

நண்பன் நாராயணனின் பேரன் யோகுவுக்கு ஏழு வயது. வயதுக்கு மீறிய துறுதுறுப்பு. தினமும் அவனது பொல்லாத விஷமங்களைப் பட்டியலிட்டு நாராயணனிடம் முறையிடுவாள் அவரின் மனைவி. ஆனாலும், நாராயணன் பேரனைக் கோபித்துக்கொள்ள மாட்டார். இதமாகப் பேசியே, அவன் செய்த தவற்றை அவனுக்குப் புரிய வைப்பார்.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
ஒருமுறை, பேரனை ஜில் தண்ணீரில் குளிப்பாட்டிக்கொண்டே, சிநேகமாகச் சிரித்தபடி, ''யோகு கண்ணா, ஏண்டா உன்னைக் கடவுள் இப்படி வெல்லம் திருடி யோகுவா படைச்சுட்டான்?'' என்று கேட்டாராம். அலமாரியின் உச்சிக்கு ஏறி, அங்கிருந்த வெல்ல டப்பாவைத் திறந்து, கை நிறைய வெல்லம் எடுத்துத் தின்றான் என்பது அவன் மீதான அன்றைய ரிப்போர்ட்!
தாத்தாவின் கேள்விக்குப் பேரனிடம் இருந்து எதிர்பாராத ஒரு கேள்வியே பதிலாக வந்தது. ''வெல்லம்தானே தாத்தா தித்திப்பா இருக்கு! அதான் திங்கிறேன். கடவுள் ஏன் வெல்லத்துல தித்திப்பை வெச்சார்?'' என்றானாம். பேரனின் பதிலைக் கேட்டு, திக்குமுக்காடிப் போனார் நாராயணன். நானும்தான்! பின்னே... அதென்ன சாமான்ய கேள்வியா? சிருஷ்டி தத்துவம் பற்றிய கேள்வியாச்சே! இதற்குப் பதில் சொல்ல நம்மால் ஆகுமா?
பல வருடங்களுக்கு முன்பு, நாராயணன் மாதிரி நானும் ஒருமுறை குழம்பித் தவித்திருக்கிறேன்.
சாலை ஒன்றில் நடந்து வந்துகொண்டிருந்தபோது, ஓரத்தில் இருந்த முரட்டுப் பசு மாடு ஒன்று, கயிற்றை அறுத்துக்கொண்டு சாலைக்கு நடுவே வந்துவிட்டது. இதனால் சகல போக்குவரத்தும் ஸ்தம்பித்தது. அத்துடன், அந்த மாடு ஒரு கிழவரைக் கீழே மல்லாக்கத் தள்ளி, அவரது நெஞ்சின் மேல் தன் காலை வைத்து அழுத்தியபடி, ரோமானிய வீரனைப் போல, 'ஹம்மா...’ என பெருங்குரல் கொடுத்தது. 'இந்தக் கிழவனைக் கொல்லவா? வேண்டாமா?’ என்று சுற்றுமுற்றும் இருந்தவர்களை அபிப்ராயம் கேட்பது போலிருந்தது, அந்தச் சத்தம்.
##~## |
செயல்கள் ஏன் நடக்கின்றன என ஆராய்ந்தால், சிலவற்றுக்குத்தான் சரியான காரணங்கள் கிடைக்கும். சிலவற்றுக்கு வெறும் யூகங்கள்தான் தோரணமாகப் போய்க்கொண்டே இருக்கும். நேரம்தான் விரயமாகும். எனவே, 'எல்லாம் கடவுள் செயல்’ என்று சுருக்கமாக முடித்துக் கொண்டுவிட்டால் வம்பே இல்லை.
வெல்லத்தில் இனிப்பை வைத்ததும் கடவுள்; அதைத் தின்னும் ஆசையை நாராயணனின் பேரனுக்கு ஏற்படுத்தியதும் கடவுள் என அதை அதோடு விட்டுவிட்டு, அடுத்த காரியத்தைச் செயலாற்றப் போய்விட வேண்டும்.
'ஒன்றை நினைக்கின் அது ஒழிந்திட்டு ஒன்றாகும்
அன்றி அதுவரினும் வந்தெய்தும் ஒன்றை
நினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும்
எனையாளும் ஈசன் செயல்’ - என்பது ஒளவையார் வாக்கு.
''அப்படியா! இனியரு முறை அந்தப் பிள்ளை வெல்லத்தைத் திருடித் தின்னா, முதுகுல ஒரு பூசை வைக்கிறேன். அதுவும் ஈசன் செயல்தான்னு எடுத்துக்குங்கோ. பேரனுக்குப் பரிஞ்சிண்டு வராதீங்கோ'' என்றாள் நாராயணனின் மனைவி.
அதுவும் சரிதான்.
'எங்கெங்கே பார்த்தாலும் எவ்வுயிர்க்கும் அவ்வுயிராய்
அங்கங்கு இருப்பது நீ அன்றோ பராபரமே! ’
- என தாயுமான சுவாமிகள் சொல்லியிருக்கிறாரே! வெல்லம் திருடுகிறவனும் அவனே! அடி வாங்குகிறவனும் அவனே!