Published:Updated:

ஞானம் தரும் முருகன்... செல்வம் தரும் குபேரலிங்கம்!

வெற்றி தரும் விசாக நாயகன்!

ஞானம் தரும் முருகன்... செல்வம் தரும் குபேரலிங்கம்!

வெற்றி தரும் விசாக நாயகன்!

Published:Updated:
ஞானம் தரும் முருகன்... செல்வம் தரும் குபேரலிங்கம்!
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கில உலகுக்கும் குருவாகத் திகழும் சிவபெருமான்தானே, மகன் கந்தக் கடவுளுக்கும் குருவாக இருக்கவேண்டும்? ஆனால், தந்தை ஈசனுக்கே குருவாகத் திகழ்கிறார், மைந்தன் முருகப் பெருமான்!

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் இருந்து சங்கரன்பந்தல் வழியே நாகப் பட்டினம் செல்லும் சாலையில், சுமார் 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது பெரம்பூர் எனும் கிராமம். பிரம்பு மரங்கள் அடர்ந்த பகுதியாகத் திகழ்ந்ததால், இந்த ஊர் பிரம்பூர் எனப்பட்டு, பிறகு பெரம்பூர் என்றானதாகச் சொல்வர். கோயிலின் ஸ்தல விருட்சமும் பிரம்பு மரம்தான்! இங்கே, சுமார் ஆயிரம் வருடங்கள் பழைமை வாய்ந்த அற்புதமான ஆலயம் அமைந்துள்ளது. இந்தத் தலம், புராண காலத்தில், பிரம்ம மங்களபுரம் என அழைக்கப்பட்டதாம்!

சிவாலயங்களில் பொதுவாகவே சிவனாரின் சந்நிதிக்குப் பின்புறத்தில், வடமேற்குத் திசையில் முருகப்பெருமானுக்கு சந்நிதி அமைந்திருக்கும். ஆனால் இந்தத் திருத்தலத்தில், கர்ப்பக்கிரகத்தில் முருகப் பெருமான் காட்சி தர, அவரின் சந்நிதிக்குப் பின்புறத்தில் வடமேற்கு திசையில், ஸ்ரீகுபேர லிங்கேஸ்வரர் அருள்பாலிக்கிறார். இங்கே அம்பாளின் திருநாமம்- ஸ்ரீஆனந்தவல்லி அம்பாள்.

ஞானம் தரும் முருகன்... செல்வம் தரும் குபேரலிங்கம்!

அழகுக்குப் பெயர் பெற்ற முருகக்கடவுளின் அழகுத் திருக்கோலத்தைச் சொல்லவும் வேண்டுமா, என்ன?! ஆறு முகங்களுடன், மயில் மீது அமர்ந்தபடி, வருகின்ற பக்தர்களுக்கு அருளும் பொருளும் அள்ளித் தருகிறார் கந்தக் கடவுள். இங்கே இன்னொரு சிறப்பு... பொதுவாக, முருகப் பெருமானின் வாகனமான மயிலின் கழுத்து வலப் பக்கமாகத் திரும்பியபடி இருக்கும். இந்தத் தலத்தில், இடப் பக்கமாக கழுத்தைத் திருப்பிப் பார்த்தபடி காட்சி தருகிறது மயில். மயிலுக்கு முருகப்பெருமான் உபதேசம் செய்த தலம் என்கிறது ஸ்தல புராணம். ஸ்ரீதெய்வானை, தனிச் சந்நிதியில் காட்சி தந்தருள்கிறாள்.

ஞானம் தரும் முருகன்... செல்வம் தரும் குபேரலிங்கம்!

ஸ்ரீபிரம்மாவுக்கு மட்டுமின்றி, மயிலுக்கும் ஞானம் தந்து அருளியதால், இந்தத் தலத்து முருகப்பெருமான், ஞான குருவாக இருந்து நமக்கு கல்வி- ஞானத்தை வழங்கி அருள்கிறார் என்கின்றனர், பக்தர்கள்.

தனக்கு வரங்கள் பல தந்தருளிய சிவனாரைவிட பலம் பெற வேண்டும் என கர்வத்துடன் திரிந்த தட்சன் யாகம் நடத்தியதும், அதற்கு மகள் தாட்சாயினியையும் மருமகன் சிவபெருமானையும் அழைக்காமல் அவமதித்ததும் தெரியும்தானே?! அப்போது, அந்த யாகத்தில் பிரம்மா மற்றும் தேவர்கள் கலந்து கொண்டனர். இதனால் சிவ சாபத்துக்கு ஆளானார் பிரம்மா. பிறகு, 'பூலோகத்தில் தீர்த்தம் ஸ்தாபித்து, சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட, தோஷம் விலகும்’ என விமோசனமும் அளித்தார் ஈசன்.

