

திருக்குருகூர் கிராமமே சட்டென்று பிரகாசமானது. எங்கும் ஒளி சூழ்ந்திருக்க, மொத்த கிராம மக்களும், காரியார் வீட்டைச் சூழ்ந்திருந்தனர். அன்றைய தினம் பௌர்ணமி என்பதால் உண்டான பிரகாசம் என்றுதான் எல்லோருமே நினைத்தனர். ஆனால், அங்கே அவதரித்தவரின் மகிமையாலும் மகோன்னதத்தாலும்தான் இத்தனைப் பிரகாசம் என்பதை அவர்கள் பின்னாளில் அறிந்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

காரியாருக்கும் உடையநங்கையாருக்கும் வைகாசி மாதம், பௌர்ணமி திதி, விசாக நட்சத்திரம், கடக லக்னம், வெள்ளிக்கிழமையன்று... வானில் முழுநிலவாக சந்திரன் ஜொலிக்க, திருக்குருகூரில் சூரியப் பிரகாசத்துடன் அவதரித்த அந்தக் குழந்தை, நம்மாழ்வார். விஷ்வக் சேனரின் அம்சமாக, அதாவது சேனை முதலிகள் எனக் கொண்டாடப் படுபவராக அவர் அவதரித்தார் எனப் போற்றுகின்றனர் வைஷ்ணவப் பெரியோர்.
ஏரார் வைகாசி விசாகத்தின் ஏற்றத்தை
பாரோர் அறியப் பகர்கின்றேன் - சீராரும்
வேதம் தமிழ் செய்த மெய்யன் எழில் குருகை
நாதன் அவதரித்த நாள்
- என, நம்மாழ்வார் அவதரித்த வைகாசி விசாகத்தின் பெருமையைப் போற்றுகிறது, உபதேச ரத்ன மாலை!
இயல்புக்கு மாறாகச் செயல்பட்டதாம் அந்தக் குழந்தை. அதாவது, குழந்தையிடம் இருந்து அழுகைச் சத்தமே வரவில்லை. தவிர, தாய்ப் பாலும் குடிப்பதில்லை. அழும் குழந்தைதானே பால் குடிக்கும் என்பார்கள்; இங்கே, குழந்தை அழவும் இல்லை; பால் குடிக்கவும் இல்லை என்பதால், பெற்றோர் தவித்தனர். இப்படி இயல்புக்கு மாறாகப் பிறந்த குழந்தைக்கு, அவர்கள் 'மாறன்’ என்றே பெயர் சூட்டினர். திருக்குருகூர் பெருமாள் ஆலயப் பிராகாரத்தில் புளிய மரம் ஒன்று உள்ளது. அந்த மரத்தில் தொட்டில் கட்டி, அதன் நிழலில்தான் இளைப்பாறியது குழந்தை. பின்னாளில், திருமாலின் திருவடியே கதியென்று நம்மாழ்வார் இளைப்பாறியதும், இன்புற்றிருந்ததும் நாம் அறிந்ததுதானே?!
##~## |
பாண்டிய தேசத்தின் திருக்கோளூரில், அந்தணர் குலத்தில் தோன்றிய மதுரகவி ஆழ்வார், அயோத்தி முதலான வடதேச யாத்திரையில் இருந்தார். அப்போது, தென்திசையில் இருந்து பேரொளி ஒன்று ஜ்வலிப்பதைக் கண்டு சிலிர்த்து, 'என்ன விந்தை இது!’ என்று வியந்தார். உடனே அயோத்தியிலிருந்து தென் திசை நோக்கிப் பயண மானார். திருக்குருகூரை அடைந்தபோது, 'இங்கே மிக உன்னதமான மகானைத் தரிசிக்கப் போகிறோம்’ என்பதை உணர்ந்தார் மதுரகவி ஆழ்வார்.
திருக்குருகூரின் ஆலயத்தில் அமைந்துள்ள புளிய மரத்தடியை நெருங்கினார். அங்கே, கடும் தவத்தில், யோக நிஷ்டையில் தன்னுள் இருக்கிற பரந்தாமனுடன் இரண்டறக் கலந்திருந்தார் மாறன். 'பகவானை இவர் இப்போதே அடைந்துவிட்டால், உலக மக்களுக்கு நற்கதி ஏது?’ என யோசித்த மதுரகவி, தன் இரண்டு கைகளையும் கொண்டு பலமாக ஓசை எழுப்பினார். அந்தக் கைத்தட்டல் சத்தத்தில், சட்டென்று தவ நிலையில் இருந்து மீண்டு வந்தார் மாறன்.

