ஸ்தல வழிபாடு
தொடர்கள்
Published:Updated:

பால்குடம் எடுத்தால் மகிழ்ச்சி பொங்கும்!

குழந்தை வரம் தந்த குமரன்!

பால்குடம் எடுத்தால் மகிழ்ச்சி பொங்கும்!
##~##
மு
னிவர்களுக்கெல்லாம் குருவாகத் திகழ்ந் தவர், மாமுனி எனப் போற்றப்பட்டவர் அகத்தியர். அவர் தவம் செய்து பூஜித்து வணங்கிய தலம் 'குரு இருந்த மலை’ எனப்பட்டு, பிறகு காலப்போக்கில் மருவி, குருந்தமலை என்றாகிப் போனது!

கோவையில் இருந்து காரமடை செல்லும் வழியில், சுமார் 36 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது குருந்த மலை. கோவையில் இருந்து பஸ் வசதி உண்டு.

பிள்ளைச் செல்வம் இல்லாத ஏக்கத்தில் தவித்துக் கலங்கினார் கங்காதர செட்டியார் எனும் அன்பர். 'என் வீட்டில் குழந்தைச் செல்வத்தைக் கொடு; உனக்குக் கோயில் கட்டிக் கும்பிடுகிறேன்’ என மனமுருகிப்

பிரார்த்தனை செய்தாராம். அதன்படி, செட்டியாரின் வீட்டில் தொட்டில் சத்தம் கேட்க... முருகப்பெருமானின் கருணையை நினைத்துச் சிலிர்த்தவர், அகத்தியர் வழிபட்ட இடத்தில், ஆலயம் எழுப்பினார். குழந்தை வரம் தந்த முருகப்பெருமான் என்பதால், ஸ்ரீகுழந்தை வேலாயுத ஸ்வாமி என்றே திருநாமம் சூட்டப் பட்டதாகச் சொல்கிறது ஸ்தல வரலாறு.  

பால்குடம் எடுத்தால் மகிழ்ச்சி பொங்கும்!

அருணகிரிநாதர், இந்தத் தலத்து முருகக் கடவுளைப் போற்றிப் பாடியுள்ளார். சுமார் 1,200 வருடப் பழைமை வாய்ந்த ஆலயம்; சஷ்டி நன்னாளில், இங்கு வந்து பிரார்த்திப்பது நலம். குறிப்பாக, 13 சஷ்டிகளில் இங்கு வந்து வேண்டினால், மிளகு மற்றும் எலுமிச்சைப் பழம் பிரசாதம் தரப்படுகிறது. இதனை உட்கொள்ள... விரைவில் பிள்ளை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். அதேபோல், தங்களின் வயதுக்குத் தக்கபடி, (20 வயது எனில் 20 திரு விளக்குகள்) மூலவரின் முன்னே விளக்குகள் ஏற்றி வழிபட்டால், கேட்டது கிடைக்கும்; நினைப்பது நிறைவேறும் என்கின்றனர், பக்தர்கள்!

தைப்பூச நன்னாளில் திருக்கல்யாண வைபவம் அமர்க்களப்படும். இங்கேயுள்ள சுனைக்கு அருகில் குகை போன்ற பகுதியில் ஒளிந்து கொள்வாளாம் ஸ்ரீவள்ளி. அவளைக் கண்டுபிடித்து ஸ்ரீபார்வதிதேவி இழுத்து வந்து குமரக்கடவுளுக்குத் திருமணம் செய்து வைப்பாளாம். இதைக் காண அருகில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் திரண்டு வருவார்களாம்.

இங்கே... வைகாசி விசாகத் திருநாள், விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம், ஸ்ரீகுழந்தை வேலாயுதருக்கு ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து வருவர்; விசாக நாளில், பால்குடமேந்தி முருகக் கடவுளை வழிபட்டால், வியாபாரம் செழிக்கும்; இல்லறம் சிறக்கும் என்பது நம்பிக்கை.

ஸ்ரீவிசாலாட்சி சமேத ஸ்ரீவிஸ்வேஸ்வரர், ஸ்ரீராஜகம்பீர விநாயகர், சப்த கன்னியர், ராஜ நாக லிங்கம், ஸ்ரீவீரஆஞ்சநேயர் ஆகியோரும் இங்கே அருள்பாலிக்கின்றனர்.

வைகாசி விசாகத்தில், ஸ்ரீகுழந்தை வேலாயுதரை வணங்குவோம்; வளம் பெறுவோம்!

- ம.பிருந்தா
படங்கள்: வி.ராஜேஷ்