திருவடி தரிசனம்!

கோவிந்தபுரம் ஸ்ரீபோதேந்திர சரஸ்வதி சுவாமிகள்

குடந்தை ஸ்யாமா

கலி காலத்தில் இறைவனின் நாமத்தைச் சொல்லி வழிபட்டாலே போதும்' என்கிற பிரசாரத்தை அகிலமெங்கும் பரப்பிய பெருமை ஸ்ரீபோதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளுக்கு உண்டு. திருவிசநல்லூரில் வாழ்ந்த மகானான ஸ்ரீதர ஐயாவாளும், இவரும் சம காலத்தவர்கள். தஞ்சை மாவட்டம் கும்பகோணத்துக்கு அருகே திருவிடைமருதூரை அடுத்து (கும்பகோணம்- மயிலாடுதுறை பிரதான சாலையில்) அமைந்திருக்கிறது கோவிந்தபுரம். இங்குதான் ஸ்ரீபோதேந்திரர், அதிஷ்டானம் கொண்டுள்ளார். கடந்த 22.8.08 வெள்ளியன்று இந்த அதிஷ்டானத்துக்கு மஹா கும்பாபிஷேக வைபவம் சிறப்பாக நடைபெற்றது.

காஞ்சி காமகோடி ஆச்சார்ய பரம்பரையில் ஐம்பத்தொன்பதாவது பீடாதிபதியாக விளங்கியவர் ஸ்ரீபகவந்நாம போதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள். இவரது காலம் கி.பி.1638- 1692. அந்நிய மதத்தினர் இந்துக் கோயில்களை நாசம் செய்து கொண்டிருந்த காலகட்டத்தில்தான் இவரது நாம ஜப பிரசாரம் முனைப்புடன் துவங்கியது. 'நாம

ஜபத்தின் மூலம் இறைவனை அடையலாம்... கஷ்டங்களைப் போக்கலாம்... பிரச்னைகளைத் தீர்க்கலாம்' என்று, நாம ஜபத்தின் மேன்மை யைப் பல இடங்களிலும் சொல்லி, அந்த எளிய வழிபாட்டை மேம்படுத்தினார். ஒரு மடாதிபதியாக காஞ்சிபுரம் மடத்தில் இவர் தங்கி இருந்த காலத்தை விட, வெளியே பயணித்து, நாம ஜப மேன்மையைப் பரப்பிய காலமே அதிகம் என்று சொல்லலாம். 'நாம பஜனை சம்பிரதாயத்தின் முதல் குரு' என்று போற்றப் படுபவர் இவர்.

நாம சங்கீர்த்தனம், நாம ஜபம் என்றால் என்ன?

பொதுவாக, பகவான் நாமத்தை எந்த நேரமும் உச்சரித்துக் கொண்டிருப்பது என்பதுதான் இதன் பொருள். 'நாம சங்கீர்த்தனம்' என்றால், குறிப்பிட்ட ஓர் இறைவனின் திருநாமத்தை வாத்திய கோஷ்டிகளின் உதவியுடன் ராகம் அமைத்துப் பாடிக் கொண்டே இருப்பது. முதலில்

பாடிய வரிகளையே மீண்டும் மீண்டும் பாடிக் கொண்டிருப்பார்கள். பெரும்பாலும் ஆர்மோனியம், மிருதங்கம், கஞ்சிரா முதலான கருவிகளை பக்கவாத்தியங்களாக வைத்துக் கொண்டு இறை பக்தியில் திளைத்து ஆடிய வண்ணம் இந்த நாம சங்கீர்த்தனத்தைச் செய்வார்கள் பாகவதர்கள். இதைக் கேட்டுக் கொண்டிருப்பவர்களும் மெய்ம்மறந்து இறை இன்பத்தில் ஐக்கியமாகி விடுவார்கள். அதோடு, பாகவதர்களுடன் இணைந்து பக்தர்களும் பகவானின் நாமாவை சொல்லிக் கொண்டே இருப்பார்கள்.

'நாம ஜபம்' என்பது தனிப்பட்ட ஒருவரோ அல்லது சிலரோ சேர்ந்து பகவான் நாமாக் களை மனதுக்குள்ளோ அல்லது மனம் விட்டோ சொல்லி இறைவனை வழிபடுவது. 'நமசிவாய' என்று சொல்லலாம்; 'நாராய ணாய' என்றும் சொல்லலாம். இப்படி 'ராம ராம', 'கிருஷ்ண கிருஷ்ண' என்று அவரவருக்குப் பிடித்த

கடவுள்களின் நாமத் தைச் சொல்லி வழிபடலாம்.

இன்றைய தேதியில் நாம ஜபத்தை, யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும், உச்சரித்து இறை வனை வணங்கலாம். இதற்குக் கால நேரம் கிடையாது என்று பொதுவாகச் சொல்லப்படுகிறது. 'இந்தக் கலிகாலத்தில் பகவான் நாமாக்களே நம்மைக் கரை சேர்க்கும்' என்று சொன்ன ஸ்ரீபோதேந்திரர் தினமும் ஒரு லட்சத்து எட்டா யிரம் முறை ஸ்ரீராம நாமத்தைத் துதித்து வந்தார். இதிலிருந்தே அவரது இறை பக்தியின் பெருமையை நாம் புரிந்து கொள்ளலாம்.

ஸ்ரீபோதேந்திரர் தமிழ்நாட்டில் அவதரித்த காலத்தில் தான் நாட்டில் ஏராளமான மகான்கள் தோன்றினர். கன்னட தேசத்தில் புரந்தரதாசர், கனகதாசர் முதலானோரும், ஆந்திராவில் ராமதாசர், ஷோத்ரக்ஞர் முதலானோரும், மகாராஷ்டிரத்தில் சமர்த்தர், துகாராம் போன்றோரும், வங்காளத்தில் ஸ்ரீகிருஷ்ணசைதன்யர், நித்யானந்தர் போன்றோரும், காசியில் கபீர்தாசர், துளசிதாசர் ஆகியோரும் வடக்கே ஸ்வாமி ஹரிதாஸ், ஸ்ரீவல்லபர், குருநானக், குருகோவிந்த் சிங், மீரா போன்றோ ரும் அவதரித்தனர். மொத்தத்தில் பார்த்தால், இவர்கள் அனைவருமே பாகவத சம்பிரதாயத்தின் மேன்மையையும், நாம ஜபத்தின் பெருமையையும்தான் பரப்பி இருக்கிறார்கள். ஒரே காலத்தில், பல்வேறு இடங்களில் பல மகான்கள் அவதரித்து இறை பக்தியைப் பரப்ப வேண்டும் என்பது இறைவனின் சங்கல்பம் போலிருக்கிறது.

சரி... ஸ்ரீபோதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அவதாரத் தைப் பார்ப்போம்.

புராணம் போற்றும் புண்ணிய நகராம் காஞ்சிபுரத்தில் மண்டனமிஸ்ரர் அக்ரஹாரத்தில் வசித்து வந்தவர் கேசவ பாண்டுரங்கர் என்பவர். ஆந்திர தேசத்தில் இருந்து காஞ்சிக்கு வந்து குடி கொண்டவர் இந்த அந்தணர். இவர் மனைவியின் பெயர்- சுகுணா. இந்தத் தம்பதிக்கு 1638-ஆம் ஆண்டில் ஆதிசங்கர பகவத் பாதரின் அம்சமாக ஸ்ரீபோதேந்திரர்

அவதரித்தார். குழந்தை பிறந்த வேளையை வைத்து, அதன் எதிர்காலத்தையும் சிறப்பு அம்சங்களையும் கணித்த பாண்டுரங்கர், 'புருஷோத்தமன்' என்று பெயர் சூட்டினார்.

அப்போது காஞ்சி காமகோடி மடத்தில் 58-வது பீடாதிபதியாக விளங்கியவர் ஆத்மபோதேந்திரர் என்கிற விஸ்வாதிகேந்த்ர சரஸ்வதி ஸ்வாமிகள். இந்த ஸ்வாமிகளிடம் உதவியாளராக இருந்து வந்தார் பாண்டுரங்கர். ஒரு நாள், இவர் மடத்துக்கு புறப்படும்போது, ''நானும் வருவேன்'' என்று அடம் பிடித்தான் ஐந்தே வயதான புருஷோத்தமன். சரி என்று அவனையும் கூட்டிக் கொண்டு ஸ்ரீமடத்துக்கு வந்து சேர்ந்தார் பாண்டுரங்கர். பீடத்தில் இருந்த ஸ்வாமிகளைக் கண்டதும், பக்தி

உணர்வு மேலிட, எவரும் சொல்லாமல் தானாகவே நமஸ்காரம் செய்தான் பாலகன் புருஷோத்தமன்.

விளையும் பயிரின் சாதுர்யம், ஒரு வேத வித்துக்குத் தெரியாமல் இருக்குமா? ஸ்வாமிகள், புருஷோத்தமனைப் பார்த்துப் புன்னகைத்தார். ஸ்வாமிகள் முன் கைகட்டி, வாய் பொத்தி நின்றிருந்தது குழந்தை. பாண்டுரங்கரைப் பார்த்து, 'இந்தக் குழந்தை யாருடையது?' என்றார் ஸ்வாமிகள். 'தங்களது பரிபூரண ஆசிர்வாதத்தோடு பிறந்த இந்தக் குழந்தையும் தங்களுடையதே' என்றார் தந்தை, இயல்பாக. 'நம்முடையது என்று நீர் சொல்வதால், இந்தக் குழந்தையை நமக்கே விட்டுத் தர முடியுமா?' என்றார் ஸ்வாமிகள், அடுத்ததாக.

யதேச்சையாக, தான் சொன்ன வார்த்தைகளின் முழுப் பொருள் அப்போதுதான் பாண்டுரங்கருக்குப் புரிந்தது. சற்றுத் தடுமாறினார். வாய் தவறி வார்த்தை களை உதிர்த்து விட்டோமோ என்று ஐயப்பட்டார். இருந்தாலும், வாயில் இருந்து வந்து விழுந்த வார்த்தைகள் இறைவனின் சங்கல்பத்தால் எழுந்தவையாக இருக்கும் என்று அனுமானித்தார். ஸ்வாமிகளைப் பணிந்து, 'தங்களது விருப்பமே எனது விருப்பமும்' என்றார்.

இதைக் கேட்டு சந்தோஷப்பட்ட ஸ்வாமிகள், 'நல்லது. இன்றைய தினத்தில் இருந்து

ஸ்ரீமடத்தின் குழந்தையாகவே புருஷோத்தமன் பாவிக்கப்படுவான். தைரியமாகச் செல்லுங்கள்' என்றார்.

கணவரின் இந்த செயலைக் கேள்விப்பட்ட மனைவி சுகுணா கலங்கவில்லை. 'பகவானின் விருப்பம் அதுவா னால், அதற்கு நாம் என்ன செய்ய முடியும்?' என்று தன்னையும் தேற்றி, கணவரையும் தேற்றினாள். மடத்திலே வளர்ந்தாலும், தினமும் பெற்றோரைச் சந்தித்து அவர்களை நமஸ்கரித்து ஆசி பெறும் உயரிய வழக்கத்தைக் கொண்டிருந்தான் புருஷோத்தமன்.

ஐந்து வயதில் அட்சர அப்பியாசம்; ஏழு வயதில் உபநயனம்; பதினாறு வயது முடிவதற்குள் வேதம், வேதாந்தம் போன்றவற்றைத் திறம்படக் கற்றுத் தேர்ந் தான். 'சகலத்திலும் உயர்ந்தது நாராயணன் நாமமே' என்று தெளிந்த புருஷோத்தமன், தினமும் ஒரு லட்சத்து எட்டாயிரம் 'ராம' நாமத்தை ஜபிப்பதாக, ஆச்சார்யர் சந்நிதியின் முன் அமர்ந்து சங்கல்பமே எடுத்துக் கொண்டான் (அதன் பின், கடைசிவரை இதைத் தவறாமல் கடைப்பிடித்தும் வந்தார்).

அடுத்தடுத்து வந்த காலகட்டத்தில் புருஷோத் தமனின் பெற்றோர், ஒருவர் பின் ஒருவராக இறைவனின் திருப்பதம் அடைந்தனர்.

நாளாக ஆக புருஷோத்தமனின் தேஜசும் பவ்யமும் கூடிக் கொண்டே வந்தது. ஆச்சார்ய பீடத்தில் அமர்வதற்கு உண்டான அத்தனை தகுதிகளும் புருஷோத்தமனுக்கு இருப்பதாகப் பெருமைப்பட்டுக் கொண்டார் விஸ்வாதிகேந்த்ரர். உரிய காலம் வந்ததும் அவனை பீடத்தில் அமர்த்திப் பார்த்து அழகு செய்ய விரும்பினார் ஸ்வாமிகள். அதற்குரிய வேளையும் வந்தது.

ஒரு தினம் விஸ்வாதிகேந்த்ர சரஸ்வதி ஸ்வாமிகள் பக்தி மார்க்கத்தைப் பரப்பும் பொருட்டு காசி யாத் திரை புறப்பட்டார். அப்போது புருஷோத்தமனும் உடன் வருவதாகச் சொல்ல... 'காசியில் சில காலம் தங்க உத்தேசித்துள்ளேன். எனவே, நீ இப்போது என்னுடன் வர வேண்டாம். சிறிது காலத்துக்குப் பிறகு புறப்பட்டு வா' என்றார் ஸ்வாமிகள். புருஷோத்தமனும் ஸ்வாமிக ளைப் பிரிய மனம் இல்லாமல் ஒப்புக் கொண்டான்.

ஸ்வாமிகள் காசியை அடைந் தார். அப்போது, ந்ருஸிம்மாச்ரமி ஸ்வாமிகள் எனும் மகான் காசி ஷோத்திரத்தில் தங்கி, பகவான் நாமாவை பிரசாரம் செய்து கொண்டிருந்தார். இருவரும் சந்தித்து உரையாடி, ஆன்மிக விவாதங்களை மேற்கொண்டனர். அப்போது, நாம சங்கீர்த்தன வைபவங்கள் அதிக அளவில் காசியில் நடந்ததைப் பார்த்து ஸ்வாமிகள் பெருமிதம் கொண் டார். 'இந்த அளவுக்குத் தென்னாட்டில் நாம சங்கீர்த்தனம் வளர வேண்டுமானால், அது புருஷோத்தமனால்தான் முடியும். விரைவிலேயே அவனுக்கு மடாதிபதி பட்டம் சூட்ட வேண்டும்' என்று முடிவெடுத்தார்.

குருநாதரின் பிரிவைத் தாங்க முடியாமல் ஒரு கட்டத்தில் காசிக்குப் புறப்படத் தீர்மானித்து, தன் நண்பனுடன் யாத்திரையைத் துவக்கினான் புருஷோத்தமன். பல நாட்களுக்குப் பிறகு, காசியை அடைந்தான். அங்கே, புருஷோத்தமனைப் பார்த்த மாத்திரத்தில் பெருமகிழ்வு கொண்டு, அவனை ஆனந் தமாக அணைத்து சந்தோஷப்பட்டார் ஸ்வாமிகள். 'புருஷோத்தமனுக்கு விரைவிலேயே பட்டம் சூட்டி விட வேண்டியதுதான்' என்று காசியில் முடிவெடுத் தார். இருவரும் காஞ்சிபுரம் திரும்பிய பின் ஒரு சுப தினத்தில் புருஷோத்தமனுக்குப் பட்டாபிஷே கம்

செய்வித்து, காஞ்சி ஸ்ரீமடத்தின் 59-வது பீடாதிபதியாக ஆக்கினார் ஸ்வாமிகள். அப்போது புருஷோத்தமனுக்கு ஸ்வாமிகளால் சூட்டப்பட்ட திருநாமமே, 'ஸ்ரீபோதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்'.