இதையடுத்து, பூலோகம் வந்த பிரம்மா, வழுவூர் எனும் தலத்துக்கு வந்து, அங்கே தீர்த்தக் குளத்தை உண்டாக்கினார். அதில் தினமும் நீராடிவிட்டு, சிவபூஜை செய்தார்; கடும் தவம் மேற்கொண்டார். மேலும், இந்தத் தலத்துக்கு அருகில் உள்ள தற்போதைய பெரம்பூர் தலத்துக்கும் வந்த பிரம்மா, ஞானகுருவாகத் திகழும் கந்தக் கடவுளை வணங்கினார்; சாப விமோசனம் பெற்றார் என்கிறது ஸ்தல புராணம். இதனால் இந்தத் தலம், பிரம்ம மங்களபுரம் என அழைக்கப்பட்டது.

ஸ்ரீகுக தட்சிணாமூர்த்தி, ஸ்ரீகுக சண்டிகேஸ்வரர், ஸ்ரீதுர்கை முதலானோரும் அருள்பாலிக்கின்றனர். வெள்ளிக்கிழமைகளில், ராகு கால வேளையில், ஸ்ரீதுர்கைக்கு எலுமிச்சை மாலை சார்த்தி வணங்கினால், மனக் குழப்பங்கள் தீரும்; எதிரிகள் தொல்லை ஒழியும் என்பர். தை மாதந்தோறும் ஸ்ரீதுர்கைக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் திருவிளக்கு பூஜையும் நடைபெறுகின்றன.

ஞானம் தரும் முருகன்... செல்வம் தரும் குபேரலிங்கம்!

இங்கே ஸ்ரீஆதி விநாயகர், ஸ்ரீமகாவிஷ்ணு, ஸ்ரீஐயப்பன், ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர், ஸ்ரீஆனந்தவல்லி, ஸ்ரீமகாலட்சுமி, ஸ்ரீபிரம்மா ஆகியோரும் காட்சி தருகின்றனர்.

இங்கேயுள்ள அருள்மிகு இடஞ்சுழி விநாயகர் கொள்ளை அழகு! இந்த விநாயகரின் விக்கிரகத்தை, ராஜராஜசோழன் பிரதிஷ்டை செய்து, முருகப்பெருமானையும் சிவபெருமானையும் வழிபட்டுச் சென்றதாகச் சொல்கிறது ஸ்தல வரலாறு. கோயில் வாசலில் ஸ்ரீவிநாயகரும் இடும்பனும் தனித்தனி சந்நிதிகளில் அருள்பாலிக்கின்றனர்.

அந்தக் காலத்தில் மிளகு வியாபாரம் செய்த செட்டியார் ஒருவர், முருகப்பெருமானின் பேரருளையும் ஸ்ரீகுபேர லிங்கேஸ்வரரின் பேரருளையும் பெற்று செழிப்புடன் வாழ்ந் தாராம். எனவே, அவர் இந்த ஆலயத்துக்கு ஏராளமான திருப்பணிகள் செய்துள்ளார். இங்கே, அவருக்கும் சிலை வைக்கப்பட்டுள்ளது.

பெரம்பூர் ஸ்ரீமுருகப்பெருமான் ஆலயத்துக்கு வந்து வழிபட்டால், திருமணத் தடை நீங்கும்; குழந்தை பாக்கியம் கிடைக்கப்பெறுவர். கடன் தொல்லையில் இருந்து விடுபடுவர் என்கின்றனர் சுற்றுவட்டார ஊர்களைச் சேர்ந்த பக்தர்கள்.

வைகாசி விசாகம் இங்கே விசேஷ திருவிழா! அன்றைய நாளில், மயிலாடுதுறை போன்று அருகில் உள்ள முக்கிய ஊர்களில் இருந்து, பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள் காவடி எடுத்து வந்தும், பால்குடம் எடுத்து வந்தும், பாலபிஷேகம் செய்தும், சந்தன அலங்காரம் செய்தும் முருகப்பெருமானையும் ஸ்ரீகுபேரலிங்கேஸ்வரரையும் தரிசித்து அருள்பெற்றுச் செல்கின்றனர்.

- க.ராஜீவ்காந்தி
படங்கள்: கே.குணசீலன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism