Published:Updated:

சங்கடஹர சதுர்த்தி உருவான கதை!

சங்கடஹர சதுர்த்தி உருவான கதை!


சிறப்பு கட்டுரை
சங்கடஹர சதுர்த்தி உருவான கதை!
சங்கடஹர சதுர்த்தி உருவான கதை!
சங்கடஹர சதுர்த்தி உருவான கதை!
சங்கடஹர சதுர்த்தி உருவான கதை!
சங்கடஹர சதுர்த்தி உருவான கதை!

'ஜெய் மகாகால்; மகாகாலருக்கு ஜே!'

- உஜ்ஜயினிவாசிகள், ஒருவருக்கொருவர் முகமன் கூற உச்சரிக்கும் இந்த வாசகத்தைக் கேட்கும்போது நம் உடலும் உள்ளமும் சிலிர்க்கும்! அவர்களது உள்ளத்தில் நீக்கமற நிறைந்திருக்கும் மகாகாலராகிய ஜோதிர்லிங்கமே உஜ்ஜயினியின் அதிபதி!

கனகச்ருங்கா, குமுதவதி, குசஸ்தலி, பத்மாவதி, ப்ரதிகல்பா, போகவதி, அவந்திகா ஆகிய பெயர்களாலும் அழைக்கப்படும் உஜ்ஜயினி, தொன்மை வாய்ந்த- சரித்திரப் புகழ் பெற்ற திருத்தலம்.

அங்காரகனான செவ்வாய் பகவானின் பிறப்பு, வளர்ப்பு மற்றும் அவர் நவக்கிரக பதவி பெற்றது ஆகிய புராண சம்பவங்களுடன் தொடர்புடைய தலம் ஆதலால் உஜ்ஜயினியை, 'அங்காரக க்ஷேத்திரம்' என்றும் போற்றுவர்! அங்காரகனது பிறப்பு பற்றி பல்வேறு விதமான தகவல்கள் வெவ்வேறு புராணங்களில் காணப்படுகின்றன.

மாதேவி, இறைவனைப் பிரிந்திருந்த காலம். கல்லால மரத்தடியில் யோகத்தில் ஆழ்ந்திருந்தார் ஈசன். இந்த நிலையில், அவரின் நெற்றிக் கண்ணில் இருந்து வழிந்த வியர்வைத் துளி ஒன்றை, கீழே விழாதபடி அப்படியே தாங்கிக் கொண்டாள் பூமாதேவி. அந்த வியர்வைத் துளியிலிருந்து தோன்றிய குழந்தையே மங்களன். இவனே அங்காரகன் எனப்பட்டான் என்றொரு கதை உண்டு.

சூரபதுமனால் தேவர்கள் துயருற்ற காலம்! 'அவனை அழிக்க வல்ல பலவான், சிவபெருமான் மூலம் தோன்ற வேண்டும்' என்றார் மகாவிஷ்ணு. அதன்படி தேவர்கள் அனைவரும் சிவபெருமானைக் காணச் சென்றனர். அவரோ கடுந்தவத்தில் ஆழ்ந்திருந்தார். அவரது தவம் கலைந்தால்தான் தங்களது எண்ணம் ஈடேறும் என்பதை உணர்ந்த இந்திரன், மன்மதனைத் தூண்டினான். மன்மதன் தனது மலர்க் கணைகளால் சிவபெருமானின் தவத்தைக் கலைத்தான். இதனால் கோபம் கொண்ட ஈசன், மன்மதனை தனது நெற்றிக் கண்ணால் எரித்துச் சாம்பலாக்கினார்!

இதன் பிறகு சிவ- பார்வதியர் திருமணம் நடந்தேறியது. இந்த நிலையில், 'இவர்களுக்குப் பிறக்கப் போகும் அதிபராக்கிரம சாலியான குழந்தையால் தனது பதவிக்கு ஆபத்து நேருமோ!' என்று பயந்தான் இந்திரன். எனவே, சிவ- பார்வதியர் இணைவதைத் தடுக்க அக்னியை அனுப்பினான். ஆனால், சிவ பெருமானின் வீரியத்தை தாங்க முடியாத அக்னி பகவான், அவரிடம் சரணடைந்து

மன்னிப்பு வேண்டினான்.அவனிடம், கங்கையில் வீரியத்தைச் சேர்க்கும்படி கட்டளையிட்டார் சிவபெருமான். அக்னி தேவனும் அப்படியே செய்தான். அப்போது, உருவான குழந்தையே அங்காரகன் என்பது சிலரது கருத்து. ஆனால், 'அக்னி தேவனுக்கும் விகேசி என்பவளுக்கும் பிறந்தவனே அங்காரகன்' என்கிறது லிங்க புராணம்!

மச்ச புராணம் என்ன சொல்கிறது தெரியுமா?

தட்சன், தன் மகளான தாட்சா யணியை சிவபெருமானுக்கு மணம் செய்து கொடுத்தான். ஆனால், சிவனா ருக்கும் தட்சனுக்கும் இடையே பகை ஏற்பட்டது.

ஒரு முறை, பெரும் வேள்வி ஒன்றைத் துவக்கிய தட்சன், சிவனாருக்கு அழைப்பு அனுப்பாமல் அவரை அவமதித்தான். கோபம் கொண்ட சிவனார், தனது நெற்றிக் கண்ணிலிருந்து வீரபத்திரரை உருவாக்கி, தட்சனை அழித்து வர அனுப்பினார். இதையடுத்து, தட்சன் மற்றும் அவனைச் சேர்ந்தவர்களை அழித்தார் வீரபத்திரர். அப்போது, வீரபத்திரரது ஆவேசத்தைக் கண்டு அதிர்ந்த தேவர்கள் அனைவரும் ஒன்றுகூடி அவரை சாந்தப்படுத்தினர். அவரும் சாந்தமானார். இந்த உருவமே அங்காரகன் என்கிறது மச்ச புராணம்.

மற்றுமொரு கதை...

சிஷ்டரின் பரம்பரையில் தோன்றியவர் பரத்வாஜ முனிவர். இவர், நர்மதை நதிக்கரையில் தவம் செய்து வந்தார். ஒரு நாள்... நர்மதையில் நீராடிக் கொண்டிருந்த தேவ மங்கை ஒருத்தியைக் கண்டு மோகித்த பரத்வாஜர், அவளை அவந்தி நகருக்கு அழைத்துச் சென்று, இல்லறம் நடத்தி

வந்தார். இவர்களுக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்ததும் அந்தப் பெண் தேவலோகத்துக்குத் திரும்பிச் சென்றாள். பரத்வாஜ முனிவரும் குழந்தையை அங்கேயே விட்டு விட்டு, நர்மதைக் கரைக்குச் சென்று தவத்தைத் தொடர்ந்தார். இதையடுத்து, அந்தக் குழந்தையை பூமாதேவி

அரவணைத்து வளர்த்தாள். குழந்தை யின் மேனி, செந்நிறத்துடன் அக்னி போல் பிரகாசித்ததால், அவனுக்கு 'அங்காரகன்' என்று பெயர் சூட்டினாள்.

அங்காரகனுக்கு ஏழு வயதானது. ஒரு நாள், ''அம்மா, என் தந்தை யார்? அவரைக் காண ஆவலாக உள்ளது!'' என்று பூமாதேவியிடம் கேட்டான். உடனே, ''குழந்தாய்... உன் தந்தையின் பெயர் பரத்வாஜர்; மகரிஷிகளில் மகிமை பெற்றவர். அவரிடம் உன்னை அழைத்துச் செல்கிறேன்!'' என்ற பூமாதேவி, அவனுடன் பரத்வாஜரது ஆசிரமத்தை அடைந்தாள்.

சங்கடஹர சதுர்த்தி உருவான கதை!

அங்கு முனிவரைச் சந்தித்தவள், ''முனிவரே, இவனே தங்களின் மகன். உங்களைக் காண விரும்பியதால் இவனை இங்கு அழைத்து வந்தேன். தாங்கள் இவனை ஏற்றுக் கொள்ள வேண்டும்!'' என வேண்டினாள். மிகவும் மகிழ்ந்த பரத்வாஜர், அன்புடன் தன் மகனை அணைத்துக் கொண்டார்.

அங்காரகன் தகுந்த வயதை அடைந்ததும், முறைப்படி அவனுக்கு உபநயனம் முதலிய சடங்கு களைச் செய்து வைத்து வேத அத்யயனத்தையும் ஆரம்பித்து வைத்தார் பரத்வாஜர். சதுர்வேதங்களை மிகக் குறுகிய காலத்திலேயே கசடறக் கற்றுத் தேர்ந்த அங்காரகன், இன்னும் பல கலைகளிலும் சிறந்து விளங்கினான்.