அதன் பின் பல இடங்களுக்கு யாத்திரை சென்று நாம ஜபத்தின் பெருமைகளைப் பலருக்கும் போதித்தார் ஸ்ரீபோதேந்திரர். ஏராளமான கிரந்தங்

களை இயற்றினார். விளக்கவுரைகள் எழுதினார். ஒரு கட்டத்தில், விஸ்வாதிகேந்த்ர ஸ்வாமிகளுடன் ஸ்ரீபோதேந்திரர் யாத்திரை சென்று கொண்டிருந்தார். அப்போது, உடல் நலம் இல்லாமல் மகா சமாதி அடைந்தார் விஸ்வாதிகேந்த்ர ஸ்வாமிகள். குரு நாதருக்குச் செய்ய வேண்டிய கர்மங்களை முறையா கச் செய்து முடித்தார் ஸ்ரீபோதேந்திரர். அதன் பின் காஞ்சிபுரத்துக்கே திரும்பி விட்டார்.

வெவ்வேறு ஊர்களில் நடக்கும் போதேந்திரரின் நாம ஜப உற்ஸவங்களுக்குப் பெருமளவில் ஜனங்கள் வர ஆரம்பித்தார்கள். இதே காலத்தில்தான் திருவிசநல்லூரில் நாம ஜபத் தில் பிரபலமாக இருந்த ஸ்ரீதர ஐயாவாளுடன் பழக்கம் ஏற்பட் டது போதேந்திரருக்கு. இருவரும் இணைந்தே யாத்திரைகள் மேற் கொண்டனர். கிராமம் கிராம மாகச் சென்று நாம ஜபத்தின் உயர்வைச் சொன்னார்கள்.

ஒரு முறை, போதேந்திரரும் ஸ்ரீதர ஐயாவாளும் பெரம்பூர் என்கிற கிராமத்துக்கு சிஷ்யகோடி களுடன் வந்து சேர்ந்தனர். அந்த ஊரில் வசித்து வந்த ஆசாரமான

அந்தணர் ஒருவர், ஸ்வாமிகள் இருவரையும் தங்கள் இல்லத்தில் எழுந்தருளி, பிட்சை ஏற்குமாறு கேட்டுக் கொண்டார். அதன்படி அவரது இல்லத்துக்கு ஸ்வாமிகளும் சிஷ்ய கோடிகளும் சென்றனர்.

போதேந்திர ஸ்வாமிகள் பிட்சை எடுத்து உண்ட பிறகே, ஸ்ரீதர ஐயாவாள் பிட்சை எடுத்து உண்பது வழக்கம். எனவே, போதேந்திரர் முதலில் பிட்சை எடுத்துக் கொள்ள அமர்ந்தார். ஸ்ரீதர ஐயாவாளும், சிஷ்யகோடிகளும், ஊர்ஜனங்களும் ஸ்வாமிகளுக்கு எதிரே பவ்யமாக நின்று கொண்டிருந்தனர். அந்தணர் இல்லத்தைச் சேர்ந்தவர்கள், ஸ்வாமிகளது இலையில் பிட்சைக் கான பதார்த்தங்களை ஒவ்வொன்றாகப் பரிமாறத் தொடங்கினார்கள்.

அந்த அந்தணருக்கு ஒரே மகன். சுமார் ஐந்து வயது இருக்கும். வாய் பேச முடியாதவன். சிறு வயது என்பதாலும், உணவின் மேல் கொண்ட பிரியத்தினாலும் ஸ்வாமிகளின் இலையில் பரி மாறப்பட்ட பதார்த்தங்கள் தனக்கு உடனே சாப்பிட வேண்டும் என்று ஜாடையில் சொல்லி அடம்பிடித்துக் கொண்டிருந்தான். இவனைப் பார்த்ததும், ஸ்வாமிகளுக்குத் துக்கம் வந்தது. 'ராம நாமத்தைச் சொல்லி, மோட்சம் அடையலாம் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கும். ஆனால், வாய் பேச முடியாத இந்த சிறுவன், எப்படி பகவான் நாமாவைச் சொல்ல முடியும்? எப்படிக் கரை ஏறுவான்?' என்பதே ஸ்வாமிகளின் கவலை. ஆனால், அடுத்து அங்கே என்ன நடக்கப் போகிறது என்பதை ஸ்வாமிகள் அறியாதவரா என்ன?

சிறுவனின் பரிதாப நிலையைக் கண்களுக்கு நேராகப் பார்த்த பிறகு, ஸ்வாமிகளது கவனம் பிட்சையில் செல்லவில்லை. விருப்பம் இல்லாமல் சாப்பிட்டார். பல பதார்த்தங்களை இலையில் மீதம் வைத்து விட்டு எழுந்தார்; வெளியே வந்து அமர்ந்தார். அப்போது ஸ்வாமிகளிடம் ஆசி பெற ஏராளமானோர் கூடினர். அந்தணரின் குடும்பத் தினரும், பவ்வியமாக நின்றிருந்தனர்.

வாய் பேச முடியாத அந்தச் சிறுவன் மட்டும் பசியுடன், ஸ்வாமிகள் சாப்பிட்ட இலைக்கு முன் தவிப்புடன் நின்றிருந்தான். அவரது இலையில் சில பதார்த்தங்கள் மீதம் இருந்தன. அவற்றை உடனே சாப்பிட்டுத் தன் பசியை ஆற்றிக் கொள்ள வேண்டும் என்று தவித்தான். அங்கே வேறு எவரும் இல்லாததால், ஸ்வாமிகள் அமர்ந்த இடத்தில் தான் உட்கார்ந்து கொண்டான். அவரது இலையில் மிச்சம், மீதி இருந்த உணவு வகைகள் ஒன்றையும் விடாமல் பரபரவென உட்கொண்டான். பசி எனும் நெருப்பு தற்போது தணிந்து விட்டதால், சிறுவனின் உள்ளத்தில் ஆனந்தம் குடி கொண்டது.

