரிஷி
ஸ்ரீரமண மகரிஷி


'வருபவர்களிடம் உன்னை வைத்து நான் பணம் பண்ணப் போகிறேன். அதனால் உனக்கு ஒரு நஷ்டமும் இல்லை. எனவே, என்னைத் தடுக்காதே! நீ என்னுடைய சீடன்; புரிந்ததா?'' என்று பாலானந்தா சொல்ல... பகவான், சரி என்றும் சொல்லவில்லை; தவறு என்றும் சொல்லவில்லை. அமைதியாக உட்கார்ந்திருந்தார்.

##~##
பாலானந்தாவுக்கு இது போதுமானதாக இருந்தது. ஊர் எல்லாம் சுற்றி மலைக்கு வந்து, அங்கே இருப்பவரிடம், 'அடேய் பையா! என் சட்டைப் பையில் இருக்கிற நூறு ரூபாயை எடுத்து, வெளியே வைத்துவிடு. பணத்தை நான் என் கையாலும் தொடுவதில்லை. யாரோ ஒரு அன்பர் கெஞ்சிக் கூத்தாடி, என் பைக்குள் பணத்தைச் சொருகிவிட்டார். என்ன செய்வது!’ என்று அலுத்துக் கொள்வார். ஆனால், அந்த பணத்தை டாம்பீகமாகச் செலவழிப்பார். ஒரு இடத்தில், ஒரு விஷயத்தில், வாழ்க்கையில் தந்திரம் நுழைந்தால், அடுத்தடுத்து பல்வேறு விஷயங்களில் அந்தத் தந்திரம் கிளைவிட்டு வளரும். வாழ்வு முழுவதுமே தந்திரமாக மாறிவிடும். தந்திரம் என்பது உண்மைக்குப் புறம்பானதுதானே! இயல்பில்லாத நடிப்புதானே! அந்த நடிப்பு விஸ்வரூபம் எடுக்கத் துவங்கிவிடும்.

தந்திரம் தலைகாட்டிய உடனே, அதைக் கிள்ளி எறிவதுதான் விவேகிகளின் வழக்கம். விவேகமற்றவர் தொடர்ந்து ஆட ஆரம்பிப்பார்; காவிக்கு ஜனங்கள் கொடுக்கிற மரியாதையைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்குகிற கபட நாடகங்களில் ஈடுபடுவார். மதம் க்ஷீணமடைவதும், இறை நம்பிக்கை பாழ்பட்டு நாத்திகம் வளர்வதும், உண்மையான சாதுக்களையும் மக்கள் சந்தேகிக்கத் துவங்குவதும், இந்த மாதிரி கபடர்களால் ஏற்படும் அபாயங்கள். ஆனால், அதுபற்றி எல்லாம் அவர்கள் கவலைப்படுவதே இல்லை. பாலானந்தாவும் அதைத்தான் செய்தார். விருபாக்ஷி குகை வாசலில் அசுத்தம் செய்தார்.

சுவாமி ஒன்றும் சொல்லவில்லை. மௌனமாக நகர்ந்துவிட்டார். ஆனால், பகவானின் அன்பரான பழனிச்சாமி இதைப் பார்த்துவிட்டு, இடத்தைச் சுத்தம் செய்து, பாலானந்தாவின் உடைமைகளை எல்லாம் தூக்கி வெளியே எறிந்தார். தன்னுடைய பட்டுச் சட்டை, பட்டு வேட்டி எல்லாம் தெருவில் கிடப்பதைப் பார்த்துவிட்டு, பாலானந்தா வாய்க்கு வந்தபடி கத்தினார். ''இதையெல்லாம் நீ பார்த்துண்டிருந்தியா? பழனிச்சாமி மறுபடியும் மேலே வந்தான்னா, அடிச்சுப் பல்லை பேர்த்துப்புடு! வெச்சு வாங்கு வாங்குன்னு வாங்கு'' என்று எகிறினார். ஆனால், இதற்கும் பகவான் பதில் ஒன்றும் சொல்லாமல் மௌனமாக இருக்க, பாலானந்தாவுக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்தது.

ஸ்ரீரமண மகரிஷி

'தூ’வென்று பகவானின் முகத்தில் துப்பினார். பிராமண சாமி என்று அழைக்கப்பட்ட பகவான் இந்த அவமரியாதையை மௌனமாக ஏற்றார். அருகே உள்ள அன்பர்களும் பொறுமை காத்தனர். ஆனால், எல்லோராலும் பொறுமையாக இருக்கமுடியுமா? கீழே திருவண்ணா மலையில் வசிக்கும் முத்துசாமி என்பவர் நடந்ததை அறிந்து, விறுவிறுவென்று மலைக்கு மேலே ஏறி, விருபாக்ஷி குகைக்கு வந்து, ''யாரடா அது, எங்கள் சுவாமியின் மீது துப்பியது? நீதானா... நீதானா? என்ன தைரியமடா உனக்கு! எவரும் கேட்பார் இல்லை என்று ஆடுகிறாயா! நீ என்னவெல்லாம் செய்கிறாய் என்று எங்களுக்குத் தெரியாதா!'' என்று சொல்லி, பாலானந்தாவின் கையை முறுக்கி, பளீர் பளீர் என்று அடித்தார். மற்றவர்களும் சீறி எழுந்தனர்.

எதிர்ப்பு வலுப்பது கண்டு, பாலானந்தா மலையைவிட்டு இறங்கி, 'திருவண்ணாமலை நான் இருக்கத் தகுந்த இடம் அல்ல’ என்று உரக்கச் சொல்லிவிட்டு, ரயில் ஏறினார். அங்கேயும் கெட்ட புத்தி விடவில்லை. ஏதோ ஒரு தம்பதியிடம் வம்பாகப் பேச, அவர்களும் நையப் புடைத்தனர். அந்த அடி, அந்த அவமானம், பலமாக இருந்ததுபோலும்! தளர்ந்து போனவராக மீண்டும் மலைக்கு வந்து, 'என்ன நடந்ததுன்னு தெரியுமா’ என்று பகவானிடம் அழாக் குறையாகக் கேட்டார். பகவான் ஒரே வார்த்தையில், 'தெரியும்’ என்று சொன்னார்.

''இந்தப் படிப்பினை எனக்குத் தேவை. உன் மீது துப்பியது தப்பு. அதனால்தான் இந்த வேதனை. முத்துசாமிக்கு சரியாக அடிக்கத் தெரியவில்லை. கீழே பயணம் செய்த மனிதன் நன்கு அடிக்கத் தெரிந்தவன் போலிருக்கு. கண்டு கண்டாக வீங்கிவிட்டது. நீ பதிலுக்கு என் மீது துப்பிவிடு!’ என்று பிராயச்சித்தம் செய்வதுபோல பகவானிடம் பேசினார். விருப்பு வெறுப்பு இல்லாத நடுநிலையை அடைந்த பகவான் அப்போதும் மௌனமாக இருந்தார். வாங்கின அடியால் பாலானந்தாவின் மனம் சற்று தளர்வடைந்ததே தவிர, அந்தத் தளர்வினால் மன்னிப்பு கேட்க முடிந்ததே தவிர, உண்மையில் அவர் மனம் மாறவில்லை. மறுபடியும் அகங்காரமும் அலட்டுதலும் தலைவிரித்து ஆடின.