இதன் பிறகு... தான் சர்வ வல்லமை பெற விரும்புவதாகவும், தகுந்த வழி காட்டுமாறும் தந்தையிடம் பிரார்த்தித்தான். 'தவமே சிறந்த வழி' என்ற பரத்வாஜர்,

விநாயகரைக் குறித்து தவம் இருக்கும்படி அங்காரகனைப் பணித்தார். உரிய மந்திரங்களையும் அவனுக்கு உபதேசித்து அனுப்பி வைத்தார்.

அவந்தி நகரை அடுத்த அடர்ந்த வனத்தில் தக்க இடத்தைத் தேர்ந்தெடுத்து, ஒரு நன்னாளில் தனது தவத்தைத் துவக்கினான். பல நூறு ஆண்டுகள் நீடித்த அங்காரகனின் தவத்துக்கு பலன் கிடைக்கும் காலம் கனிந்தது. மாசி மாதம், கிருஷ்ணபட்சம் (தேய்பிறை) சதுர்த்தியன்று இரவு சந்திரோதய காலத்தில், அங்காரனுக்கு தரிசனம் தந்தார் ஆனைமுகத்தோன். அவரது பாத கமலங்களை பணிந்த அங்கார கன், விநாயகரை பலவாறு துதித்துப் போற்றினான். பிறகு, ''விக்னேஸ்வரா, தங்களிடம் சில வரங்களை யாசிக் கிறேன். அருள் புரியுங்கள்!'' என்று வேண்டினான்.

''அங்காரகனே, உனது அன்பினால் கட்டுண்டேன். விரும்பும் வரம் எதுவாயினும் தயங்காமல் கேள்!'' என்று லம்போதரன் திருவாய் மலர்ந் தருளினார்.

''விக்ன ராஜனே... நான், அமிர்தம் அருந்தி அமரனாக ஆசைப்படுகிறேன். சர்வ மங்களமான திரு உருவோடு தங்களைத் தரிசித்த என்னை எல்லோரும், 'மங்களன்' என்று அழைக்க வேண்டும். அத்துடன், தங்களது திவ்விய தரிசனம் கிடைத்த இந்த சதுர்த்தி நன்னாளை அனைவரும் கொண்டாட வேண்டும். இந்நாளில் உம்மை வணங்கும் அடியவர்களது இன்னல்களை நீக்கி அருள வேண்டும். என்னை வணங்கும் அடியவர்களுக்கு செல்வம் அளிக்கும் கிரகமாக நான் மிளிர வேண்டும்!'' என்று பல வரங்களைக் கேட்டான் அங்காரகன்.

அவனை கனிவுடன் நோக்கிய கணபதி, ''அன்பனே! நீ கேட்ட எல்லா வரங்களையும் தருகிறேன். அத்துடன், என்னிடம் நீ அனுக்கிரகம் பெற்ற இந்த நாள், 'அங்காரக சதுர்த்தி'யாகப் போற்றப்படும். இந்த நாளில் திரிகரண சுத்தியுடன் என்னை வணங்குபவர்களது விக்கினங்களை அடியோடு விலக்குவேன்!'' என்று அருளி மறைந்தார்.

விநாயகரின் தரிசனம் கிடைத்த அந்தப் புனித இடத்தில், கணேசர் விக்கிரகத்தைப் பிரதிஷ்டை செய்து அல்லும் பகலும் அவரை வழிபட்டு வந்தான் அங்காரகன். இதனால் இந்த விநாயகருக்கு, 'மங்கள விநாயகர்' என்ற பெயர் வந்தது.

இதன் பிறகு, விநாயகப் பெருமானின் அருளால், தேவலோகம் அடைந்த அங்காரகன், அங்கு அமிர்தம் பருகியதுடன்... விரைவிலேயே, நவக்கிரகங்களில் ஒருவனாகும் பேறு பெற்றான். அவனுக்கு உகந்த தினம் செவ்வாய்.

எனவே செவ்வாய்க்கிழமையுடன் சேர்ந்து வரும் சதுர்த்தி மற்ற சதுர்த்தியைக் காட்டிலும் ஒப்பற்றது;

விநாயகருக்கு மிக உகந்தது.