அடுத்து நடந்த நிகழ்வை ஆச்சரியம் என்று தான் சொல்ல வேண்டும். இதுவரை எந்த ஒரு வார்த்தையையுமே உச்சரிக்காமல் இருந்த அவ னது வாய், 'ஸ்ரீராம ராம' என்று சந்தோஷமாக உச்சரித்தது. இதையே தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தான். தனக்குப் பேச வந்து விட்டதே என்கிற ஆனந்தத்தில் அவன் கூத்தாடினான்.

வாய் பேச முடியாத தன் மகனது வாயில் இருந்து 'ஸ்ரீராம' கோஷம் வருவதைக் கேட்ட அவனது பெற்றோர், திகைத்துப் போய் வாசலில் இருந்து வீட்டின் உள்ளே ஓடி வந்தனர்.

'மகனே... மகனே... உனக்குப் பேச்சு வந்து விட் டது. அதுவும் ராம நாம ஜபத்துடன் உன் பேச்சைத் துவக்கி இருக்கிறாய்' என்று அவனது பெற்றோர் கண் கலங்க அவனைக் கட்டித் தழுவினர்.

வெளியே- வாசலில் அமர்ந்திருந்த அந்த மகான் அமைதியாக அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தார். இதெல்லாம் நடந்தது இவரது கருணையினால்தானே! பேச முடியாத மகன் பேசக் காரணமாக இருந்தது இவரல்லவா? ஒரு நாளைக்கு லட்சத்து எட்டாயிரம் என்ற எண்ணிக்கையில் எந்த நேரமும் பகவானின் நாமத்தையே ஜபித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீபோதேந்திரரின் நாவில் பட்ட உணவின் மீதியை உட்கொண்டதால் அல்லவா, அந்த சிறுவன் பேசத் தொடங்கி இருக்கிறான்!

அவன் பேச வேண்டும் என்பதற்காகத்தான், அந்த மகான் தனது இலையில் பதார்த்தங்களை மிச்சம் வைத்து விட்டு எழுந்து சென்றாரோ?

மகனுடன் சென்று, அந்த மகானின் திருப்பாதங்களில் விழுந்து தொழுதனர் பெற்றோர்.

கோவிந்தபுரத்தில் போதேந் திர சரஸ்வதி ஸ்வாமிகள் இருந்த இடத்துக்கு அருகில் தான் காவிரி நதி!

கோடை அல்லாத காலங் களில் கொப்பளித்துக் கொண் டும், சுழித்துக் கொண்டும் ஓடும் அந்த நதியின் அழகை ரசிப்பதற்கும், அங்கே கூடும் சிறுவர்களுடன் விளையாடுவதற்காகவும் காவிரிக் கரைக்கு அடிக்கடி செல்வார் ஸ்வாமிகள். கள்ளம் கபடம் இல்லாத அந்த சிறுவர்களுக்கு இணையாக வயது வித்தியாசம் பாராமல் விளையாடுவார் ஸ்வாமிகள். சிறுவர்களின் ஆனந்தம் கண்டு குதூகலிப்பார்.

பல நேரங்களில் ஆற்றங்கரையில் சாகசங்கள் சிலவற்றை செய்து காண்பித்து சிறுவர்களை மகிழ்விப்பார் ஸ்வாமிகள். இது ஸ்வாமிகளுக்கும் சந்தோஷமாக இருக்கும்.

காவிரி ஆற்றங்கரையில் ஸ்ரீபோதேந்திர ஸ்வாமிகள் இருப்பதை சிறுவர்கள் பார்த்து விட்டால் போதும்... அவர்களுக்கு குஷி பிறந்து விடும். துள்ளிக் குதித்து ஓடி வந்து விளையாடுவதற்கென்று ஸ்வாமிகளுடன் ஒட்டிக் கொண்டு விடுவார்கள். இது அடிக்கடி நடக்கக் கூடிய ஒன்று என்றாலும், அன்றைய தினம் நடக்கப் போகும் விளையாட்டுதான், ஸ்வாமிகளின் இறுதியான விளையாட்டு என்பதை, பாவம் அந்தச் சிறுவர்கள், அறிய வில்லை!

அது கோடை காலம்... காவிரி ஆற்றில் தண்ணீர் வற்றிப் போய் இருந்தது. நதியின் பெரும் பகுதி முழுக்க மணலால் சூழப்பட்டிருந்தது. தண்ணீர் இருக்கும் இடத்தைத் தேடித் தான் கண்டுபிடிக்க வேண்டி இருந்தது.

மணல் நிரம்பிய ஒரு பகுதியில் குழி ஒன்றுக்குள் தான் இறங்கிக் கொண்டு, மேலே மணலைப் போட்டு மூடுமாறு சிறுவர்களைப் பணித்தார் ஸ்வாமிகள். சிறுவர்கள் ஆனந்தமாக மணலை அள்ளிப் போடுகிற நேரம் பார்த்து, ''ஏ பசங்களா... என் மேல் மணலை அள்ளிப் போட்டு மூடி விட்டு, நீங்கள் அனைவரும் வீட்டுக்குப் போய் விட வேண்டும். வீட்டில் எவரிடமும் இந்த விஷயத்தைச் சொல்லக் கூடாது. நாளை காலை பொழுது விடிந்ததும் இங்கே வந்து என்னைப் பாருங்கள்'' என்றார்.