பகவானைத் தரிசிக்க வரும் பெரியவர்களையும் அவர் அவமரியாதையாக நடத்தினார். பெரியவர்கள் வந்து, மௌனமாக அமர்ந்திருக்கும்போது, இவர் நடுவே புகுந்து உட்கார்ந்து கொள்வார். 'குழந்தாய்! இப்போது உனக்கு நிர்விகல்ப சமாதி சொல்லித் தருகிறேன். வா, என் கைகளைப் பிடித்துக்கொள், என் கண்களையே பார்!’ என்று நாடகம் நடத்துவார். 'ஒரு முக்கியமான விஷயம் நடந்துகொண்டு இருக்கிறது. பெரியவர்கள் இருக்குமிடத்தில் மற்றவர்கள் யாரும் இருக்கக்கூடாது, கிளம் புங்கள்!’ என்று மற்றவர்களை அதட்டுவார். 'என் கண்களைப் பார்! விடாதே! தொடர்ந்து என் கண்களையே பார்த்துக்கொண்டு இரு. ஏன் மூச்சைப் பிடிக்கிறாய்? மூச்சை விட்டுவிடு. என் கண்களைப் பார்’ என்று பல்வேறு விதமான உத்தரவுகள் போடுவார். அப்படி ஒருமுறை, வந்தவரின் கண்களைப் பார்த்துக்கொண்டே இருந்த பாலானந்தா சாய்ந்து உறங்கிவிட்டார். பொய்மை, வெகு நேரம் தாக்குப்பிடிக்காது; அலட்டல், வெகு சீக்கிரம் அயர்ச்சியைக் கொடுக்கும்.

பாலானந்தாவின் தொந்தரவு இடையறாது இருந்தது. 'இன்றைக்கு இவர் என்ன ஆட்டம் ஆடப் போகிறாரோ!’ எனும் கவலை, சுற்றியுள்ள அன்பர்களுக்கு இருந்தது. ஆனால், பகவான் கற்சிலையென உட்கார்ந்திருந்தார்.

விருபாக்ஷி குகையை விட்டுவிட்டு, இன்னும் மலைக்கு மேலே போய் விடலாமா என யோசித்தார். அப்போது, யோகானந்தா என்கிற சாது, பகவானை முற்றிலும் அறிந்தவர், அங்கு வந்ததால், அப்படிப் போகும் எண்ணத்தை ஒதுக்கிவிட்டார். ஆனால், பாலானந்தாவை பகவானின் அன்பர்கள் விதம் விதமாக எதிர்த்தனர்; அவமரியாதை செய்தனர்; 'பல் துலக்க வேப்பங்குச்சி கொண்டு வா’ என்று ஒருவரை ஏவ, அவர் ஒரு பெரிய கிளையை உடைத்து வந்தார். 'என்ன இது’ என்று பாலானந்தா அதட்ட, 'நீங்கள் பெரியவர், உங்களுக்குப் பெரிய குச்சிதானே தேவை!’ என்று கிளையைத் தூக்கித் தரையில் போட்டார்.

ஸ்ரீரமண மகரிஷி

அதேபோல, புகை பிடிக்க நெருப்பு கொண்டுவரும்படி ஒருவரை ஏவ, அவர் பெரிய தீவட்டியைக் கொண்டு வந்தார். 'எதைப் பற்ற வைக்க வேண்டும்’ என்று கேட்க, பாலானந்தாவுக்கு மிரட்சி ஏற்பட்டது. பகவான் ஸ்ரீரமண மகரிஷி அமைதியாக இருந்தாலும், அவருடைய அன்பர்கள் அமைதியாக இருக்கமாட்டார்கள்; நீண்ட நாள் பொறுமையாக இருக்கமாட்டார்கள் என்று தெரிந்தது. 'மலையை விட்டுப் போறேன். என் சக்தி இங்கிருந்து போயிடுச்சுன்னா, நீ வெறும் ஆள்!’ என்று பகவானை பயமுறுத்திவிட்டுக் கீழே இறங்கினார். பகவானுக்கு சாபம் கொடுத்ததாக, திருவண்ணாமலையில் உள்ள ஒரு கடைக்காரரிடம் பெருமை யாகச் சொல்லிக் கொண்டார். அந்தக் கடைக்காரர் பகவானுடைய அன்பர். அவர் இதைக் கேட்டுக் கொண்டு சும்மா இருப்பாரா? பாலானந்தாவின் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிவிட்டார்.

எல்லோராலும் நேசிக்கப்படுகிற பகவானுக்கு எதிராக தன்னால் ஒன்றும் செய்ய முடியாததை நினைத்து, அவர் திருவண்ணா மலையை விட்டுவிட்டு, வேறு ஒரு மலையில் நகர்ந்தார். பிறகு, அவர் திருவண்ணாமலைக்குத் திரும்பவே இல்லை.