இந்த நாளில் விரதம் இருந்து விநாயகரை வழிபடுவோரது சங்கடங்கள் அனைத்தும் விலகும். எனவே இந்த புனித தினம், சங்கடஹர சதுர்த்தி என்று பெயர் பெற்றது.

ங்கடஹர சதுர்த்தி விரத மகிமையை பல்வேறு நூல்கள் விளக்குகின்றன.

மாசி மாதம்- தேய் பிறையில்... செவ்வாய்க் கிழமையுடன் கூடி வரும் சதுர்த்தி திதி துவங்கி ஒரு வருட காலம் விதிப்படி விரதம் அனுஷ்டிக்க வேண்டும்.

இந்த விரதத்தை துவங்கும் நாளன்று, சூரியன் உதிப்பதற்கு ஐந்து நாழிகைக்கு முன்பே உறக்கத்திலிருந்து எழுந்து விதிப்படி சங்கல்பம் செய்து புண்ணிய நதியில் நீராட வேண்டும்.

பிறகு, சிவ சின்னங்களை அணிந்து கொண்டு

விநாயகரை தியானிக்க வேண்டும்.

விநாயகரின் ஓரெழுத்து, ஆறெழுத்து மந்திரங்களில் ஏதாவது ஒன்றை... இவற்றை அறியாதவர்கள்,

விநாயகரின் புனித நாமங்களை அன்று முழுவதும் இடைவிடாமல் ஜபிக்க வேண்டும். உபவாசம் இருப்பதே மேல். அன்று இரவு உறங்குவதும் கூடாது.

விநாயக புராணத்தைப் பாராயணம் செய்வது நல்லது.

இவ்வாறு இந்த அரிய விரதத்தை மன உறுதியோடு ஓராண்டு காலம் கடைப்பிடித்தால், இன்னல்கள் அகலும். செல்வம், கல்வி மற்றும் செல்வாக்கு ஓங்கும். கூன்- குருடு போன்ற குறைபாடுகள் நீங்கி நலம் பெறலாம். கடன்தொல்லை, நோய், பகை முதலானவை அகன்று நலமுடன் வாழலாம். இதுவே சங்கடஹர சதுர்த்தியின் சாரம்.

அங்காரகனால் துவக்கப்பட்ட சங்கடஹர சதுர்த்தி விரதமும், காலம் காலமாக அனுசரிக்கப் பட்டு வருவதை பல புராணங்கள் வாயிலாக அறிகிறோம்.

விப்ரதன் என்ற வேடன் முற்கல முனிவரிடம் கணேச மந்திர உபதேசம் பெற்று ஆயிரம் ஆண்டுகள் தியானித்தான். அதன் பலனாக 'புருசுண்டி' என்ற பெயரு டன், விநாயகரை குருவாகக் கொண்டு ஞானோபதேசம் பெற்று முக்தி அடைந்தான். அவன் அனுஷ்டித்தது சங்கடஹர சதுர்த்தி விரதம்.

அரசன் கிருதவீர்யன், அத்ரி முனிவரிடம் இந்த விரதத்தை உபதேசமாகப் பெற்று புத்திரப்பேறு எய்தி மகிழ்ந்தான். சூரசேனன் எனும் அரசன், இந்திரன் வாயிலாகக் கேட்டு சங்கடஹர சதுர்த்தி விரதம் ஏற்று முக்தி அடைந்தான்.

பெற்ற அன்னையையே கொலை செய்த 'புதன்' எனும் அந்தணன், குஷ்ட நோயால் பீடிக்கப்பட்டான். இவன் மேல் இரக்கம் கொண்ட சூரசேன மகாராஜா... அந்தணனுக்கு, கணபதி மந்திரம் உபதேசித்து, சங்கடஹர சதுர்த்தி விரதம் ஏற்குமாறு பணித்தார். அதன்படியே செய்து நோய் நீங்கி பல்லாண்டு வாழ்ந்து முடிவில் முக்தி அடைந்தான் அந்தணன் புதன்.

சங்கடஹர சதுர்த்தி உருவான கதை!
சங்கடஹர சதுர்த்தி உருவான கதை!