'ஸ்வாமிகளுடனான ஒரு விளையாட்டே இது' என்று நம்பிய அந்த அப்பாவிச் சிறுவர்கள் போட்டி போட்டுக் கொண்டு, குழிக்குள் மணலை நிரப்பினார்கள். ஸ்வாமிகளது உருவம் மறைந்தே விட்டது. ''வாங்கடா, வீட்டுக்குப் போகலாம். சாமீ ஜபம் பண்றாரு. இங்கே நாம நின்னா அவருக் குத் தொந்தரவா இருக்கும்'' என்று இருட்டுகிற வேளையில் அனைவரும் கலைந்து விட்டனர்.

மறுநாள் காலை... தங்களது அன்றாட அலுவல்களின் பொருட்டு ஸ்வாமிகளைத் தேடினர் அவரது சிஷ்யர்கள். ஆசி பெற வேண்டி, ஊர்மக்கள் சிலரும் ஸ்வாமிகளைத் தேடி வந்தனர். இப்படிப் பலரும் ஸ்வாமிகளைத் தேடிக் கொண்டிருக்க... அவரைக் காணோம் என்கிற தகவல் பரவியது. பல இடங்களில் தேடிப் பார்த்தனர்.

ஸ்வாமிகளுடன் ஆற்றங்கரையில் அடிக்கடி விளையாடும் சிறுவர்களைக் கூப்பிட்டு விசாரித்தார்கள் பெரியோர். அப்போதுதான், முந்தைய தினம் நடந்த சம்பவத்தின் வீரியம் அந்த சிறுவர்களுக்குப் புரிய ஆரம்பித்தது. கண் களில் நீர் கசிய, ஸ்வாமிகளின் மேல் மணலைப் போட்டு மூடிய விவரத்தைத் தேம்பித் தேம்பிச் சொன்னார்கள்.

சீடர்களும் ஊர்க்காரர்களும் பதறிப் போய் ஆற்றங் கரைக்கு ஓடினார்கள். சிறுவர்கள் அடையாளம் காட்டிய இடத்தில், மேடாக இருந்த மணலைக் கைகளால் விலக்க ஆரம்பித்தார்கள். ஒரு கட்டத்துக்கு மேல் அவர் கள் மணலை அள்ளிக் கொண்டிருந்தபோது அசரீரி வாக்கு ஒன்று எழும்பியது. 'பக்தர்களே... நாம் இந்த இடத்திலேயே ஞானமயமான ஸித்த சரீரத்தில் இருந்து கொண்டு ஜீவன் முக்தராக விளங்குவோம். அதோடு, உலக நன்மைக்காக பகவான் நாம சங்கீர்த்தனம் செய்து கொண்டே இருப்பதால், நமக்கு எந்தத் தொந்தரவும் செய்ய வேண்டாம். உங்களது பணிகளை நிறுத்துங்கள்... இதற்கு மேல் பிருந்தாவனம் அமைத்துத் தினமும் ஆராதித்து வாருங்கள். ஒவ்வொரு நாளும் லட்சத்து எட்டாயிரம் நாமகீர்த்தனம் செய்கிற பக்தர்களுக்கு நாம் தரிசனம் தருவோம்' என்று அந்தக் குரல், ஸ்வாமிகளின் மொழியாக ஒலித்தது!

இந்த அசரீரி வாக்கைக் கேட்ட அவரது பக்தர்களும் சீடர்களும், அதற்கு மேல் குழியைத் தோண்டாமல் மண் போட்டு மூடியே விட்டார்கள். அவர் மீது கொண்ட குருபக்தி காரணமாக சில பக்தர்கள், ஆற்றங்கரை மணலில் விழுந்து தேம்பி அழுதனர். இன்னும் சிலரோ, தாங்கள் கொண்ட குருபக்தியின் உயர்வை எண்ணி, நாம சங்கீர்த்தனம் செய்யத் தொடங்கினர்.

ஸ்வாமிகள் நிரந்தரமாகக் குடி கொண்ட இடத்தில் அவரது அசரீரி வாக்குப்படியே ஒரு துளசி மடம் அமைத்து, மஹாபிஷேகம் நடத்தி, தினமும் நாம சங்கீர்த்தனம் செய்து வந்தனர் அவரது பக்தர்கள். ஆற்றங்கரை மணலுக்குள் ஸ்வாமிகள் ஐக்கியமான தினம் கி.பி. 1692-ஆம் வருடம் (பிரஜோத்பத்தி வருடம்) புரட்டாசி மாதம் பூர்ணிமை திதியில் நடந்தது. இப்போதும், ஸ்வாமிகளின் அதிஷ்டானத்தில் பௌர்ணமியில் ஆரம்பித்து, மஹாளய அமாவாசை வரை பதினைந்து நாட்கள் ஆராதனை உற்ஸவம் பாகவதர் களால் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இதற் காக நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் இங்கு வந்து குவிவார்கள்.

போதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் ஜீவ சமாதியில் இருந்து கொண்டு, இன்றைக்கும் நாம ஜபம் சொல்லித் தன்னைத் துதிக்கும் பக்தர்களுக்குக் காட்சி தந்து அருளுகிறார். அவரது அதிஷ்டானத்துக்குள் இருந்து ராம நாமம் ஜபிக்கும் ஒலி கேட்டவர்கள் இன்றைக்கும் இருக்கிறார்கள்.