இன்னொரு சாது, மலையில் ஒரு வசதியான இடத்தைத் தேர்ந்தெடுத்து, அங்கே உட்கார்ந்துகொண்டு இருந்தார். தன் இடத்துக்குப் பக்கத்தில் வேறு எவரேனும் வந்தால், தந்திரம் செய்து அவரை வெளியேற்றிவிடுவார்; பயந்து ஓடச் செய்துவிடுவார். விருபாக்ஷி குகைக்கு பகவான் வந்ததும், அவருக்கு பிராபல்யம் அதிகரித்ததும், இவருக்கு எரிச்சல் உண்டு பண்ணின. தன்னுடைய இடத்துக்கு அருகே இல்லாது போனாலும், தன்னைவிடப் பிரபலமாகி விட்டார் என்பதாலேயே, அவரை உடனே அகற்றக் கருதி,  வழக்கமாக மற்ற சாதுக்களை பயமுறுத்திய விதமாகவே, இரவில் மலையுச்சிக்குப் போய், அங்கிருந்து கற்களை உருட்டி, கலவரப்படுத்தினார். அப்படி உருட்டப்பட்ட கற்கள், பகவானுக்கு அருகே வராமல், விலகி ஓடின. இப்படி மலையிலிருந்து கற்கள் உருட்டுவது தினமும் தொடர்ந்தது. ஒருநாள் பகவான், பின்னாலே ரகசியமாகப் போய், அவர் கற்கள் உருட்டும்போது பார்த்துவிட்டார். அந்தச் சாதுவுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. 'கண்டுபிடித்து விட்டீரா?’ என்று பேய்ச் சிரிப்பு சிரித்து, 'சும்மா ஒரு விளையாட்டுக்குச் செய்தேன்’ என்றார். பகவான் அதைப் பொருட்படுத்தவில்லை. மௌனமாகத் திரும்பி தன் இடத்துக்கு வந்துவிட்டார். பிறகு அந்த சாது அம்மாதிரியான விஷயங்களில் ஈடுபடவில்லை.

இன்னொருவர், உபநிஷதத்தில் தேர்ந்தவர். மலையில் வசித்தவர். திடீரென வெளியூர்களுக்குச் சென்று, சில நாட்கள் கழித்துத் திரும்ப வந்து, பகவானின் எதிரே உட்கார்ந்து, ''உனக்கு தத்தாத்ரேய மந்திரத்தை உபதேசிக்கிறேன்'' என்று வற்புறுத்தினார். பகவான் பதில் சொல்லவில்லை. ''சிறிய மந்திரம்தான்; குறைந்த அக்ஷரம்தான்; நான் சொல்லித்தருகிறேன்'' என்று மீண்டும் நச்சரிக்க, பகவான் வேண்டாம் என்று மறுத்தார். ''உனக்கு தத்தாத்ரேய மந்திரம் உபதேசிக்கும்படி சிவபெருமானே என்னிடம் சொல்லியனுப் பினார். அதனால், மறுக்காமல் வாங்கிக் கொள்'' என்று மறுபடியும் அதட்டினார் அவர்.

ஸ்ரீரமண மகரிஷி

''உங்களிடம் சொன்ன சிவபெருமான், என்னிடம் வந்து இந்த மந்திரத்தைக் கற்றுக் கொள் என்று சொன்னால், அப்போது கற்றுக் கொள்கிறேன்'' என்று பகவான் சொல்ல, அந்தச் சாதுவுக்குக் கோபம் வந்துவிட்டது. மலைக்கு வருவோரிடம் எல்லாம், ''அந்த பிராமண சாமியிடம் போகாதீர்கள்; அவருக்கு ஒன்றும் தெரியாது. அவரிடம் போவதால் எந்தப் புண்ணியமும் இல்லை; அவரிடம் எந்த ஞானமும் இல்லை'' என்று தூற்றத்   தொடங்கினார்.