எதிரில் பவ்யமாக, கை கூப்பியபடி நின்றிருக்கும் மதுரகவி ஆழ்வாரைப் பார்த்தார். அந்தப் பார்வையின் தீட்சண்யத்தில் உடல் சிலிர்த்த மதுர கவியார், அவரை சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தார். பின்பு, ''செத்தத்தின் வயிற்றிலே சிறியது பிறந்தால், எத்தைத் தின்று எங்கே கிடக்கும்?'' என்று கேட்டார். அதாவது, உயிரற்றதாகிய உடலில்,
அணு வடிவாக உள்ள ஆன்மா வந்து புகுந்தால், அந்த ஆன்மா எதை அனுபவித்துக்கொண்டு இருக்கும்? எந்த இடத்தில் இன்பம் உண்டென்று நினைக்கும்?'' என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு நம்மாழ்வார், ''அத்தைத் தின்று அங்கே கிடக்கும்'' எனப் பதில் அளித்தார். அதாவது, அந்த உடலையே... அதில் இருக்கும் இன்ப துன்பங்களையே அனுபவித்துக் கொண்டு அந்த இடத்திலேயே கிடக்கும்'' என விளக்கினார்.
மாறனின் மகிமையை உணர்ந்து பூரித்தார் மதுரகவி ஆழ்வார். 'நீங்களே என் ஆச்சார்யர்’ என நமஸ்கரித்தார். பிறகு, மாறனுக்குப் பணிவிடை செய்வதையே தனது கடமையாகக் கொண்டு, அவருடனேயே இருந்தார். நல்ல குரு கிடைப்பதும் அரிது; அந்த குருவை அடையாளம் கண்டுகொள்வதும் அரிது. இந்த இரண்டையுமே மதுரகவி ஆழ்வாருக்குக் காட்டி அருளினார் பரந்தாமன்.

மாறன் என்கிற நம்மாழ்வார், பகவானிடம் இருந்து தாம் பெற்ற நிறைவையெல்லாம், சிறப்புகளையெல்லாம் பாசுரங்களாகப் பாடி அருளினார். அவற்றை மதுரகவி ஆழ்வார், பட்டோலையிட்டுப் பத்திரப்படுத்திக் கொண்டார். ரிக்வேத சாரமாக 'திருவிருத்தம்’, யஜுர்வேத சாரமாக 'திருவாசிரியம்’, அதர்வணவேத சாரமாக 'பெரிய திருவந்தாதி’, சாமவேத சாரமாக 'திருவாய்மொழி’ ஆகிய அற்புதமான நூல்களை உலகுக்கு அளித்தார், நம்மாழ்வார். அதனால்தான், ஆழ்வார்களில் தலைவராகவும், மற்ற ஆழ்வார்களை அவயவங்களாகக் கொண்டவராகவும் வைணவப் பெரியோர் களாலும் பெருமக்களாலும் கொண்டாடப்படுகிறார் அவர்!
அதுமட்டுமா? எம்பெருமாளின் திருவடியில் நிலையாகவே, சடாரியாகத் திகழ்கிறார் நம்மாழ்வார். அதனை சடாரி, சடகோபன் என்றெல்லாம் சொல் கிறோம். மாறன், காரிமாறன், சடகோபன், பராங்குசன், குருகைப்பிரான், திருக் குருகூர் நம்பி, வகுளாபரணன், அருள்மாறன், தென்னரங்கன், பொன்னடி, திருநாவீறுடையபிரான் என்றெல்லாம் அழைக்கப்பட்டதைவிட, ஸ்ரீரங்கத்தில் குடிகொண்டு அருள்பாலிக்கும் அரங்கன் தன்னுடைய திருவாய் மலர்ந்து, 'இவன் நம் ஆழ்வார்’ என அழைத்துப் பூரித்ததால், அவருக்கு நம்மாழ்வார் எனும் திருநாமமே நிலைக்கப்பெற்றது.
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் 1,296 பாசுரங்களை இனிக்க இனிக்கப் பாடி, பரம்பொருளைப் போற்றியுள்ளார் நம்மாழ்வார். கிட்டத்தட்ட 39 திவ்விய தேசங்களை சிலாகித்துப் பாடியுள்ளார்.
'முன்னுரைத்த திருவிருத்தம் நூறு பாட்டும்
முறையில் வரும் ஆசிரியம் ஏழுபாட்டும்
மன்னிய நற்பொருள் பெரிய திருவந்தாதி
மறவாதபடி எண்பத்தேழு பாட்டும்
பின்னுரைத்ததோர் திருவாய்மொழி எப்போதும்
பிழையற ஆயிரத்தொரு நூற்றிரண்டு பாட்டும்
இன்னிலத்தில் வைகாசி விசாகம் தன்னில்
எழில் குருகை வருமாறா! இரங்கு நீயே’
- என்று வேதாந்த தேசிகர் வேண்டியபடி நாமும் நம்மாழ்வாரைப் போற்றுவோம்; வணங்குவோம்; வளம் பெறுவோம்!