ஸ்ரீபோதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அதிஷ்டானத்தை தரிசிப்போமா?

பிரமாண்டமான ஆஞ்சநேயர் சந்நிதி, போதேந்தி ராளின் அதிஷ்டானம்... இவை இரண்டும்தான் இங்கே பிரதானம். 'ஸ்ரீபோதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் டிரஸ்ட்' அமைப்பினர் இந்த அதிஷ்டானத்தைத் திறம்பட நிர்வகித்து வருகிறார்கள். இந்த இதழ் வெளி வரும் நாளில், (26.9.08 வெள்ளிக்கிழமை) குருநாதர் ஸ்ரீபோதேந்திரரின் மஹா ஆராதனை நடைபெறுகிறது. மறு நாள் சனியன்று ஆஞ்சநேய உற்ஸவம் மற்றும் விடையாற்றி உற்ஸவம்.

பாலீஷ் செய்யப்பட்ட கருங்கற்களால் அதிஷ்டா னத்தைப் புதுமைப்படுத்தி இருக்கிறார்கள். உயர மான தூண்கள் கொண்ட ஒரு மண்டபத்தின் நடுவே அதிஷ்டானம். இதைச் சுற்றி வலம் வரலாம்.

கும்பாபிஷேகத்தின் காரணமாக இந்த அதிஷ்டா னத்தைச் சுற்றிலும் உள்ள இடத்தைச் சற்றுத் தோண்டி எடுத்து, சீரமைக்க ஆரம்பித்தார்கள். அப்போது சுமார் ஆறடிக்குக் கீழே அதிஷ்டானத் தோற்றத்தில் ஒரு அமைப்பு தென்பட்டதாம். இது, ஆதியில் மருதாநல்லூர் ஸ்ரீசத்குரு ஸ்வாமிகளால் அமைக்கப்பட்ட அதிஷ்டானமாக இருக்கலாம் என்கிறார்கள்.

இன்னும் கொஞ்சம் கீழே பார்த்தால், ஆற்று மணல். ஆம்! மணலுக்குள்தானே தன்னை மூடிக் கொண்டார் இந்த மகான்?

மருதாநல்லூர் ஸ்வாமிகள் (இவரது காலம் கி.பி.1777- 1817 என்பர்) ஸ்ரீபோதேந்திரரின் அதிஷ்டானத்தை அமைத்தது தனிக் கதை. அதை இங்கே தெரிந்து கொள்வது நலம்.

மருதாநல்லூர் ஸத்குரு ஸ்வாமிகள் காலத்தில் தஞ்சையை ஆண்டு வந்த மகாராஜா, சத்ரபதி சிவாஜியின் வழி வந்தவர். ஆன்மிகத்தின் பாதையில் தன்னைப் பெரிதும் ஈடுபடுத்திக் கொண்டவர். மகான்களைப் போற்றியவர்.

மருதாநல்லூர் ஸ்வாமிகளின் காலத்தில், கோவிந்தபுரத்தில் உள்ள ஸ்ரீபோதேந்திரரின் அதிஷ்டானத்தை பக்தர்கள் தரிசிக்க முடியாமல் இருந்து வந்தது.

காரணம், அப்போது கரை புரண்டு ஓடிய காவிரியின் வெள்ளம் ஸ்ரீபோதேந்திரரின்

அதிஷ் டானத்தை முழுக்கவே மூழ்கடித்து விட்டது. எவரது கண்களுக்கும் அந்த அதிஷ்டானம் தென்படவில்லை. இந்த நிலையில், தஞ்சை மகாராஜாவின் விருப்பப் படி, காவிரி நதியைச் சற்றே வடப் பக்கம் திருப்பி, ஸ்ரீபோதேந்திரரின் அதிஷ்டா னத்துக்கு எதிர்காலத்தில் எந்த வித பாதிப்பும் வராமல், தடுப்பு வேலைகளைத் திறம்படச் செய்தார் மருதாநல்லூர் ஸ்வாமிகள்.

மக்கள் சக்தியால் முடியாத ஒரு பணியை மகான் சாதித்து விட்டதில் பெரிதும் மகிழ்ந்த தஞ்சை மகாராஜா, மருதாநல்லூர் ஸ்வாமிகளை ஏகத்துக்கும் கௌரவித்து மகிழ்ந்தான்.

ஸ்ரீபோதேந்திராளின் அதிஷ்டானத்தை மருதாநல்லூர் ஸ்வாமிகள் எப்படிக் கண்டு பிடித்தார் என்று ஒரு தகவல் சொல்வார்கள்.

அதாவது, சுட்டெரிக்கும் காவிரியின் மணலில் படுத்துக் கொண்டே உருண்டு வருவாராம் தினமும். ஒரு நாள், மகிழ்ச்சி மேலிட, ''ஸ்ரீபோதேந்திராளின் அதிஷ்டானம் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து விட்டேன். இங்குதான் அவரது ஜீவன் உறங்கிக் கொண்டிருக்கிறது'' என்று கூத்தாடினார்.

அப்போது உடன் இருந்த அரசு அதிகாரிகளும், பக்தர்களும், ''அதெப்படி, இங்குதான் அவரது ஜீவன் உறங்குகிறது என்பதை சர்வ நிச்சயமாகக் கூறுகிறீர்கள்? ஆற்று மணலில் எல்லாப் பகுதிகளும் எங்களுக்கு ஒரே மாதிரிதானே காட்சி தருகிறது?'' என்று கேட்டிருக்கிறார்கள்.

அதற்கு மருதாநல்லூர் ஸ்வா மிகள் சொன்னார் ''பக்தர்களே... படுத்துக் கொண்டே ஒவ்வொரு பகுதியிலும் என் காதுகளை வைத்துக் கேட்டுக் கொண்டே வந்தேன். இந்தக் குறிப்பிட்ட ஓர் இடத்தில் மட்டும்தான் இன்னமும் ராம ராம எனும் நாம கோஷம் தொடர்ந்து கேட் டுக் கொண்டிருக்கிறது. எனவே, இங்குதான் அவரது ஜீவன் இந்த நாமாவை உச்சரித்து வருகிறது என்று தீர்மானித்தேன்.''

அடுத்த கணம் அங்கு கூடி இருந்தவர்கள் அனைவரும் அந்த மணற் பரப்பில் விழுந்து, ஸ்ரீபோதேந்திராளை மானசீகமாகத் தொழுதார்கள். அதன் பின்தான், ஸ்ரீபோதேந்திராளுக்கு இங்கே அதிஷ்டானம் அமைக்கப்பட்டது.

கிழக்கு நோக்கிய முகப்பில் அதிஷ்டானத்தின் பிரதான வாயில். முகப்பில் மூன்று நிலை ராஜ கோபுரம் ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது.

தற்போது நித்ய பூஜை, அன்னதானம் என்று எதற்கும் இங்கே குறைவில்லை. தினமும் காலை ஆறு மணிக்கு சுப்ரபாத சேவை. எட்டு மணிக்கு உஞ்சவிருத்தி. ஒன்பது மணிக்கு ஸ்ரீஆஞ்சநேயருக்கு அபிஷேகம். பதினோரு மணிக்கு அதிஷ்டான பூஜை. அதன் பிறகு சமாராதனை, அன்னதானம்.

இதேபோல் மாலை நான்கு மணிக்கு சம்பிரதாய பூஜை. ஆறு மணிக்கு விஷ்ணு சகஸ்ரநாம பாரா யணம். ஏழு மணிக்கு அதிஷ்டான பூஜை. ஏழரை மணிக்கு டோலோற்ஸவம். இதுதான் ஸ்ரீபோதேந் திராள் அதிஷ்டானத்தின் நித்யப்படி வழிபாடு.

இங்கு சுமார் 40 பசுக்களை வைத்து ஒரு கோசாலையையும் பராமரித்து வருகிறார்கள். இதன் மூலம் கிடைக்கும் பால், அதிஷ்டானத்தின் பயன்பாடுகளுக்கு மட்டுமின்றி, திருவிடைமருதூர் ஸ்ரீமகாலிங்க ஸ்வாமியின் அர்த்தஜாம பூஜைக்கும் செல்கிறதாம்.

'கலியில் நாமசங்கீர்த்தனம்தான் கதி. நமக்கு பக்தி இல்லாவிட்டாலும், ஞானம் இல்லாவிட்டாலும், விரக்தி இல்லாவிட்டாலும், கர்ம யோகம் இல்லா விட்டாலும், சிரத்தை இல்லாவிட்டாலும், தபஸ் இல்லாவிட்டாலும், நன்னடத்தை இல்லா விட்டாலும், சக்தி இல்லாவிட்டாலும், எது இல்லாவிட்டாலும் அதற்குக் காரணம் நம்மிடம் நாம ஜபம் போதவில்லை என்பதே ஆகும். ஏனெனில், நாம ஜபம் பூரணமாக இருந் தால் மேற்சொன்ன யாவும் நம்மிடம் இருக்கும்...'

_ இந்த வரிகளை ஸ்ரீபோதேந்திராளின் அதிஷ் டான ஆலயத்தில் எழுதி வைத்திருக்கிறார்கள். உண்மை தான்! கலியில் மோட்சத்தை அடைய இறை நாமம் ஒன்றே சிறந்தது என்பது ஆன்மிக மேன்மக்களால் சொல்லப் படுகிறது.

நாம ஜபத்தில் பேதமில்லை. அவரவர்கள் தங்களுக்குப் பிடித்தமான நாமாவை ஜபம் செய்து வரலாம். இதற்கு விதிகளும் நியமமும் இல்லை; குரு இல்லை; ஆசாரம் இல்லை; அனுஷ்டானமும் இல்லை; பூஜையறைதான் வேண்டும் என்கிற அவசியம் இல்லை.

எந்த சந்தர்ப்பத்திலும், எத்தகைய நிலையிலும், ஆசாரம் குறைவாக இருந்தாலும், ஆண்- -பெண் ஆகிய எந்தப் பிரிவினரும் தங்களுக்கு வசதியான நேரங்களில் பகவான் நாமாவை ஜபித்துக் கொண்டே இருக்கலாம். இதற்கான புண்ணியமும் பலனும் வார்த்தைகளில் வர்ணிக்க இயலாதவை.

நாம ஜபம் ஜபிப்போம்; நானிலம் சிறக்க துதிப்போம்!

ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம!

தொடர்புக்கு
கோவிந்தபுரம் ஸ்ரீபோதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் டிரஸ்ட்டின் தொலைபேசி எண் 0435- 247 0620

-(தரிசிப்போம்)
படங்கள் எ. பிரேம்குமார்