ஒருமுறை, திருவண்ணாமலையில் உள்ள வாழைத்தோட்டத்தில் அவர் கண்மூடி உட்கார்ந்துகொண்டிருந்தபோது, திடீரென்று அவர் மனதுக்குள் பிராமண சாமி தோன்றி, 'மோசம் போகாதீர்கள்’ என்று எச்சரித்தார். அவருக்கு தூக்கிவாரிப்போட்டது. கனவா நனவா என்று தெரியாமல் விழித்தார். ஓடிப்போய் பகவானிடம், 'இம்மாதிரி தனக்கு ஏற்பட்டது’ என்று சொன்னார். ''அந்த மாதிரியான சித்து வேலைகள் எதுவும் நான் செய்வதில்லை. இது நான் செய்தது அல்ல; இது உங்களின் மனத் தோற்றம்!'' என்று பிராமண சாமி சொல்ல, சாது சமாதானமானார். ஆனால், ஸ்ரீரமண மகரிஷிக்கு 'பிராமண சாமி’ என்று விலாசமிட்டு வரும் கடிதங்களை, தானே வாங்கிப் பிரித்துப் படிப்பார்; பதிலும் எழுதுவார். கேட்டால், 'நானும் மலைமேல் இருக்கிற பிராமண சாமிதானே?’ என்று கேலியாகப் பதில் சொல்வார். இதையும் பகவான் ஸ்ரீரமண மகரிஷி பொருட்படுத்தவில்லை.

குகை வாசலில் அசுத்தம் செய்தபோதும், முகத்தில் எச்சில் துப்பியபோதும், கடுமையான சொற்களைப் பலர் முன்பு வாரி இரைத்தபோதும், 'இவன் என் சிஷ்யன்’ என்று அகங்காரமாகப் பேசிய போதும், கற்பாறைகளை உருட்டிய போதும், தத்தாத்ரேய மந்திரத்தை உபதேசிக்கிறேன் என்று வற்புறுத்தி வம்புக்கு இழுத்த போதும் எந்தவித முகச்சுளிப்பும் இல்லாமல், எந்த எதிர்ப்பும் இல்லாமல், அவர்களை மிக நிதானமாக பகவான் விலக்கினார்.

அந்த சாதுக்கள் இப்போது எங்கே? என்ன ஆனார்கள்? அவர்களைப் பற்றி உலகத்துக்கு என்ன தெரியும்? அவர்களின் தலைமுறைகளின் வழித் தோன்றல்கள் என்ன ஆனார்கள்? ஆனால், பகவான் ஸ்ரீரமண மகரிஷியை உலகம் வெகு விரைவில் கண்டுகொண்டது. உலகம் முழுவதும் அவர் புகழ் பரவியது. அவர் சொன்ன அற்புதமான தத்துவத்தை உள்வாங்கிக்கொண்டு, கடைத்தேற முயற்சித்தது. சத்தியம் ஒருபோதும் மரணமடைவதில்லை; ஒருபோதும் ஒளி குறைவதில்லை; 'நான்’ என்ற மமதையை முற்றிலும் துறந்தவரை, எந்த வேதனையும் எதுவும் செய்யாது; வேதனைக்கு ஆட்படுத் தியவர்கள்தான் வெந்து மடிகின்றனர்; விதவிதமாய் வேதனைப்படுகின்றனர்.

பகவான் ஸ்ரீரமண மகரிஷி வெறும் உபதேசம் செய்பவர் அல்ல; தான் சொன்னது என்னவோ, அதேபோல் வாழ்ந்து காட்டியவர்; நடுநிலையில் நின்றவர்; விருப்பு வெறுப்பு அற்றவர்; மனிதர்களால் இம்மாதிரி அமைதியாய், அடக்கமாய், ஆணவமின்றி வாழ இயலும் என்பதற்கு எடுத்துக்காட்டாய் இருந்தவர். ஸ்ரீரமணரை ஆழ்ந்து படிக்கப் படிக்க மனம் பக்குவப்படுவது நிச்சயம்.

- தரிசிப்போம்...