கீர்த்திகள் பெற்ற செவ்வாய் கிரகத்துக்கு- அங்காரகனுக்கு, உஜ்ஜயினியின் (அவந்தி நகரம்)

வட எல்லையில் அவன் தோன்றிய இடத்திலேயே ஒரு திருக்கோயில் எழுப்பப்பட்டுள்ளது. இந்தக் கோயிலின் கருவறைக் கடவுள் மங்கள்நாத் என்பர். மங்களகரமான உருவம் கொண்டவர் என்று பொருள்!

'அங்காரகன், சிவந்த மேனி, மார்பில் செம்மலர் மாலை துலங்க அழகிய திருமுடி தரித்து நான்கு திருக்கரங்களுடன் திகழ்பவன். வலது திருக்கரங்களில் ஒன்று அபயம் அருள மற்றொன்றில் சக்தி ஆயுதம். இடது திருக்கரங்களில் கதாயுதமும் சூலமும் திகழ்கின்றன. மேஷ வாகனம் கொண்ட இவன், சிம்ம வாகனத்திலும் காணப் பெற்றவன். இவனுக்கு மாலினி, சுசீலினி என்று இரு மனைவியர். எட்டுக் குதிரைகள் பூட்டிய பொன் தேரில் பவனி வரும் திருக்கோலம் கொண்டவன்' என்று அங்காரகனை வர்ணிக்கிறது ஒரு நூல்.

ஆனால் உஜ்ஜயினி

மங்கள்நாத் ஆலயத்தில், 'பிண்டி' எனப்படும்... சிவலிங்கம் போன்ற அருவுருவமே உள்ளது. இதையே அங்காரகனின் திருவுருவமாகப் பாவித்து வழிபடுகின்றனர்.

அங்காரகன் கடுந்தவம் இயற்றி, கணேசர் தரிசனம் பெற்ற புனித இடத்தை, உஜ்ஜயினியின் தென் மேற்கில் இன்றும் காணலாம். 'ஜவாஸியா' எனும் கிராமத்திலுள்ள இந்த புனித இடத்தில் விநாயகருக்கு ஓர் ஆலயம் உண்டு. உஜ்ஜயினியில் உள்ள ஆறு கணபதி ஆலயங்களில் இதுவே சற்றுப் பெரியது.

விஸ்தாரமான பிராகாரத்துடன் திகழும் ஆலயத்தில் சந்நிதிக்கு எதிரில் யாக சாலை உள்ளது. இங்கு பக்தர்களால் தினமும் ஹோமங்கள் நடத்தப்படுகின்றன. பிராகாரத்தில், ஆழ்கிணறு ஒன்றைக் காணலாம். இதை, 'பாணகங்கா தீர்த்தம்' என்கிறார்கள். இங்கு, புளிய மரமே ஸ்தல விருட்சம்!

சங்கடஹர சதுர்த்தி உருவான கதை!

இங்குள்ள கணபதி உருவம் அங்காரகனால் பிரதிஷ்டை செய்யப்பட்டது என்கின்றனர். ஆனால் சிலையின் வடிவமைப்பை ஆராய்ந்தால், சுயம்பு மூர்த்தியே என்ற முடிவுக்கு வரலாம். இந்த மூர்த்தியின் திருநாமம்- சிந்தாமணி விநாயகர். பாற்கடலில் கிடைத்த சிந்தாமணியைப் போன்று கேட்பதைத் தருபவர் என்பதால் இந்தப் பெயர்.

சங்கடஹர சதுர்த்தி துவங்கப்பட்ட புனித இடத்தில் குடிகொண்டிருக்கும் இந்த சிந்தாமணி விநாயகர் ஓர் அரிய வரப்ரசாதி என்பதில் ஐயமில்லை!

பெண்கள் மட்டுமே கடைப்பிடிக்கும் பிள்ளையார் விரதம்!

சங்கடஹர சதுர்த்தி உருவான கதை!

செவ்வாய் பகவானுடன் தொடர்புடைய விநாயகர் வழிபாடு மற்றொன்றும் உண்டு! தமிழக கிராமப்புறங்களில் பெண்கள் மட்டுமே அனுசரிக்கும்- 'செவ்வாய் பிள்ளையார் கும்பிடுதல்!' என்ற விரதமே அது.

தை மற்றும் ஆடி மாத செவ்வாய்க்கிழமைகளில் துவங்கி... 'இத்தனை செவ்வாய்' என்று நிச்சயம் செய்து, இந்த நோன்பை ஆரம்பிப்பார்கள். இந்த விரதத்தால் ஏற்படும் சப்தம்கூட ஆண்களுக்கு கேட்கக் கூடாது என்பது நியதி! தப்பித்தவறி இந்த விரத நைவேத்தியத்தை ஆண்கள் உட்கொண்டாலோ, நைவேத்திய பதார்த்தத்துக்காக மாவு இடிக்கும் சத்தத்தைக் கேட்டாலோ அவர்களது உடல்நலம் பாதிக்கப்படும் என்பது நம்பிக்கை! எனவே, ஆண்கள் யாவரும் உறங்கச் சென்ற பிறகு அல்லது அவர்கள் வெளியூர் சென்றிருக்கும் நேரத்தில் இந்த வழிபாட்டைக் கடைப்பிடிக்கிறார்கள்.

ஊர் பெண்கள் அனைவரும் ஆடவர் இல்லாத ஓர் இல்லத்தில் ஒன்று கூடுவர். ஒவ்வொருவரும் தங்களது பங்காகக் கொண்டுவந்த நெல்லை உரலில் இட்டு இடித்து அரிசியாக்குவர். பிறகு உமி களைந்து, அரிசியை மாவாக்கி வைத்துக் கொள்வர். இந்த மாவுடன், சிறு சிறு தேங்காய்த் துண்டுகளும் இளநீரும் கலந்து நன்றாகப் பிசைந்து 'அடை'களாகத் தட்டுவர். பிறகு வாணலியில் வைக்கோலைப் பரப்பி, அதன்மேல் அடைகளை வைத்து வேக வைப்பார்கள். மாவில் உப்பு சேர்க்க மாட்டார்கள். இதுவே நிவேதனம்!

பிறகு, கனாக்கன்றின் (பசுவின் ஆண் கன்று) சாணத்தால் பிள்ளையார் பிடித்து, புங்கை இலை, புளிய இலை மூலம் சுழல் அமைத்து, அதன் நடுவே சாணப் பிள்ளையாரை எழுந்தருளச் செய்வார்கள். தொடர்ந்து, விநாயக புராணத்தை ஒருவர் எடுத்துச் சொல்வார். கதை முடிந்ததும் தூப- தீப ஆராதனைகள் காட்டி, அடைகளை நிவேதனம் செய்து வழிபட்ட பிறகு, அந்தப் பிரசாதத்தை குழுமி இருப்போருக்கு விநியோகிப்பர். அதை அங்கேயே உண்ண வேண்டும்!

இதையடுத்து புங்கை- புளியந் தழைகள், வைக்கோல் மற்றும் பூஜை மலர்கள் ஆகியவற்றை, பொழுது விடிய நான்கு நாழிகைக்குள்ளேயே எடுத்துச் சென்று ஆற்றில் விட்டு விடுவார்கள். அத்துடன், பிள்ளையாரையும் வழியனுப்பிவிட்டு, நீராடிய பின்... வாய் பேசாமல், புனித மஞ்சள்- குங்குமம் அணிந்து, வெற்றிலை சுவைத்து அவரவர் இல்லத்துக்குச் செல்வர். அன்று முழுவதும் எவருக்கும் காசு- தானியம் தரமாட்டார்கள்.

ஆயுள் வளர்க்கும் அருகம்புல்!

'மூதணிடம்' என்றால் என்ன தெரியுமா? அருகம்புல்லின் வேறு பெயரே இது. இதன் அசல் பெயர் 'அகரம் புல்'!

ஒரு சந்தர்ப்பத்தில், மிகுந்த வெப்ப தேகம் கொண்ட அனலாசுரன் என்ற அசுரனை விழுங்கினார் விநாயகர். இதனால் அவரது திருமேனி தகித்தது! இந்த உஷ்ணத்தைப் போக்க விநாயகரை குளிர்வித்த பெருமைக்குரியது அருகம்புல். இதனால், அவருக்கே உரிய பத்ரமாக(தழை) திகழ்கிறது அருகம்புல். 'தூர்வா' என்றும் சிறப்பிக்கப்படும் அருகம்புல் கொண்டு கணபதியை பூஜிப்போர், நிலையான ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் பெறுவர்!

- கீதா சுப்பிரமணியன், சென்னை- 91

- படங்கள் பொன். காசிராஜன்  
 
                            
      
அடுத்த கட்டுரைக்கு